
அப்பாடா!! என்னோட கடமை,பொறுப்பு எல்லாம் முடிஞ்சுது. ‘பசங்க ரெண்டு பேரையும் கரை சேர்த்துட்டேன். வாழ்க்கையில் செட்டில் ஆயிட்டாங்க. இனி நான் நிம்மதியா ஓய்வெடுத்து பொழுது கழிச்சிடுவேன்’ என்று சொல்லிக்கொண்டே சுவரோரம் இருந்த நாற்காலியில், கையை தலைக்கு மேலே தூக்கி வைத்து கொண்டார் சபாபதி. ‘கமலா ஒரு டம்ளர் காப்பி கொண்டு வா’ என்று குரல் கொடுத்தார். க்கும்… ஆம்பளைங்க நீங்க மட்டும் பொறுப்பு முடிஞ்சு ஓய்வு எடுத்துப்பீங்க ஆனா, பொம்பளைங்க நாங்க கடைசி வரைக்கும் சமையல் கட்டுலயே கடக்க வேண்டியதுதான்; எங்களுக்கு ரிட்டயர்மென்டே கிடையாது. என்ன பண்றது ? என்று அலுத்துக் கொண்டே காபி போடச் சென்றாள் கமலா.
டமால்.. சத்தம்!
ஐயோ, அம்மா! என்று அலறினாள் கமலா. நாற்காலியில் இருந்து எழுந்து வேகமாகப் போனான் சபாபதி .கமலா கீழே விழுந்து கிடந்தாள். காப்பி டம்ளர் கீழே ஒரு பக்கம் உருண்டு ஓடியது. தூக்க முடியாமல் மெதுவாகத் தூக்கி வந்து அந்த நாற்காலியில் கமலாவை உட்கார வைத்தார் சபாபதி. ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கு என்று பெரிய கட்டுப்போட்டுவிட்டு ‘மூன்று மாதத்திற்கு எழுந்து நடக்க முடியாது’என்றார் டாக்டர் .சபாபதியின் கடமை மீண்டும் தொடர ஆரம்பித்தது.
125
