பிணக்கு /அழகியசிங்கர்

கதை : 57


எனக்கும் அவனுக்கும் பிணக்கு ஏற்பட்டுப் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.  ஆனால் அவனை ஒருமுறையாவது சமாதானம் செய்ய வேண்டுமென்று நான் நினைப்பதுண்டு.  அது முடியாது என்று தெரியும். ஒரு காலத்தில் நானும் அவனும் நெருக்கமாகப் பழகிக் கொண்டிருந்தோம்.  பத்தாண்டுகளாக அவனுடன் விலகல் ஏற்பட்டு விட்டது. அதற்குக் காரணம் கல்பனா.   நானும், அவனும் ஒரே சமயத்தில் அவளைக் காதலித்தோம்.  ஆனால் உண்மையில் அவள் மீது அவனுக்கு ஆசை என்பது எனக்குத் தெரியாது. எனக்கு இது தெரிந்தபிறகு அவளை விட்டு விலக நினைத்தேன்.  அவனுக்கு கல்பனாவை விட்டுக் கொடுத்து விட்டேன்.  ஆனால் கல்பனாவிற்கு அவனைப் பிடிக்கவில்லை. திருமணம் செய்துகொண்டால் உன்னுடன்தான்..அப்படி நடக்காவிட்டால் நான் வேற யாரையாவது பார்த்துக் கொள்கிறேன் என்றாள். எனக்கு ஒரே திகைப்பு.  பல வருடங்கள் பழகிய நண்பனா? கல்பனாவா? என்று யோசித்தேன். உண்மையில் அவன் மீது கல்பனாவிற்கு விருப்பமில்லை.  அதனால் எனக்குப் பிடித்த கல்பனாவைத் திருமணம் செய்து கொண்டேன். அவனுக்கு அதிர்ச்சி.  துரோகம் செய்து விட்டதாக நினைத்தான்.  என் திருமணத்திற்கு அவன் வரவில்லை.  கல்பனாவும் நானும் அவனைப் பற்றி  ஒருமுறை கூட அதன் பின்  பேசவே இல்லை.