பாலசாண்டில்யன்/விரிசல்


கண்ணன் வீட்டிற்குள் நுழையும்போதே ஒருவித படபடப்பு அவனைத் தொற்றிக்கொண்டது. காதலித்த காலத்தில் அவன் காத்திருந்த அந்த வாசல், இன்று ஒரு ‘விசாரணைக் கூண்டு’ போலத் தோன்றியது.

​”இவ்வளவு நேரமா? உங்களுக்கு எப்பவும் ஆபீஸ்தான் முக்கியம். நான் இங்கே ஒருத்தியா செத்துப்பிழைக்கிறேன்!” கவிதாவின் குரலில் அன்பு மறைந்து, அதிகாரமே ஒலித்தது.

கண்ணன் கையில் இருந்த மல்லிகைப்பூவை மெல்ல மேசை மீது வைத்தான். அவளது சோர்வை அவன் உணர்ந்தான்; ஆனால் அவனது உழைப்பை அவள் ஒருமுறை கூட அங்கீகரிக்கவில்லை என்பது அவனைச் சுட்டது.

​”கவி, இன்னைக்கு மீட்டிங்…” என அவன் ஆரம்பிக்கும் முன்பே, “எப்பவும் இதே சாக்குதான்” என அவள் இடைமறித்தாள். அவன் மனதிற்குள் வலி பரவியது. தான் வெறும் பணத்தேவைக்காகவும், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு இயந்திரமாகவும் மட்டுமே அவளுக்குத் தெரிகிறோமோ? அவனது சோர்வுக்கும் ஆசைகளுக்கும் அங்கே இடமில்லை.

​எதைச் சொன்னாலும் அது ‘குற்றச்சாட்டாக’ மாற்றப்படும் என உணர்ந்த அவன், மெல்ல பால்கனிக்குச் சென்றான். காதலித்த கவிதா எங்கே? இப்போது இருப்பவள் எனது எதிரியா? அவன் கண்கள் கலங்கின. இந்த மௌனம் ஒரு பெரிய விரிசலின் தொடக்கம் என்பதை அவன் உணர்ந்தான்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன