எஸ்.எல். நாணு-மாயா வித்தகர்

மேஜிக் நிபுணர் அஸ்வத்தாமனை எங்கள் சேனலுக்காக பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்.
”உங்க மேஜிக்கோட முக்கிய ஐட்டமே பெட்டிக்குள்ள இருக்கிற பெண்ணோட முகம், உடம்பு, இடுப்புன்னு எல்லாம் தனித்தனியாப் பிரிச்சுக் காட்டறீங்க.. மறுபடியும் ஒண்ணா சேர்க்கறீங்க.. இதனாலதானே உங்களுக்கு “மாயா வித்தகர்” பட்டம்”
“நான் பண்றதெல்லாம் கண்கட்டுவித்தை. தந்திரத்தால ஜனங்களை ஏமாத்திட்டிருக்கேன். உண்மைல அதோ என் குருநாதர்தான் மாயா வித்தகர்”
சுவரில் தொங்கிய படத்தில் தலைவிரி கோலத்தில் பரதேசி, நெற்றியில் பட்டை.. குங்குமம். கையில் சுருட்டு. முக்கியமாக நீண்ட கழுத்துக்குமேல் முகத்தைப் படுக்க வைத்திருந்தார்.
“குருநாதர் பண்ணாத வித்தை இல்லை. முகத்தைப் கழுத்துல படுக்க வெச்சுப்பார். கை இருக்கற இடத்துல காலைக் கொண்டு வருவார். நெஞ்சை முதுகுப் பக்கமாத் திருப்புவார்”
“சார்.. இதெல்லாம்”
“நம்பமுடியாதுதான்.. ஆனா உண்மை. எனக்கும் அந்த வித்தையைக் கத்துக் கொடுத்திருக்கார்”
“அப்படின்னா இப்பப் பண்ணிக் காட்டுங்க”
“முடியாது. எனக்குக் கத்துக்கொடுத்தாலும் நான் அதை பிரயோகப்படுத்தக் கூடாதுன்னு குருநாதர் சத்தியம் வாங்கியிருக்கார்”
“நிச்சயமா நம்ப முடியலை”
அப்போது அஸ்வத்தாமனுக்குப் பின்னால் ஒரு உருவம் தோன்றி மறைந்தது.
சுவரில் தொங்கும் படத்தில் இருப்பதுபோல் முகத்தை கழுத்தில் படுக்க வைத்து கோரமாக சிரித்தபடி
அஸ்வத்தாமன் மர்மமான புன்னகையுடன்
“இப்ப நம்பறீங்களா?”
வியற்க விறுவிறுக்க அங்கிருந்து வெளியேறினேன்.
ஸ்டுடியோவில் விடியோ பதிவைப் போட்டுப் பார்த்தோம்..
அஸ்வத்தாமனுக்குப் பின்னால் வெறுமையாக இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன