
பிரேமா அக்கா எங்கள் வீட்டுக்குக் குடி வந்ததை என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பிரேமா அக்கா போன்ற தனித்த, கல்யாணமாகாத பெண்களுக்கு அம்மா வீட்டை வாடகைக்குத் தருவதில்லை.
நான் அம்மாவுக்குப் பக்கத்தில் பவ்யமாக நின்று கொண்டிருந்தேன். ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது. பிரேமா அக்காவை முதல் பார்வையிலேயே எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அம்மா இந்த அக்காவுக்கு வீட்டைத் தர வேண்டுமே என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தேன். அம்மா ஒரு முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுவது தெரிந்தது.
அக்கா பார்ப்பதற்கு ரொம்ப சாதுவாக இருந்தாள். முன்பு குடியிருந்தவர்களைப்போல் அம்மாவிடம் சண்டை போட மாட்டாள் என்று தோன்றியது. அம்மாவுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும். எனவே கொஞ்சம் சுருதி குறைந்தே பேசிக் கொண்டிருந்தாள்.
“வேறொண்ணுமில்ல.. கல்யாணமாகாத தனிப் பொண்ணாச்சேன்னு பார்க்கிறேன்,” என்று இழுத்தாள் அம்மா.
“அவளால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. எங்களுக்கு சொந்த ஊர் நெல்லூரு. அம்மாப்பா அங்க தான் இருக்காங்க. இவளுக்கு மெட்ராசில் வேலை கிடைச்சதால் தான் இங்க வந்திருக்கா. எங்க வீடும் பக்கத்துல தான் இருக்கு. சிங்கிள் பெட்ரூம். இடம் பத்தாது என்பதால் தான் இவளை எங்களோடு வெச்சுக்க முடியல. ஆனா அடிக்கடி வந்து பார்த்துப்போம்,” என்றாள் பிரேமாவின் அக்கா தேவிகா நீளமாக.
“வாடகை எல்லாம் ஒழுங்கா குடுத்துடுவோம். அது பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்,” என்றார் அவள் கணவர் தன் பங்குக்கு.
“உங்களைப் பார்த்தால் நல்ல மனுஷங்களாத் தெரியுது. அதான் என் தங்கச்சி இங்க பத்திரமா இருப்பான்னு கேட்கிறோம்,” என்றாள் பிரேமாவின் அக்கா.
அம்மாவின் உச்சி குளிர்ந்து போய் விட்டது. ஒரு மாதமாக டூ லெட் ஃபோர்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் சரியாக அமையவில்லை. ஒன்று வாடகையை குறைத்துக் கேட்கிறார்கள். அல்லது பெரிய குடும்பமாக இருக்கிறார்கள். இவர்கள் தான் கேட்பதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அதோடு ஒற்றை ஆள் என்பதால் தண்ணீரும் அதிகம் செலவாகாது!
“சரி. ஆனா தண்ணிக்குத் தனியா நூறு ரூபாய் தந்துடணும்!” என்றாள் அம்மா.
இப்படியாகத்தான் பிரேமா அக்கா எங்கள் வீட்டுக்கு வந்தது.
*
பிரேமா அக்கா வந்ததும் என் லைஃப் ஸ்டைல் மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஸ்கூல் விட்டு வந்ததுமே நேராக பிரேமா அக்காவின் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். “காஃபியாவது குடிச்சிட்டுப் போடி,” என்று கத்துவாள் அம்மா. காதிலேயே விழாது!
நான் எப்போது போனாலும், “வா மஞ்சு,” என்று சிரித்த முகத்தோடு வரவேற்பார் பிரேமா அக்கா. அவருக்கு தூர்தர்ஷனில் வேலை கிடைத்திருந்ததாம். அவள் பாவா (அக்காவின் புருஷன்) அங்கு தான் கேமராமேனாக இருக்கிறாராம். ஆனால் இரண்டு மாதம் கழித்து வேலையில் சேர்ந்தால் போதுமாம். அதுவரை என் பாடு ஜாலி தான்.
வெள்ளிக்கிழமைகளில் விமரிசையாகப் பூஜை செய்வாள் அக்கா.. இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி வைத்து, படங்களுக்குக் கதம்பமாலை சூட்டி, ஊதுபத்தி கொளுத்தி, சாம்பிராணிப் புகை காண்பித்து, தெலுங்கில் ஏதோ ஸ்லோகம் சொல்லிக் கடைசியாகச் சூடம் காட்டுவாள்.
அதையெல்லாம் விட அன்றைக்கு ஒரு பிரசாதம் செய்வாள் பாருங்கள். அதுதான் அக்கா ஸ்பெஷல்! வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய், திராட்சை, முந்திரி, பச்சை கல்பூரம் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து! அந்த பஞ்சாமிர்தத்துக்காகவே நான் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் அங்கு ஆஜராகி விடுவேன்!
பூஜை முடிந்ததும் அக்கா ஒரு சிறிய ஸ்பூனில் பஞ்சாமிர்தத்தை எடுத்து என் உள்ளங்கையில் வைப்பாள். “இது சுவாமி பிரசாதம். முதலில் கையில் வாங்கிக்கணும். அப்புறம் ஒரு கிண்ணத்தில் போட்டுத்தரேன். சரியா?” எப்படித்தான் என் மனதைப் படித்தாளோ?
*
அன்றைக்கு ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்தபோது, அக்காவின் வீடு பூட்டியிருந்தது. “அக்கா எங்கம்மா?” என்றேன்.
“யாருக்குத் தெரியும்? எப்பப் பார்த்தாலும் உனக்கு அக்கா வீடு! ஒழுங்காப் படிக்கிறதில்லை!” என்று சிடுசிடுத்தாள் அம்மா.
இரவு அக்கா வருவதற்குள் நான் தூங்கிப் போனேன். காலையில் எழுந்து ஸ்கூலுக்குப் போய் விட்டேன். எனவே மறுநாள் ஸ்கூல் விட்டு வந்ததுமே முதல் காரியமாக அக்கா வீட்டுக்கு ஓடினேன்.
“நேத்திக்கு எங்க போயிட்டீங்கக்கா? என்கிட்ட சொல்லவேயில்லை?” என்றேன்.
“சாரி மஞ்சு. திடீர்னு சன் டீவிலேர்ந்து ஒரு ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. அதான் அங்க போய்ட்டேன்.”
“சன் டிவியா? நீங்க தூர்தர்ஷன்னு இல்ல சொன்னீங்க?”
அக்கா என்னைக் கொஞ்சம் தயக்கத்தோடு பார்த்தாள். *பாவா அங்கேயும் ட்ரை பண்ணிக்கிட்டிருக்கார் மஞ்சு,” என்றாள்.
“ட்ரை பண்ணிக்கிட்டிருக்கார்னா; அப்போ உங்களுக்கு இன்னும் வேலை கிடைக்கலையாக்கா?”
“ஸாரி மஞ்சு. உன் கிட்ட பொய் சொல்ல விரும்பலை. இன்னும் வேலை கிடைக்கலே மஞ்சு. ஆனா நிச்சயம் கிடைச்சுடும்! பாவா சீரியஸா ட்ரை பண்ணிக்கிட்டிருக்கார், ” என்றாள்.
அன்றைக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே வரவில்லை. அக்கா பொய் சொல்லிக் குடி வந்திருக்கிறாள் என்று தெரிந்தால் அம்மா அக்காவைக் காலி பண்ணச் சொல்லி விடுவாளோ? ஐயோ, அக்கா இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?
•••
அன்றைக்கு சனிக்கிழமை. ஸ்கூல் லீவ். பதினொரு மணிக்கு நான் அக்காவின் வீட்டுக்குப் போனபோது அக்கா எங்கோ வெளியில் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். “தூர்தர்ஷன் போறேன் மஞ்சு. பாவா வரச் சொல்லியிருக்கார்,” என்றாள்.
எனக்குத் தூர்தர்ஷன் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. எனவே “நானும் வரட்டுமாக்கா?” என்றேன் தயங்கியபடி.
அக்கா ஒரு நிமிஷம் யோசித்தாள். “சரி. உங்கம்மா கிட்டே சொல்லிட்டு வா!”
அக்காவின் பாவாவுக்கு என்னைப் பார்த்ததுமே லேசாக முகம் மாறியது. “ஹவுஸ் ஓனர் பொண்ணு. தூர்தர்ஷன் பார்க்கணும்னு ஆசைப்பட்டா.” என்றாள் அக்கா.
“ஓ, சரி,” என்றார். பிறகு அக்காவிடம் தெலுங்கில் என்னவோ சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார்.
ஒரு ஐந்து நிமிடம் கழித்து போன் வந்தது. அக்கா எழுந்து கொண்டாள். “பாவா கூப்பிடறார் மஞ்சு. நான் போய் அவரைப் பார்த்துப் பேசி விட்டு பத்து நிமிஷத்தில் வந்துடறேன். அதுவரை நீ இங்க தனியா இருந்துப்பியா ?”
“இருந்துப்பேன்கா!”
அரைமணி கழித்து அக்கா வந்தாள். “சாரி கொஞ்சம் லேட்டாயிடுத்து மஞ்சு.” என்றாள்.
“பரவாயில்லைக்கா. வேலை கிடைச்சுடுத்தா?”என்றேன்.
“கிடைச்சுடும் மஞ்சு. பாவா அப்படித்தான் சொல்றார்!”
அப்புறம் நிறைய சமயங்களில் நானும் அக்காவும் வெளியில் சேர்ந்து போக ஆரம்பித்தோம். கோவில், சினிமா, ஷாப்பிங்.
என்ன ஆச்சரியமென்றால் எல்லா இடத்திலும் திடீரென்று அக்காவின் பாவாவும் வந்து முளைத்தார். முதலில் தற்செயல் போலத்தான் இருந்தது. பிறகு ஒரு நெருடல் ஏற்பட்டது. அதெப்படி சரியாக நாம் போகிற இடங்களாகப் பார்த்து வருகிறார்?
அன்றைக்கு அக்காவின் பிறந்த நாள். அவளுடைய அக்கா தேவிகா, வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அக்கா என்னையும் அழைத்துக் கொண்டு போனாள்.
சிறிய வீடு. ஹாலிலேயே ஒரு பக்கமாய் டைனிங் டேபிள். நானும் அக்காவும் ஒருபுறமும் அக்காவின் பாவா எதிர்புறமும் அமர்ந்து கொண்டோம். அக்கா மெழுகு அணைத்து கேக் கட் செய்து முதல் துண்டை எனக்கு ஊட்டினாள்.
தேவிகா அக்கா எல்லாருக்கும் சிரித்தபடியே உணவு பரிமாறினார். ஹாலுக்கும் சமையலறைக்குமாய் நடந்தபடியே இருந்தார். நிறைய ஐட்டங்கள். நன்றாகவும் இருந்தது.
சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது என் மடியிலிருந்த செல்போன் நழ்விக் கீழே விழுந்தது. “ஐயோ” என்று பதறிக்கொண்டு குனிந்தேன். அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய ஃபோன். உடைந்து போனால் இன்னொன்று நிச்சயம் கிடைக்காது.
செல்போன் டேபிளுக்கு நடுவில் விழுந்திருந்தது. எடுக்கக் குனிந்தபோது தான் கவனித்தேன். பாவா தன் கால்களால் அக்காவின் பாதங்களை வருடிக் கொண்டிருந்தார். நான் குனிந்தபோது சட்டென்று கால்களை விலக்கிக் கொண்டார். அக்கா தலை குனிந்து மௌனமாக அமர்ந்திருந்தாள். அவள் முகம் வெளிறிப் போயிருந்தது. பிறகு என்னால் சாப்பிடவே முடியவில்லை.
வீட்டுக்கு வந்த பிறகும் வெகுநேரம் என்னால் நார்மலுக்கு வர முடியவில்லை. டேபிளுக்கு அடியில் பாவாவின் கால் அக்காவின் பாதத்தை வருடிக் கொண்டிருந்த காட்சியே மீண்டும் மீண்டும் மனதில் வந்து போனது ச்சே- அக்கா இவ்வளவு மோசமானவளா? தன் சொந்த அக்காவுக்கே துரோகம் செய்பவளா?
அடுத்த இரண்டு நாட்கள் நான் அக்காவைப் பார்க்கப் போகவில்லை. அக்கா என்ன நினைத்துக் கொள்வாள்?
அதற்கடுத்த நாள் வெகு தயக்கமாக அக்காவின் வீட்டில் காலடி எடுத்து வைத்தேன். “வா மஞ்சு,” என்றாள் அக்கா “எங்க இனிமே நீ வரவே மாட்டியோனு பயந்துட்டேன்.”
மௌனமாக இருந்தேன்.
“உன்கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும் மஞ்சு. நாளைக்கு உனக்கு ஸ்கூல் லீவ் தானே? நாம வெளியே போலாமா?” என்றாள்.
“ம்..”
……
வெயில் தணிந்து காற்று வீசத் தொடங்கியிருந்த மாலை நேரம் அக்காவோடு மெரீனாவில் இருந்தேன். அக்கா கொஞ்ச நேரம் கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு என் பக்கமாய்த் திரும்பி “சாரி மஞ்சு” என்றாள்.
“எதுக்குக்கா?”
“உனக்கே தெரியும்.”
மௌனமாயிருந்தேன்.
“நீ ப்ளஸ் ஒன் படிக்கிறே. பதினாறு வயசு தான் ஆகுது உனக்கு. உன் கிட்ட இதையெல்லாம் சொல்றது சரியானு எனக்குத் தெரியலே. ஆனா இங்கு எனக்குத் தெரிஞ்சவங்கனு வேற யாரும் இல்லை மஞ்சு,” என்றாள்.
“பரவாயில்லைக்கா. சொல்லுங்க,” என்றேன். ஏனோ அக்காவைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
“பாவா தான் என் பிரச்சினை மஞ்சு,” என்றாள் அக்கா.
“ம்.”
“அவருக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை. அதால தான் என்னையே சுத்திச்சுத்தி வரார்! “
“அவர் ஏற்கெனவே கல்யாணம் ஆனவராச்சே அக்கா! உங்கக்காவைப் பண்ணியிருக்காரே!” என்றேன்.
“அதே தான் நானும் சொல்றேன். இது எப்படி சரி வரும் மஞ்சு? என் சொந்த அக்காவுக்கே நான் எப்படி துரோகம் செய்ய முடியும்?”
” … “
“ஆனா, பாவா என்ன சொல்றார்னா, அக்காவைப் பெண் பார்க்க வந்தபோதே அவருக்கு என்னைத்தான் பிடிச்சிருந்ததாம். அவங்க வீட்லேயும் சொன்னாராம். ஆனா அவங்க அம்மா ஒத்துக்கலையாம். அக்காவைப் பார்க்க வந்துட்டு தங்கச்சியைக் கேட்கிறது சரியில்லைனு மறுத்துட்டாங்களாம்.”
” ம் “
“அரைமனசோடு தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சாராம். பிறகு ஏதாவது காரணம் சொல்லி என்னையும் பண்ணிக்கலாம்னு நினைச்சிருந்தாராம்!”
“வெரி பேட்!”, என்றேன் என்னையறியாமல்.
“அதே தான்! அக்காவுக்குக் குழந்த பிறக்கவில்லை என்ற காரணத்தை இப்போ கையிலெடுத்திருக்கார். எனக்கு அவரைப் பார்க்கவே பயமாயிருக்கு மஞ்சு”
“…”
“அவர் மனசில் இப்படியொரு எண்ணம் இருக்கிறது என்று தெரிந்திருந்தால் நான் சென்னைக்கே வந்திருக்க மாட்டேன். நெல்லூரில் ஒரு கான்வென்ட்டில் டீச்சராயிருந்தேன். வலுக்கட்டாயமாய் என்னை அங்கேயிருந்து கிளப்பினார். தூர்தர்ஷன் சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை என்பதால் என் அம்மாவும், அப்பாவும் எந்த சந்தேகமும் இல்லாமல் என்னை அனுப்பி வெச்சுட்டாங்க!”
“ம்.”
“முடிஞ்சா அக்காவைக் கன்வின்ஸ் பண்ணி அவ அனுமதியோடு என்னைக் கல்யாணம் பண்ணிக்கறது. முடியாட்டா இல்லீகலாகவாவது என் கூட சேர்ந்து வாழ்ந்துடணும்னு துடிக்கிறார். நான் என்ன செய்யறது மஞ்சு?”
“உங்களுக்கு அவரைப் பிடிச்சிருக்கா அக்கா?” என்றேன்.
“அக்கா புருஷன் என்பதைத் தவிர்த்து சத்தியமா அவர்மேல் எனக்கு வேறு எந்தப் பிடிமானமும் இல்ல மஞ்சு. இதை அவரிடமே பல முறை சொல்லிட்டேன். ஆனால் அவர் கேட்பதாயில்லை. நான் எங்கே போனாலும் அங்கே வந்து நிற்கிறார்!”
“நீங்க போறதை ஏன்க்கா அவருக்குச் சொல்றீங்க?” என்றேன்.
“இல்லாட்டா வீட்டுக்கு வந்துடுவார் மஞ்சு! அவர் மட்டும் அடிக்கடி வந்தா உங்க அம்மா என்ன நினைப்பாங்க? ஸோ வெளியில் இருக்கேன்னு சொன்னா எங்கே என்று வற்புறுத்திக் கேட்டு அங்கேயும் வந்துடறார்! அதுக்குத்தான் எல்லா இடத்துக்கும் உன்னையும் கூட்டிக்கொண்டு போகிறேன் ஒரு கேடயம் போல! ஸாரி மஞ்சு!”
