பாரதியின் குயில் பாட்டு /முபீன்

தோழி மதுமிதா, பாரதியின் இலக்கியம் குறித்து எழுதுமாறு கேட்டபோது பாரதியின் குயில் பாட்டு பற்றி எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. பாரதியின் குயில்பாட்டு பற்றி நீண்ட நாட்களாக எழுதும் ஆர்வம் இருந்தது. அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி இது….

குயில் பாட்டின் பொருளைக் கீழ்க்கண்ட மூன்று வகையில் காணலாம்:


1.முருகன்-வள்ளி கதையின் மறுவடிவம் போல் இருப்பது


2.பெண் விடுதலையின் மற்றொரு தளத்தைக் காட்டுவது


3.மெடாஃபிக்ஷன் எனப்படும் ஆசிரியர் கதாபாத்திரம் ஆகும் சுயவரலாற்று தன்மையைக் கொண்டிருப்பது
…………..
வருவாய் மயில்மீ தினிலே
வடிவேலுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
முருகா முருகா முருகா

-பாரதி
என்று பாரதி முருகனைப் பாடும் பாடல்களையும் இங்கு நினைவுகூற வேண்டும். குயிலி என்ற பெயர் கொண்ட வேடர் இனத்துப் பெண்ணை சேர இளவரசன் காதலித்து கந்தர்வ மணம் புரிகிறான் என்பது அடிப்படையான கதைதான் குயில்பாட்டில் இருப்பது.

குறவர் இனப் பெண்ணை முருகன் மணந்தான் என்ற புராணத்தின் அடிப்படையிலிருந்து எடுத்தாளப்பட்ட கதை போல் குயில் பாட்டு இருக்கிறது. இந்தப் பெண்ணின் தந்தை பெயர் வீரமுருகன் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப் பெண்ணின் முற்பிறவிக் கதையைக் கூறும் முனிவர் குறுமுனி எனும் அகத்தியரை நினைவுபடுத்துகிறார்.

குறவர்கள் குறி சொல்பவர்களாக இருப்பார்கள். முனிவர் அந்தப் பெண் பாத்திரத்திற்கு நடக்கப் போவதைச் சொல்வதாகக் குயில் பாட்டில் வருகிறது. முருகனின் தமிழ்ப் பற்றுக்கு உதாரணமாக, கவிஞனாக பிறவி எடுத்திருக்கும் சேர இளவரசனைக் கண்டுகொண்டு அவனிடம் அந்தப் பெண் தஞ்சம் அடைவதைக் கொள்ளலாம்.

குயிலின் பாட்டைக் கேட்டு காதலுற்ற கவிஞரை நான்கு நாட்கள் கழித்து அதே சோலைக்கு வரச் சொல்லி குயில் கூறுகிறது. இது சங்க இலக்கியத்தை ஒத்த களவின் கூறுகளைக் கொண்டிருப்பதாகக் கொள்ளலாம். அந்தக் களவின் கூறு, முருகன்-வள்ளி திருமணத்திற்கு முன்பான களவை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குயில் பாட்டில் பாடப்பட்டது போல் இருக்கிறது. மேலும் குயில் பாட்டின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் இதில் வேதாந்தமும் இருக்கக்கூடும் என்பதை ஆய்ந்தறிந்த ஆய்வுகள் சில ஜீவாத்மாவாகிய குயில் பரமாத்வாகிய கவிஞனைச் சேர்வது குறித்து இந்த இலக்கியம் பேசுவதாகக் குறிப்பிடுகின்றன.

ஆனால் இது முருகன்-வள்ளி கதை போல் இருக்கும் போது கவிதைத் தன்னிலையை நாடி வரும் பாத்திரம் போல் குயில் எனும் பெண் பாத்திரமும் கவிஞன் எனும் பாத்திரமாக இருப்பது முருகன் எனும் கடவுள் பாத்திரம் எனும் கற்பனை இங்கு பொருந்துவது போல் தோன்றுகிறது. வேதங்களில் குறிப்பிடப்படும் ஜீவாத்மா-பரமாத்மா என்ற இணைதான் இங்கு முருகன்-வள்ளி வடிவமெடுத்திருப்பது போலவும் இதனை வாசிக்க முடிகிறது.

அடிப்படையில் இளவரசன், வேடர் குலப்பெண்ணை மணத்தல் என்பது மேல்-கீழ் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது என்பதைக் காட்ட எழுதப்பட்ட கதைதான். அதுதான் முருகன்-வள்ளி புராணம் வழியாகக் கிடைக்கும் ஒரு பொருளாகவும் இருக்கிறது.