
தேன்மொழி பத்திரமாக பொம்மைகளை கூடையில் கிடத்தினாள். நாலைந்து பொம்மைகளை மட்டும் தலை வெளியே தெரியும் படி கூடையில் நிறுத்தினாள். அவள் பார்த்து பார்த்து செய்தவை. அவள் உணர்வுடன் கலந்தவை. அவள் அவற்றை பொம்மைகளாக பார்க்கவில்லை.
“கிருஷ்ணா உன் ராதை வந்திருக்கேன் பாரு”
” செட்டியார் ஐயா இன்னைக்கு வியாபாரம் பலமா? ஆச்சி கூட சேர்ந்து உட்காருங்கள்”
“ஏன் ராமா உனக்கே நியாயமாயிருக்கா?”
” சுட்டிப் பையன்களா லவகுசா கூடைக்குள்ளையாவது உங்கப்பா அம்மாவோட சேர்ந்திருங்க”
பொம்மைகளுடன் பேசும் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் 3 வயது கண்மணி.
தேனு கண்மணியை இடுப்பில் தூக்க, கண்மணி சூலம் பொம்மையை தூக்கிக் கொண்டாள்..
கூடையுடன் தெருவில் இறங்கி நடந்தாள். கண்மணி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
” ஏ சூலம் பொம்மை! நீ காளி கையில தானேயிருந்த. யாராவது கெட்ட மாமா வந்தா அப்படியே சதக்கு சதக்குன்னு குத்தி அம்மாவ காப்பாத்திடு. அதான் உன்னை தினமும் எடுத்துக்கிட்டு வரேன் தெரிஞ்சுக்கோ”
திகைத்துப் போனாள், குழந்தை பொம்மையுடன் பேசுவதை பார்த்து..
அவர்களைப் பொறுத்தவரை அவை பொம்மையல்ல உணர்ச்சிமிக்க உறவுகள். உற்சாகம் பிறக்க..
“பொம்மை வாங்கலையோ பொம்மை” ஓங்கி ஒலித்தது தேனுவின் குரல்.
