ஆர். வெங்கடேஷ்/நல்ல செய்தி உண்டா?


பெரும்பாலும் இந்த வகையான அழைப்புகள் இப்படித்தான் ஆரம்பிக்கும், “யூடியூப்ல பார்த்தேன், பி.எப். பென்ஷனை உசத்திட்டாங்களாமே? எப்போ வரும் சார்?” இந்தக் குரலில் லேசான நடுக்கம் இருக்கும், தளர்ச்சி தெரியும், அல்லது பரபரப்பு தென்படும்.
இன்னும் கொஞ்சம் பேர், “எனக்கு 86 வயசு ஆகுதுங்க. 90ல ரிட்டயர் ஆனேன். இன்னும் 885 ரூபாய் தான் பென்ஷன் வருது… 7500 ரூபாயா உசத்தி கொடுக்கச் சொல்லியிருக்காங்களாம். ஏதேனும் நல்ல செய்தி உண்டா சார்?” என்று விவரத்தோடு கேட்பார்கள்.
வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று அழைப்புகளேனும் இந்த பி.எப். பென்ஷன் உயர்வு பற்றிய நல்ல செய்திக்காக காத்திருக்கும் முதியோரது அழைப்புகளாகத் தான் இருக்கும். பெயர் சொல்ல மாட்டார்கள், ஊரோ, மாவட்டமோ சொல்லமாட்டார்கள்… இந்த அடையாளங்கள் எல்லாம் அவசியமே இல்லை என்பது போல், கோடானுகோடி பி.எப். ஓய்வூதியர்களின் பிரதிநிதிகளாக இவர்களது குரல் ஒலிக்கும்.
முதலில் இவர்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லி அலுப்பு ஏற்பட்டது. பல முறை இந்த விஷயத்தைப் பற்றி தினமலர் நாளிதழில் திங்கள்தோறும் வெளிவரும் எனது ‘ஆயிரம் சந்தேகங்கள்’ கேள்வி-பதில் பகுதியில் விளக்கமாகவும் எழுதிவிட்டேன். ஆனாலும், அழைப்புகள் நின்றபாடில்லை.
இது ஏன் இவ்வளவு பெரிய பிரச்னையாக இருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். மாநிலங்கள் அவையில் 2025 மார்ச் 31 அன்று, தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் கே. ஷோபா எழுத்துப்பூர்வமாக தெரிவித்த விவரங்கள் தான் இந்த விஷயத்தில் கிடைக்கும் சமீபத்திய தகவல்கள்.
அதாவது, நமது நாட்டில், மார்ச் 31, 2025 வரை, இந்த பி.எப். பென்ஷன் திட்டத்தில் (இ.பி.எஸ். 95) கிட்டத்தட்ட 5.39 கோடி பேர் பங்களிப்பு செய்து வருகின்றனர். இத்திட்டத்தில் இருந்து ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை, 81 லட்சத்து 48 ஆயிரத்து 490 பேர்.
இதில் 1,500 ரூபாய்க்கு குறைவாக ஓய்வூதியம் பெறுவோர் 49 லட்சத்து 15 ஆயிரத்து 416. அதாவது தோராயமாக 60 சதவிகிதம் பேர்.
இ.பி.எஸ் 1995 திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டு இருக்கும் மொத்த தொகை, தோராயமாக, 9.92 லட்சம் கோடி ரூபாய். இதில் இருந்து கிடைக்கும் வட்டியையும் இதர வருவாயையும் வைத்துத் தான் அரசு, அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பென்ஷன் தருகிறது. கடைசியாக 2023 – 24 நிதியாண்டில், இந்த மொத்த தொகுப்பில் இருந்து கிடைத்துள்ள வட்டி 58,668.73 கோடி, இதர வருவாய் 863.62 கோடி ரூபாய். அதாவது 5.91 சதவிகிதம் (தோராயமாக 6 சதவிகிதம்) வட்டியைத் தான் இந்த மொத்த தொகை ஈட்டித் தந்திருக்கிறது.
அனைவருக்கும் பென்ஷன் கொடுக்க இந்தத் தொகை போதாது என்பதால், மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 1.16 சதவிகித தொகையை தனது பட்ஜெட் மூலம் நேரடியாகத் தொழிலாளர்களின் ஓய்வூதியக் கணக்கில் செலுத்துகிறது. இந்த 1.16 சதவிகிதம் என்பது 11,144 முதல் 11,339 கோடி ரூபாய் வரை.
இப்போது விஷயத்துக்கு வருவோம். மேலே சொன்னது எல்லாம் அரசின் வரவு செலவு கணக்கு. ஆனால், ஓய்வூதியம் வாங்குவோர் கணக்கு வேறு. பல ஆண்டுகள் தனியார் துறையில், குறிப்பாக சிறு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றோர் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் 70, 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இவர்களிடம் உண்மையில் பெரிய சேமிப்பு இல்லை. அல்லது அந்தக் காலத்தில் இவர்களுக்கு சொந்தமாக சேமித்து வைத்துக்கொள்ள தெரியவில்லை. பி.எப். பென்ஷன் வரும் என்ற நம்பிக்கை இருந்திருக்கலாம்.
இப்போது அந்த பென்ஷன் தொகை பலருக்கும் 1,000 ரூபாயைக் கூட தொடவில்லை. “மாசாமாசம் மருந்து வாங்கக் கூட பத்த மாட்டேங்குது சார்,” என்ற ஒருவரது குரல் என் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தான் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று, இன்றைய விலைவாசி நிலவரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த பி.எப். ஓய்வூதியத்தை 7,500 ஆக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரை தான் ஒவ்வொரு முறை நாடாளுமன்றம் நடைபெறும்போதும் சமூக வலைத்தளங்களில் சுற்றி வரும். இதோ இந்த முறை இந்த பி.எப். பென்ஷன் தொகை உயரப் போகிறது, உயரப் போகிறது என்று ஷார்ட்ஸிலும், ரீல்ஸிலும் பரபரப்பைக் கூட்டுகிறார்கள்.
ஒன்று, அந்த விஷயமே, நாடாளுமன்ற விவாதத்துக்கு வருவதில்லை. அல்லது அதைப் பற்றி கேள்வி எதுவும் எழுப்பப்படுவதும் இல்லை. ஆனால், பரபரப்பைக் கிளப்பும் யூடிபர்களுக்கு மட்டும் எங்கே இருந்து புதிய புதிய சிந்தனைகள் முளைக்கின்றனவோ தெரியவில்லை. இதைப் பார்த்துவிட்டு எண்ணற்ற ஓய்வூதியர்கள், ஏங்கிக் காத்திருக்கிறார்கள். என்னைப் போல் பலரிடமும் கூடுதல் விவரம் கேட்கிறார்கள்.
“நாங்க ஒழைச்ச காலத்துல எவ்வளவு கஷ்டப்பட்டோம். அதுக்கு 7,500 ரூபாய் கூட தரக்கூடாதா சார்? இன்னிக்கு என்ன விலைவாசி விக்குது?”
“பேங்குல அக்-க்ளெய்ம்டு பணமே கோடிக்கணக்குல இருக்காமே சார், அதை எடுத்து இதுல போட்டு, பென்ஷனை உசத்த மாட்டாங்களா சார்.”
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கேள்வியைக் கேட்கிறார்கள். எல்லாமே நியாயம் போல்தான் தெரிகின்றன. ஆனால், என்னுள் வேறு கேள்விகள் ஓடுகின்றன.
சுதந்திரம் பெற்ற காலம் முதல் நாம் ஏன் பணியாளர்களை இப்படி அரசாங்கத்தைச் சார்ந்தே இருக்கும்படி செய்தோம்? அவர்கள் தங்களுடைய எதிர்காலத்துக்கான சேமிப்புகளையோ, முதலீடுகளையோ செய்துகொள்ள ஏன் சொல்லித் தரவில்லை? சொந்தக் காலில் நிற்பது தான் எப்போதும் ஒசத்தி? நிதிக் கல்வி என்பது தானே அடிப்படை? அதை ஏன் பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்தே தொடங்கவில்லை?
