சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – உஷாதீபன்

நெறிமருப்பு எருமையின் ஒருத்தல் நீள்இனம்
செறிமருப்பு ஏற்றினம் சிலம்பப் பண்உறீஇ
பொறிவரி வராலினம் இரியப் புக்குடன்
வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே..

பாடலின் பொருளை அறிந்து கொள்ளுமுன் குறிப்பிட்ட சொற்களுக்கான பொருளைப் புரிந்து கொண்டு உட்புகுதல் சிறப்பு.
செறி – செறிவு…செறிவான….இது நாம் அறிந்த சொற்கள் செறிவான எனில் அடர்ந்த….தெளிந்த….சிறந்த என்று பொருள் கொள்ளப்படுகிறது.
செறிந்த காடு எனில் அடர்ந்த காடு.

இரிய – இது வினைச்சொல். ஓடுதல், விலகுதல், வடிதல் என்பது இதன் பொருளாகும்.
நெறி மருப்பு – எருமை, மான் இவற்றின் முடங்கின கொம்பு என்று பொருளாகிறது.
காடு மேடாகத் தரிசாக் கிடந்த மண்ணு –நெற் களஞ்சியமாவது எப்படி என்று எண்ணு….
அது பாடுபடும் விவசாயிகள் திறமையினாலே….-என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
விவசாயத்தின் பெருமையையும், அதில் உழைக்கும் விவசாயிகளின் பெருமையையும் நலமுற
எடுத்துரைக்கும் பாடல் அது.

அதுபோல் ஏமாங்கத நாட்டு விவசாயிகள் தங்கள் நாட்டின் செழிப்பினை ரசித்து மகிழ்ந்தவாறே….எங்ஙனமெல்லாம் ஊக்கத்தோடும், சந்தோஷத்தோடும், இயற்கை வளத்தினை மனதில் கொண்டு உழவுத் தொழிலில் உற்சாகமாய் ஈடுபடுகின்றனர் என்பதை எளிமையாக விளக்கும் பாடலாக இது அமைகிறது.


கூட்டம் கூட்டமாய் வெள்ளம்போல் முனைப்பாய்க் கூடியிருக்கும் விவசாயப் பெருமக்கள் பாட்டிசைக்கும் மனநிலைக்கு ஆளாகி, உடம்பு பூராவும் புள்ளிகளாய் அமைந்த, வரி வரிகளாய்க் கோடிட்ட வரால் மீன்கள் புகுந்தோடும் கழனியிலே கூரிய கொம்புடைய எருமைகளில் மிகப் பெரியதையும், தடித்த கொம்புடைய எருதுகளில் வலியதையும் சேர்த்து எருதுகளில் பூட்டி நடவுப் பாட்டினை இசைத்துக் கொண்டே தங்கள் உழவுத் தொழிலைத் தொடங்கத் தயாராகிக் குழுமி நின்றனர் என்று அழகுற விளக்குகிறது இப்பாடல்.