கஸ்துரி குருசாமி/குழந்தையும் தெய்வமும்

குழந்தை வேலனுக்கு ஐந்து வயது. அன்று விநாயகர் சதுர்த்தி. வேலனின் அம்மா கொழுக்கட்டை, பொரி உருண்டை எல்லாம் செய்து சாமி முன்பு வைத்து விட்டு சாம்பிராணி போட தணல்எடுக்கப் போனாள்.வேலன் பூஜைஅறையில் இருந்தான்.வீட்டில் எப்பொழுதும் பழம் வைத்தால் கூட எலி தின்றுவிடும். இன்று கொழுக்கட்டையும் பொரி உருண்டையும் விநாயகர் சாப்பிடும் முன் அவரின் அருகில் இருக்கும் எலி சாப்பிட்டு விடக்கூடாது என பார்த்துக் கொண்டே இருந்தான். அம்மா சமையல் அறையில் இருந்து “வேலா கொழுக்கட்டை,பொரி உருண்டையில் கை வைக்க கூடாது. பிள்ளையார் சாப்பிட்ட பின்பு தான் சாப்பிடணும்” என்றாள்.

அவனுக்கோ பிள்ளையாருக்கு வைத்ததை எலி சாப்பிடக்கூடாது என்ற பயம்.அம்மா சாம்பிராணியும் போட்டு விட்டாள். அப்பா குளித்துவிட்டு வருவதற்காக காத்திருந்தனர். கொஞ்ச நேரம் போனதும் அவனுக்கு கொழுக்கட்டை சாப்பிடும் ஆசை மிகவே,ஒரு கொழுக்கட்டையை எடுத்து ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டான்.மெதுவாக பாத்ரூம் போவது போல் சென்று,அதை அவசர அவசரமாக சாப்பிட்டான். அப்பொழுது அவன் அப்பா ” சாமி கும்பிட வா” என அழைத்தார். அவன் வாயில் கொழுக்கட்டையின் துகள் இருக்க, அம்மாவுக்கு வந்ததே கோபம். ” சாமி சாப்பிட்ட பின்பு தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லியும் எடுத்தாயா? “என சூடான தோசை கரண்டியை கோபத்தில் கையில் வைத்து விட்டாள்.சிறு குழந்தை தானே! பின் பூஜை அறை சென்று “பிள்ளையாரப்பா மன்னித்துக்கொள். அவன் செய்தது தவறுதான் “என கன்னத்தில் போட்டுக் கொண்டு கற்பூர த்தை ஏற்றி பிள்ளையாருக்கு காட்ட வரும் போது, சூடம் அணைந்து விட்டது.மூன்று முறை முயன்றும் இதே கதி. வருத்தத்தோடு படுத்துவிட்டாள். குழந்தை செய்த தப்பு க்கு  தண்டனை என்று நினைத்தாள். நல்ல தூங்கிவிட்டாள் கனவில் பிள்ளையார் வந்து “உன் மகன்கொழுக்கட்டையை எலி கடித்து விடக்கூடாது என காவல் காத்தான். குழந்தை தானே ஆசை பக்தியை மிஞ்சி விட்டது. ஆனால் அறியா குழந்தை செய்வதற்கு நீ கொடுத்த தண்டனையால் தான் நான் கற்பூரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவனுக்கு சூடு போட்டது என் கையில் எரிகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என உனக்கு தெரியாதா?” என கேட்கவும், ஓடிப் போய் வேலனை அனைத்து கொண்டு  அழுதாள்.

224 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன