
பாழடைந்து போன அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகர். ஒரு காலத்தில் கலகலவென தாத்தா, பாட்டி ,மாமா ,அத்தை, சித்தப்பா, சித்தி,பிள்ளைகள் என
நிறைய ஆட்கள் இருந்த வீடு.
இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது. கீழே படுத்திருந்த கருப்பு நாய் தலையை தூக்கிப் பார்த்தது.. தன் நிம்மதிக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற பயத்தில்.
தன் அத்தை மகள் அகல்யாவை காதலித்தது, வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒளிந்து ஒளிந்து பேசியது, இனிய காதல் நினைவுகள் அவன் மனதை நிறைத்தன.
இறுதியில் வந்த சொத்து தகறாறு குடும்பங்களை பிரித்து வெவ்வேறு இடங்களில் போட்டது.
ஏனோ பல நாட்களாக உறுத்திய நினைவு, இந்த வீட்டை ஒரு முறை பார்க்க வேண்டும்.
கை தன்னிச்சையாக தபால் பெட்டியை திறக்க உள்ளே ஒரு கடிதம்..
அன்புள்ள அத்தான்
இந்த கடிதம் கிடைக்கும்போது எந்த நிலையில் எந்த மூலையில் இருப்போமோ..என் மனதில் உன் நினைவின் வாசம் எப்போதும் மணம் வீசிக் கொண்டிருக்கும்.
-அகல்யா
சுதாகரின் கண்களில் கண்ணீர் வழிய, கானல் நீராய்ப் போன காதலுக்கு சாட்சியாய் அந்த வீடு மௌனமாய் நின்று கொண்டிருந்தது.
வார்த்தை எண்ணிக்கை: 118
