
சியாட்டிலிலிருந்து இந்த குக்கிராமத்துக் கோவிலுக்கு நான் வந்ததற்குக் காரணம் அப்பா.
“சின்ன வயசுல பண்ணின தப்பு மனசை அரிச்சிக்கிட்டே இருக்கு. கிராமத்துச் சிவன் கோவில்ல ஸ்தம்ப விநாயகருக்கு நீ போய் அபிஷேகம் பண்ணி, வஸ்திரம் சாத்தி, அஞ்சு பௌன்ல தங்க சங்கிலி போட்டு விசேஷ பூஜைக்குக் கண்டிப்பா ஏற்பாடு பண்ணுவேனென்று சத்தியம் பண்ணு”
சத்தியம் பண்ணினேன்.
”ரொம்ப சக்திவாய்ந்த விநாயகர். இதையெல்லாம் அவர் ஏத்துக்கிட்டாத்தான் நான் பண்ணின தப்பை அவர் மன்னிச்சிட்டார்னு அர்த்தம்”
சொல்லிக்கொண்டே அப்பா கண்ணை மூடி எட்டு மாதங்கள் ஓடிவிட்டன. என்ன தப்பு பண்ணினார் என்று அப்பா கடைசிவரை சொல்லவில்லை.
அது உண்மையிலேயே குக்கிராமம்தான். அங்கு அப்பா குறிப்பிட்டிருந்தவர்களில் சிலர் ஊரைவிட்டுப் போயிருந்தார்கள். சிலர் உலகத்தைவிட்டேப் போயிருந்தார்கள்.
“ஸ்தம்ப விநாயகர்”
அங்கிருந்த புதியவர்களுக்குத் தெரியவில்லை.
“கோபுர வாசல்ல இஷ்டசித்தி விநாயகர் இருக்கிறார். எனக்குத் தெரிஞ்சு “ஸ்தம்ப விநாயகர்” இந்தக் கோவில்ல இல்லை”
இளைஞரான அர்ச்சகர் தீர்மானமாகச் சொன்னார்.
நிச்சயமாக அப்பா இந்தக் கோவிலில்தானே சொன்னார்.
ஒருவேளை அப்பாவை மன்னிக்க ஸ்தம்ப விநாயகர் தயாராக இல்லையோ. அதனால்தான் மறைந்திருக்கிறாரோ.
யோசனையுடன் பிரகாரத்தில் உட்கார்ந்து தூணில் சாய்ந்துகொண்டேன்.
அந்த ஸ்தம்பத்தின் மேல் பகுதியில் பொலிவிழந்த நிலையில் விநாயகர் அமர்ந்திருப்பது எனக்குத் தெரியவருமா?
131
