பாரதியின் வழியினிலே!/ம.சக்திவேலாயுதம்

முற்போக்கு சிந்தனைகளை
முதன்மையாய் முழங்கிய
முண்டாசுக்கவிஞன் நீ!

காக்கைக்குருவிகளை
தன்னினமாய் அடையாளங்கண்ட
உன்னதக்கவிஞன் நீ!

ஓடி விளையாடச்சொல்லி
குழந்தைகளை ஊக்கமாக்கிய
ஊக்கக்கவிஞன் நீ!

அச்சம் தவிரென்றும்
ரெளத்திரம் பழகென்றும் உரைத்த
தைரியக்கவிஞன் நீ!

பண்டமாற்றை பக்குவமாய்
தன் வரிகளில் காட்டிய
ஒற்றுமைக்கவிஞன் நீ!

ஏழைக்கு எழுத்தறிவித்தலை
புண்ணியமென புகழ்ந்த
கல்விக்கவிஞன் நீ!

தேமதுரத்தமிழோசை
உலகெல்லாம் பரவிட உழைத்த
உலகக்கவிஞன் நீ!

பெண்கள் புதுமைப்பெண்களாய் வலம்வர புதுமை செய்த
புதுமைக்கவிஞன் நீ!

மகாகவியே…
உனைத்தொடாத கவிஞர்கள் இல்லை..
தொடாதவர்கள்
கவிஞர்களே இல்லை!

சபதம் கொள்கிறேன்..
இனி உம் வரிகளோடும்..
உன் வழிகளோடும்..
அடியேன் இனி என்றென்றும்
உம் நெருப்பு விழிகளோடும்!