ஜே. கிருஷ்ணமூர்த்தி (ஜிட்டுநாராயணையா கிருஷ்ணமூர்த்தி என்று ஆங்கில வழக்கப்படி ) என்ற இயல்பெயரை பெரும்பாலும் அப்படியேதான் அவரும் மற்றவரும் பயன்படுத்துவார்கள்.
ஜே.கே. என்று சுருக்கமாகச் சொல்வதுண்டு (ஜே.கி. என்றாலும் ஜி.கி. என்பதில்லை). புறப்புறத்திலிருந்து எழுதிய சிலர் மேலை வழக்கப்படி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்று அழைத்ததுண்டு. இங்கேயும் அவரை மறுப்பவர்/வெறுப்பவர்/மதிப்பவர் அவரை அப்படி (ஜித்து) அழைப்பார்கள். (இதுதான் பொதுப்புத்தியில் தெரிவது.). நிற்க. ஜிட்டு அல்லது ஜித்து என்பது குடும்ப வழிப் பெயராகவே இருக்கும். நான் திருப்பதியில் ஆய்வுப்பட்டக் கல்வி பயின்றபோது, திருமலை கோயில் பூசகர் குடும்பங்களை (ஐயங்கார்) சேர்ந்தவர்களை ஜிட்டுக்கள் என்று பிறர் அழைப்பதைக் கவனித்திருக்கிறேன். அவ்வகைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்னோடு பயின்றிருக்கிறார். வீட்டுக்கும் சென்றதுண்டு. ஜே,கே, பிறந்த மதனப்பள்ளி திருப்பதிக்கு அருகில் உள்ளதுதான். எனவே இவ்வகைப்பட்ட குடும்பங்களுள் ஒன்றாக அவருடையது இருந்திருக்கலாம். தெலுங்கிலும் தமிழிலும் ஜிட்டு/ஸிட்டு (அட்டுப்பிடித்த)அடிக்கிறது என்றும் பேச்சுவழக்கில் சொல்வதுண்டு. ஜிட்டு என்பதை ஜித்து / ஜித்/ சித்/ என்று விரிப்பதுப் பார்ப்பதும் உண்டு). வெண்ணை (வெண்ணெய்) நாற்றம் போன்றதைக் குறிப்பது இது. வெண்ணை நாறும் பாற்கடல், வெண்ணை திருடிய கண்ணனின் நாற்றம் என்ற வைணவத் தொன்மத்தைக் குறித்தெழுந்த பெயராகவும் இருக்கலாம். திருப்பதிக் கோயிலுக்குள் எண்ணை பயன்படுத்தப்படுவதில்லை, நெய் மட்டும் தான் எல்லாவற்றுக்கும். எனவே பூசகர்கள் மேனியும் வேர்வையும் நெய் மினுக்குடனும் நாற்றத்துடனும்தான் இருக்கும் என்று நகை செய்வதுண்டு. எனவே பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைக்காத, ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று கையெழுத்திட்ட ஒருவரை, அப்படியே அழைப்பதிலோ அல்லது ஜே.கே. என்று சுருக்கி அழைப்பதிலோ நமக்கென்ன வந்துவிடப்போகிறது.
