மொட்டைக் கோபுரம்/ நாகேந்திர பாரதி

வவ்வால் கழிவுகளால் மெத்தென்று இருக்கும் அந்த இருட்டுப் படிக்கட்டுகளில் ஏறிப் போகிறான். அந்த மொட்டை கோபுரத்தின் இடிந்துபோன இரண்டாம்நிலை வரை ஏறும்போது நினைவுகள் இடறும் . லேசான வெளிச்சத்தில் தெரியும் சுவரில் கீறிய காதலர்கள் பெயர்கள். அதில் அவன் பெயரும் இருந்தது. அவள் பெயரு ம்தான். தரைப் பகுதியில் அங்கங்கே சிதறிக் கிடக்கும் பீடித் துண்டுகள். வயதின் குழப்பங்களுக்கு வடிகாலாய் அந்த இடம் இன்னமும் இருப்பது புரிகிறது. அந்தக் கடைசி நிலையின் குறுகிய வாசலில் நின்றபடி வெளியே பார்த்தான்.

மாலை வெயிலில் வெளியில் தெரியும் பஸ் ஸ்டாண்ட். நடு மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாகக் காத்து வாங்க படுத்துக்கிடக்கும் பெருசுகள் . வெள்ளரிக்காய் பேரம்பேசும் சின்னப்பெண் . புறப்படத் தயாராகி ‘புர்’ என்று துடிக்கும் பச்சைப்பஸ். டீ யை உயரத் தூக்கி அடித்து ஆற்றும் மீசைக்காரர்.

பூட்டு தொங்கும் பக்கத்து பள்ளிக்கூடக் கதவு தனியாக ஏதோ ஏக்கத்தோடு நிற்கும். அந்தப் பள்ளிக்கூடத்தில் தானே அவனும் அவளும் படித்தார்கள் . ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. அவன் நினைப்பைத் தடை போட்டது கீழே கேட்ட கிசு கிசு சப்தம். அந்த படிக்கட்டுகளில் இருந்து .

‘நாளைக்கு முக்கு ரோட்டுக்கு வந்திடு’.
‘அப்பாவை நினைச்சா பயமா இருக்கு’
‘தைரியமாக இரு. மதுரைக்கு போயி எல்லாம் சமாளிச்சுக்கலாம்’.
சிணுங்கல் சத்தம். வளையல் சத்தம்.
‘ போகணும் .பூசைக்கு நேரமாச்சு’
அவர்கள் பேச்சு கண்டாமணி சத்தத்தில் கரைந்து போகிறது.

இவர்கள் ஓடிப் போவதற்கு சாட்சியாக இன்னமும் இந்த மொட்டைக் கோபுரம் இருக்கிறது. இளமையின் வேகமும் முதுமையின் மூர்க்கமும் ஆணிவேராக அந்த ஊரில் இன்னமும் கிடப்பது புரிகிறது. பழைய நினைவுகள் மறுபடியும் .

‘மதுரைக்குப் போயி சமாளிச்சுக்கலாம். ‘
‘ பயமா இருக்கு.
‘நான் மதுரைல நண்பர்களிடம் சொல்லி வச்சாச்சு எல்லாம் தயாரா இருக்கு ‘
‘ கண்மாய் கரையின் கடைசி ஓரத்தில் சைக்கிளோடு காத்திருப்பேன். பக்கத்து ஊரு ரயில்வே ஸ்டேஷன் போய் மதுரை ரயில் ஏறிடலாம். ‘

‘ எனக்கு நீங்க வேணும் . அதை விட உங்க உயிர் . அப்பா விட மாட்டாரு.’
‘ பயப்படாத சமாளிச்சுக்கலாம். இனிமேலும் என்னாலே தாங்க முடியாது ‘.
‘எனக்கு பயமா இருக்கு. உங்க உயிர் முக்கியம்.’

மறுநாள் அவன் காத்திருந்தான் அவள் வரவில்லை அன்று சென்றவன் ஐந்து வருடங்கள் கழித்து மறுபடியும் அந்த ஊருக்கு. அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்க்கும் ஆசையோடு,. வாழ்க்கையின் கஷ்டங்களைப் புரிந்த உணர்வோடு. தெளிந்த மனதோடு.

தாடி மீசையோடு முகம் மறைந்து இருந்த அவனைப் பார்த்தவர்கள் யாருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. மாலை மங்குகிறது. கோபுரத்தை விட்டு இறங்குகிறான். இறங்கும்போது முகத்தில் மோதும் வௌவால் ..

கோபுரத்தை விட்டு விலகி கோவில் பாதையில் நடக்கும் போது காலில் குத்தும் நெருஞ்சிமுள். சிற்பம் செதுக்க விட்ட நீண்ட கருப்பு கல்லில் அமர்ந்து முள்ளை எடுக்கும்போது உற்றுப் பார்த்தபடி அந்த மொட்டைக் கோபுரம். அது முற்றுப்பெறாமல் நின்றதற்கு ஏதேதோ சரித்திர காரணங்கள். அதில் ஒன்று இளையராணி ஓடிப்போனது. அதனால் நின்றுபோன மொட்டை கோபுரம் .ஓடிப் போகின்ற காதலர்க்கு எல்லாம் சாட்சியாக நிற்பது போல்.

தூரத்தில் பூக்கூடைகளோடு பூஜைக்கு விரையும் பெண்கள் கூட்டம். அதில் நாளைக்கு ஓடிப்போகப் போகும் அவளும் உண்டா . ‘வேண்டாம் பெண்ணே காதல் உணர்ச்சியை விட பசியின் உணர்ச்சி பெரியது. பசியின் உணர்ச்சியை விட பழியின் உணர்ச்சி கொடியது.’

அன்று இரவு பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சத்திரத் திண்ணையில் படுத்துத் தூங்கிவிட்டு மறுநாள் அதிகாலை தெருவில் நடக்கிறான். அவள் வீடு இருக்கின்ற அந்தத் தெரு. வழக்கம்போல் வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருப்பாளா . அவள் தான். குளித்து முடித்து தலையில் துண்டை இறுக்கக் கட்டியபடி குனிந்தபடி கோலம் போட்டுக் கொண்டிருந்தது அவளேதான் .

சற்று விலகியே நடந்து அவளைப் பார்த்தபடி செல்கிறான். அந்த வீட்டின் வாசற்படியில் ஒரு குழந்தை .திடீரென அது அழுகிறது. நிமிர்ந்த அவள் எதிரே அவன் முகம். தாடி மீசையோடு இருக்கும் அவன் முகம் நிச்சயம் அவளுக்கு அடையாளம் தெரிந்திருக்காது. அவள் குழந்தையைத் திரும்பிப் பார்த்து ஏதோ அதட்டுகிறாள்.

‘வாடையா இருக்கு. போ. போயிடு உள்ளே .’
. குழந்தை அழுகையை நிறுத்துகிறது மறுபடியும் திரும்புகிறாள் . அந்த மஞ்சள் பூசிய மாநிற முகத்தில் நெற்றி வகிட்டில் குங்குமம் பளிச்சிடுகிறது. அவள் குனிந்தபடி கோலத்தைத் தொடர்கிறாள். அவளைக் கடந்து போகிறான் அவன் சற்றே நிம்மதியுடன். குனிந்திருந்த அவள் நிமிர்ந்து பார்க்கிறாள் , அவள் கண்களில் பளபளப்பு. குழந்தை மறுபடி அழுகிறது.

5 Comments on “மொட்டைக் கோபுரம்/ நாகேந்திர பாரதி”

Comments are closed.