
பிளைதுபாய் விமானத்தில் பயணம் செய்த 174 பயணிகள் காப்பாற்றப்பட்ட விஷயம் தான் நேற்று முதல் என் மனமெங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறது. அது தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு செய்தியையும் வீடியோவையும் பார்த்து மாளவில்லை.
இந்திய பைலட் ஸ்மித் மச்சார், தனக்கேற்பட்ட தாக்குதலையும் அதனால் உருவான அதிர்ச்சியையும் வலியையும் பொருட்படுத்தாமல், காக்பிட் கதவைத் திறந்துவிட்டு, பயணிகள் அனைவரையும் பாதுகாப்பதற்கான வழியை உருவாக்கியிருக்கிறார். விமானத்துக்குள் போய் கோ-பைலட்டை இழுத்துப் பிடித்து, அவரை செயலற்றவராக்கிய நபரும் அவரது குடும்பமும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசும் வீடியோ பல விஷயங்களைச் சொன்னது.
அதேபோல், அதே விமானத்தில் பயணம் செய்த ரஷ்ய மற்றும் உக்ரைன் நாட்டு பைலட்டுகள் தான், விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து, செளதி அரேபியாவில் தரையிறக்கியதாகச் சொல்லப்படுகிறது.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். உலக அரசியலில் நேரடி எதிரிகளாகப் பார்க்கப்படும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய மற்றும் உக்ரைன் பைலட்டுகள். அவர்களுடன் ஓர் இந்திய பைலட், ஓர் இஸ்ரேலியப் பயணி என அனைவரும் எந்தவித அரசியல் வேறுபாடும் இன்றி ஒன்றாக இணைந்து 174 உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதையே இது காட்டுகிறது.
ஸ்மித் மச்சார், மோசமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
இந்த விமான அதிர்ச்சி சம்பவத்துக்குப் பின்னே இருக்கும் உலக அரசியல் கவலை அளிக்கிறது.
நான் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். உலகில் இருப்பதிலேயே மிகப் பெரிய பிரச்னை, இந்தக் ‘கருத்துகள்’தான். அதுவும் ஒருசில கருத்துகளை நம்ப ஆரம்பித்து, அதையே முழுமுதற் உண்மை என்று ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிய அபாயம்!
புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, எழுதிய ‘டெமன்ஸ்’ என்ற நாவலில் ஒரு வரி வரும், ‘நீ அந்த கருத்தை விழுங்கவில்லை, மாறாக அந்தக் கருத்து தான் உன்னை விழுங்கிவிட்டது’ (it was not you who ate the idea, but the idea that ate you).
தீவிரமான சில சித்தாந்தங்கள் மனித மூளையின் பகுத்தறியும் திறனை முடக்கி, அடிப்படை அனுதாபத்தையே அழித்துவிடும் அபாயம் கொண்டவை.
அந்தக் கோ-பைலட் என்ன கருத்து சார்ந்தவர் என்பது இனிமேல் விசாரணையில் தெரிய வரும். அதற்காக தான் எவ்வளவு தூரம் துணிந்திருக்கிறோம் என்பதை அவர் உணர்வாரா என்று தெரியவில்லை.
கருத்துகள் கண்ணை மட்டுமல்ல, மனசையும் மனிதாபிமானத்தையும் கூட மறைத்துவிடும் என்பதற்கு இந்த பிளைதுபாய் சம்பவமே சாட்சி.
