
பட்டம்மா வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தாள். அவள் கணவன் கணேசன் தினக்கூலி என்றாலும் அவளுக்கு ஒரு குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டான். அந்த தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. அப்பு என்ற ஒரு பூனைக் குட்டி வளர்த்தார்கள்.
பாழாய் போன கொரோனா வந்து கணேசன் மரணப்படுக்கையில் இருக்கும்போது, அவனைப் பார்க்க வேண்டும் என மருத்துவரிடம் கெஞ்சினாள். ஆனால் அவர் தூரத்தில் இருந்து பாரும்மா கிட்டே போனால் உனக்கும் வரும் என்று எச்சரித்தார். கணேசனிடம், ‘உன் மனைவியை எச்சரித்து அனுப்பிவிட்டேன்,’ என்று கூறினார். கணேசன் ஒரு பேப்பரும் பேனாவும் தர முடியுமா என்று கேட்டான். நர்சிடம் அவன் கேட்டதைக் கொடுங்கள் என்று கூறினார்.
கணேசன் மறுநாள் இறந்துவிட்டான். ஆனால் அவன் கையில் ஒரு கடிதம் இருந்தது.அதில், “என் செல்ல பட்டுவுக்கு, நான் போனாலும் நீ யாரிடமும் கையேந்தாதே, உதவி என ச் சென்றால் உறவுகள் உன்னை ஒதுக்கி விடுவர். என் பெட்டியில் பணம் வைத்திருக்கிறேன். வீட்டு வாசலில் இட்லிக் கடை போடு நம் செல்ல மகன் அப்பு உனக்குத் துணையாக இருப்பான் “என்று எழுதியிருந்தான். இன்றும் கணவன் நினைவு வந்து அவள் கண்கலங்கினால் அப்பு என்ற அந்த பூனைக் குட்டி அவள் மடியில் அமர்ந்து அவளை மகிழ்விப்பான். கவலை மறந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பாள்.
145
