
- .
வேளச்சேரியிலிருந்து பாரிமுனை செல்லும் பஸ். காலையில் அலுவலக நேரத்தில் குறிப்பிட்ட பஸ்ஸூக்கு ஒன்றாக பயணிப்பர் சிலர். நான் 8.40 பேட்ச். தினமும் பயணிப்பதால் நிறைய பேசுவோம். நானும் அவளும் நெருக்கமானதும் அதே பஸ்ஸிலேதான். திடீரென முன்னால் போன 45B ப்ரேக் போட, எங்க ஓட்டுனரும் போட, அவள் தடுமாறி என் மீது சரிய, பழைய சினிமா காதல் ஒன்று அங்கு முளை விட்டது. தினமும் பேச ஆரம்பித்தோம். கமல், ரஜினி, ஸ்ரீ தேவி, ஸ்ரீ ப்ரியா, காவஸ்கர் எல்லோரும் எங்கள் நாக்கில் நடனமாடினர். கடற்கரையில் மாங்காய் போட்ட சுண்டல்கள் வாயில் அரைபட்டன.
இப்படியே ஏழெட்டு மாதங்கள். திடீரென எங்கள் பஸ்ஸில் அவளைக் காணோம். வீடும் பூட்டிக் கிடந்தது. அவளது தந்தைக்கு வேலை மாற்றம் வந்திருக்கலாம். கடற்கரை மணலில் படுத்து ஏமாற்றத்தை விழுங்கப் பார்த்தேன். வீட்டில் கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்க ஆரம்பித்தனர். ஆர்வமேயில்லை. சொந்தக்காரர் ஒருவர் ஒரு ஜாதகமும் படமும் அனுப்பியிருந்தார். அவளேதான்.
“என்ன தூக்கம் எட்டு மணி வரைக்கும்?”
” இன்னிக்கு லீவுதானேடி”
” பீச் வரைக்கும் ரயில் விட்டிருக்கானே, சீசன் டிக்கெட் சீப்பாருக்கும். இனி 21Lல போகவேண்டாம். ரயில்லேயே போங்க” என்றாள் அவள்.
” அங்கேயும் பெண்கள் வருவார்களே” கண்ணடித்தேன். முறைத்தாள்.
(125 வார்த்தைகள்)