பி.எப்.பில் சேரும் பணியாளர் எண்ணிக்கை உயரும்போது, வருங்காலத்தில் ஓவ்யூதியம் கொடுக்க போதிய வருவாயை உருவாக்க வேண்டும் என்று ஏன் ஆட்சியாளர்களுக்குத் தோன்றவில்லை? வெறும் 6 சதவிகித வருவாயில் அத்தனை பேருக்கும் எப்படி பென்ஷன் கொடுக்க முடியும் என்று ஏன் யோசிக்கவில்லை? பணவீக்கம் என்று ஒன்று உண்டே, அதை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?
கனடா, அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள பென்ஷன் பண்டுகள், உலக அளவில் பல பங்குச் சந்தைகளிலும் இதர சந்தைகளிலும் முதலீடு செய்து 10 முதல் 12 சதவிகித வருவாயை ஈட்டுகின்றன.
நமது நாட்டில், இந்த பி.எப். தொகுப்பில் 85 சதவிகிதம் அரசு பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகின்றன. 15 சதவிகிதம் மட்டுமே இ.டி.எப். வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகின்றன. எப்படி இந்த வருமானம் போதுமாக இருக்கும்? அரசுக்குப் போதிய வருமானம் வராமல், அவர்கள் எப்படி பி.எப். பென்ஷன் தாரர்களுக்கு ஓய்வூதியத் தொகையை உயர்த்தித் தர முடியும்?
“அரசாங்கம், மனசு வெச்சா முடியாதா சார்? அவங்களுக்கு வழி தெரியாதா? பென்ஷனர்களுக்குக் கொடுக்கணும்னு நினைச்சா தாராளமாக கொடுக்கலாம்” என்று ஒரு முதியவர் பேசும்போது உறுதியாகச் சொன்னார். என் குருவி மூளைக்கு அந்த நம்பிக்கையின் அர்த்தம் என்னவென்று புரியவில்லை.
யூடியூப் காரர்களின் பரபரப்பு தம்ப்நெயில்களில் (Thumbnails) இருக்கும் ‘நல்ல செய்தி’, அரசாங்கத்தின் பட்ஜெட் கோப்புகளில் இன்னும் வெறும் ‘பரிந்துரையாகவே’ இருக்கிறது. பொருளாதாரக் கணக்குகளும், வட்டி விகிதங்களும் முதியவர்களின் நம்பிக்கைக்குச் சாதகமாக இல்லை என்பதே தற்போதைய நிதர்சனம்.
இருப்பினும், ‘நல்ல செய்தி உண்டா சார்?’ என்று அடுத்த வாரம் கேட்கப் போகும் அந்த முதியவரிடம், ‘இப்போதைக்கு இல்லை’ என்று சொல்லி அவர் நம்பிக்கையை சிதைக்க எனக்கு மனமில்லை.
‘நிச்சயம் வரும் சார்… வந்தால் நானே முதலில் எழுதுகிறேன்’ என்ற ஆறுதல் வார்த்தை தான் சொல்வேன். இன்றைய நிலையில், முதியோர் கவலையை அதிகப்படுத்தாமல், சமாதானப்படுத்துவது மட்டுமே என்னால் முடிந்தது.

(c) ஆர். வெங்கடேஷ்

என் கட்டுரைகளைப் பற்றி உங்கள் எண்ணங்களை rvrv30@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்புங்கள். மற்றவர்களோடு கட்டுரைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, இந்த வாட்ஸ் ஆப் சேனல் சுட்டியையும் சேர்த்து அனுப்புங்கள்: https://whatsapp.com/channel/0029Vb8QUULAjPXT0Bvig803

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன