முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/தலைக்கு மேல் தெய்வம்

கல்கத்தா நகரில் குமார்டுலியில் இருந்து பெரிய பஜார் வரைக்கும் லட்சுமி தினமும் நடக்க வேண்டும்.
தலையில் பொம்மைக் கூடை, இடுப்பில் மகள் குட்டி மீனா.
அன்று புரட்டாசி மழைக்குப் பிறகு தெருவெல்லாம் சேறு. கூடையில் ஆறு துர்கை சிலைகள்,
நேற்று முழுக்க வண்ணம் பூசியவை. ஒவ்வொன்றும் விற்றால் தான் வீட்டில் அரிசி வாங்க முடியும்.
மீனா திடீரென்று கேட்டாள், “அம்மா, நீ ஏன் அழுத மாதிரி இருக்கே?”
காலையில் கணவன் குடித்துவிட்டு அடித்துவிட்டுப் போனது குழந்தைக்குத் தெரியாது.
லட்சுமி பதில் சொல்லவில்லை. கூடையை இன்னும் இறுக்கமாகப் பிடித்தாள்.
தலையில் இருப்பது வெறும் மண் பொம்மை அல்ல,
அது தன் குடும்பத்தின் வயிறு என்று அவளுக்குத் தெரியும்.
நடக்க நடக்கக் கூடை கனத்தது. இடுப்பில் மீனா தூங்கி வழிந்தாள்.
லட்சுமிக்கு கை வலித்தது, கால் வலிக்கவே நின்றாள்.
அப்போது மீனா தூக்கம் கலைந்து போய்,
கூடைக்குள் இருந்து விழுந்த ஒரு சிறிய சூலத்தை எடுத்துக் கையில் பிடித்துக் கொண்டாள்.
பக்கத்தில் நின்ற ஒருவர் கிண்டலாகச் சொன்னார்: “என்னம்மா, துர்கையைத் தலையில தூக்கிட்டுப் போறியே
அவ உன் வறுமை போக உதவ மாட்டாளா?”
லட்சுமி நின்றாள். மீனாவைப் பார்த்தாள்.
கையில் சூலத்துடன் இருந்த கோலத்தைப் பார்த்தாள்.
“அவ என் தலைக்கு மேல இல்லைங்க, என் இடுப்பில இருக்கா” என்று சொல்லிவிட்டு நடந்தாள்.
அந்த நிமிடம், கூடையின் பாரம் குறைந்தது போல் இருந்தது.

152

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன