
சித்து பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். படபடவென இறக்கை அடித்துக் கொண்டு வந்து விழுந்தது ஒரு பறவை. அதற்கு வயிற்றில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. சித்து பார்த்துவிட்டு தன் அம்மாவிடம் ஓடிச் சென்று நடந்ததைக் கூறினாள்.
அம்மாவும், அவளும் அதற்கு மருந்து தடவி சாப்பாடு,தண்ணீர் கொடுத்தார்கள். ரணம் ஆறும் வரை அந்தப் பறவை அங்கேயே அடைக்கலமாகத் தங்கியது.
சித்துவும்,ஆசையுடன் தடவிக் கொடுத்து தினமும் உணவு கொடுப்பாள். அவள் அந்த பறவைக்கு ‘சிக்கு’ எனப் பெயரிட்டாள். சிக்குவும் அவளுடன் விளையாட ஆரம்பித்தது. அவள் கை மேல், தோலின் மேல் ,தலைக்கு மேல் என ஏறி உட்கார ஆரம்பித்தது. ஒரு வாரம் ஆயிற்று. ரணம் முற்றிலும் சரியாகிவிட்டது.
அன்று காலை சித்து தூங்கி எழுந்தவுடன் ஓடிச் சென்று சிக்குவை பார்த்தாள். அது இறகை படபடவென சந்தோஷத்துடன் அடித்துக் கொண்டு உலகைப் பார்க்கப் பறந்து சென்றது. சித்துவுக்கு ஒரே வருத்தம். அன்று முழுவதும் அவளுக்கு எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மிகுந்த கவலையுடன் மாலை 6:00 மணிக்கு அந்த பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். சட்டென்று தலைக்கு மேல் ஏதோ தட்டியது தொட்டுப் பார்த்தால் சிக்கு . ஆஹா! சந்தோஷம்தான் சித்துவுக்கு.
127
