
தலையில் கூடை நிறைய மண் பொம்மைகள். இடுப்பில் அவளுடைய
உயிருள்ள பொம்மை, கையில் சூலத்துடன்.
அவள் வருவதையே பைக்கில் அமர்ந்தபடி அவன் கவனித்துக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே விலை கேட்பதுபோல் அவளுக்குத் தெரியாமல் கூடையில்
பொம்மைகளுக்கு அடியில் வெடிகுண்டைத் திணித்திருந்தான்.
அவன் கையில் ரிமோட். அதிலிருக்கும் சிவப்பு பட்டனைத் தட்டினால்
அந்தப் பகுதியே சின்னாபின்னமாகிவிடும்.
அடுத்த வாரம் நடக்கவிருந்த திருவிழா ஏற்பாடுகளை நிறுத்த
சில கயவர்களால் ஏவப்பட்டவன்.
சரியான சந்தர்ப்பத்துக்காகக்கா காத்திருந்தான்.
அவள் இடுப்பிலிருந்த குழந்தை கையிலிருந்த
சூலத்தை வேகமாக ஆட்டியது.
தெருவின் மத்தியப்பிரதேசத்துக்கு அவள் வந்து விட்டாள்.
ரிமோட் பட்டனைத் தட்ட அவன் தயாரானான்.
குழந்தை சூலத்தை இன்னும் வேகமாக ஆட்டியது.
அவன் விரல் சிவப்பு பட்டனை நோக்கி நகர.
பின்னாலிருந்து கட்டுப்பாடில்லாமல் வந்த லாரி
பைக்கில் மோத அவன் தூக்கி எறியப்பட்டான்.
அவன் கையிலிருந்த ரிமோட் இன்னொரு பக்கம் பறந்து
அதிலிருந்த பேட்டரி சிதறி விழுந்தது..
ரத்த வெள்ளத்தில் கிடந்தவனைப் பார்த்து பொம்மை விற்பவள் பதறி வந்து
இடுப்புக் குழந்தையையும் கூடையையும் கீழே இறக்கினாள்.
கூடையிலிருந்து பாட்டில் தண்ணியை அவன் முகத்தில் தெளித்தாள்.
கைத்துணியைக் கிழித்து ரத்தம் கசிந்து கொண்டிருந்த நெற்றியில் கட்டினாள்.
அவன் மெதுவாகக் கண் திறந்து பார்த்தான்.
எதிரே சூலத்துடன் குழந்தை,
பொம்மைக் கூடையில் இருந்த காளி அவதாரம் எடுத்து
எதிரே நிற்பதுபோல் அவனுக்குப் பட்டது.
கண்களை நீர் மறைக்க கைகளைக் கூப்பி மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்.
151
