
வீட்டுத் தரகர் இந்த வீட்டைக் காட்டியதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் வைத்திருக்கும் போஸ்டல் காலனி வீட்டில் எல்லா அறைகளிலும் புத்தகங்கள். வீடை இடித்துக் கட்டப் போகிறார்கள். பிரமோட்டர் எல்லோரையும் காலி செய்து தரும்படி தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார். அவனுக்குத்தான் புத்தகங்களை எடுத்துக் கொண்டு எங்கே போவது என்று கவலை வந்துவிட்டது.
தரகர் காட்டிய வீடு அவனுக்குப் பிடிக்கவில்லை. மேலும் அவன் சேகரித்து வைத்திருக்கும் எல்லாப் புத்தகங்களையும் இங்கே கொண்டு வர முடியாது. வீட்டு வாசலில் துணைக்கு ஒரு கருப்பு நாய் வேறு. கடிக்க விழைகிற மாதிரி முறைத்துப் பார்க்கிறது. இந்த வீடா கிடைத்தது போஸ்ட் பாக்ஸ் வைக்க. தரகரிடம் சொல்லி விட்டான். இந்த வீட்டுக்கு வர முடியாதென்று.
பிரமோட்டர் அவனிடம் போன் செய்து சொன்னார் : “கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க சார். 18 மாசத்துல கட்டிக் கொடுத்திடுவேன், சார். வெறுமனே புத்தகம்தானே வெச்சுக்கப் போறீங்க.”
“முடியாது சார். நான் புத்தகங்களை எடுத்துக்கொண்டு எங்கே போவேன்.”
“புத்தகங்கள்தானே,
சார்.. எங்க வீட்டுல கூட வெச்சுக்கிறேன்.”
“என்ன விளையாடறீங்களா.. காலி செய்ய முடியாது.. நீங்க வீடு கட்டித் தரவும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம்.”
தலையில் கையை வைத்துக்கொண்டு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தார் பிரமோட்டார்.
