
வெறுத்து ஒதுக்கும் சப்பாத்தியும்
வாயில் வைக்க வழங்காத
வெல்லம் சேர்த்த கத்திரிக்காயும்
இரவெல்லாம் புளித்த ஏப்பம் தரப் போகும்
ராஜ்மா பருப்பும்
பிடிக்காத இனிப்பொன்றையும்
புன்சிரிப்புடன் உண்டு
காணாத
தயிருக்கான ஏக்கத்தை
மறைத்துக் கொண்டு
சாப்பாடு பிரமாதம் என
சிலாகித்து கிளம்பினேன்
வட நாட்டு மேலதிகாரியின் வீட்டிலிருந்து
என்னுடன் மென்னகையுடன்
என் மனைவியும்
வீட்டில் நான் படுத்தும் பாட்டை
சுட்டாமல் சுட்டிக் கொண்டு

நான் டில்லியில் வசித்த ஆரம்ப காலங்களில் இதே அனுபவத்தை அடைந்திருக்கிறேன். ஆனால் ஐந்தாறு மாதங்களிலேயே சப்பாத்தி பழகிவிட்டது மட்டுமின்றி, அதன் வெவ்வேறு சைட் டிஷ்களும் அத்துபடியாகிவிட்டன. அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான குளிர்காலத்தில் அரிசியும் சாம்பாரும் வயிற்றில் இறங்காமல் சப்பாத்தியே கதி என்றாகிவிட்டது.
அந்தந்த ஊரின் தட்பவெப்பத்திற்கு ஏற்ற உணவைத் தான் அந்தந்த ஊரில் உண்ணவேண்டும் என்பதுதான் இயற்கை விதி என்று புரிந்து கொண்டேன்.