
“இன்னைக்கு என்ன சீதாம்மாவை காணோம்?”
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை பரிமளம், துப்புரவு பணியில் இருந்த கோமளாவை கேட்டார்.
“நானும் இப்போ தான் கவனிக்கிறேன் டீச்சர். வேலையை முடிச்சிட்டு தான் போய் பார்க்கனும்”
சீதாம்மா எனும் சீதை, அந்த பள்ளி வாசலில் அமர்ந்து தின்பண்டங்கள் விற்பாள்.
பிறவியில் இருந்தே இரு கண்களிலும் பார்வை இல்லை. திருமணம் ஆகாததால், பெற்றோர் மறைவுக்குப் பிறகு தனிக்கட்டை தான்.
ஆனால் மனம் நிறையத் துணிச்சல் உண்டு. நடப்பது எல்லாம் ‘அடி’ கணக்கு தான்.
நாணயங்களை தடவி பணப் பரிமாற்றம் செய்வாள். காகித பணம் என்றால் சொல்வதை நம்பி வாங்கிக் கொள்வாள்.
பள்ளிக்கூட நாட்கள் அனைத்திலும், பிள்ளைகள் வருகிறதோ இல்லையோ, சீதாம்மா கண்டிப்பாக வருவாள். பரிமளம் டீச்சருக்கு அவள் தான் ஆகச்சிறந்த ‘மன ஊக்கி.’
சீதாம்மா வீட்டுக்கு கோமளா செல்லும்போது வாசலிலேயே கூட்டமும், பேச்சுக் குரலும் இருந்தது.
சீதாம்மா அவளது வீட்டிலேயே உரல் மீது அமர்ந்திருந்தாள், பிணமாக.
இரவிலேயே மரணித்திருக்க வேண்டும் என்று ஊரார் பேசிக் கொண்டார்கள்.
அவள் வளர்த்த பூனை,
‘என்மக்குமில்லாமல் இன்றைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்?’ எனப் புரியாமல் கிடந்தது.
(121 வார்த்தைகள்)

என்னைக்குமில்லாமல் இன்றைக்கு மட்டும்..