“நீங்க பேசாமல் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க அக்கா. அப்போ அவரால் ஒண்ணும் பண்ண முடியாது இல்லையா?” என்றேன்.
“என் கல்யாணம் நடக்கிற அன்னிக்கே தூக்குல தொங்கிடுவேன்னு மிரட்டுறார் மஞ்சு.”
“போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுங்கக்கா!” என்றேன் சற்றுக் கோபமாய்.
“கொடுக்கலாம் தான். ஆனா என் அக்காவின் வாழ்க்கையும் இதில் இருக்கு. நான் அதையும் பார்க்கணும் இல்லையா? எங்கம்மாப்பா கிட்டக்கூட சொல்ல முடியல. வயசானவங்க. உடைஞ்சு போயிடுவாங்க.”
அக்காவின் நிலை பரிதாபமாக இருந்தது.
“தற்கொலை பண்ணிக்குவேன்னு அவர் உங்களை மிரட்டுறதைப் போல நீங்களும் அதையே சொல்லி அவரை மிரட்டிப் பாருங்க அக்கா! அப்போவாவது விலகிப் போறாரானு பார்க்கலாம்,” என்றேன்.
அக்கா கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
……..
ஆனால் நான் சும்மா மேம்போக்காகச் சொன்னதை, அக்கா அத்தனை சீரியசாய் எடுத்துக் கொள்வாள் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை!
அன்றைக்கு ஸ்கூல் விட்டு வந்தபோது வாசலில் கூட்டமாய் இருந்தது. போலீஸ் வேறு!
“என்னாச்சும்மா?” என்றேன் பதறிப்போய்.
“போய்ப்பாரு உங்கக்காவை!” என்று அம்மா தலையிலடித்துக் கொண்டாள்.
பூஜையறையில் சுவாமி படத்தின் முன் சரிந்த நிலையில் விழுந்து கிடந்தாள் அக்கா.
இரண்டு வெள்ளிக்குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. படங்களுக்குக் கதம்பமாலை சூட்டியிருந்தது. ஊதுவத்தி எரிந்து அடங்கியிருந்தது. இன்றைக்கு வெள்ளிக்கிழமை என்பது ஞாபகம் வர, சட்டென்று பூஜை ஷெல்பைப் பார்த்தேன். நான் நினைத்தது சரி. அக்கா பஞ்சாமிர்தம் செய்து வைத்திருந்தாள். எப்பொழுதும் எனக்குக் கொடுக்கும் கிண்ணத்தில் கொஞ்சம் போட்டு சிறு தட்டு கொண்டு மூடி, மூடின தட்டின் மேல் சிறு ஸ்பூனில் கொஞ்சம் பஞ்சாமிர்தம்! எனக்கு! எனக்கு! ஆமாம். அக்கா எனக்குத்தான் வைத்து விட்டுப் போயிருக்கிறாள்! ஐயோ, அக்கா, என்று உடைந்து போய்க் கதறினேன்.
பூஜை முடித்து சூரியனுக்குக் கற்பூர ஆர்த்தி காட்டியபோதுதான் அம்மா அக்காவைக் கடைசியாகப் பார்த்தாளாம். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மினரல் வாட்டர் கொண்டு வருபவர் குரல் கொடுத்திருக்கிறார். பதிலில்லாமல் போக அவர்தான் அம்மாவுக்குச் சொல்லியிருக்கிறார். பக்கத்தில் இருந்த விஷபாட்டில் விஷயத்தை உறுதி செய்திருக்கிறது.
அக்காவின் அக்கா தேவிகா தெலுங்கில் கதறிக் கொண்டிருந்தாள். “எந்துகு இட்ட சேசினாவு நா செல்லமே! நா செல்லமே!” (ஏன் இப்படிச் செய்தாய் என் செல்லமே..செல்லமே?”)
அக்காவின் பாவாவைப் பார்த்தேன். தலை குனிந்து நின்று கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் “இப்போ உனக்குச் சந்தோஷமாடா? என் அக்காவை நிம்மதியிழக்கச் செய்து இப்போ சாகவும் அடிச்சுட்டே. இப்ப திருப்தி தானே உனக்கு?” என்ற என் கேள்வி அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். யார் பின்னாலோ போய் ஒளிந்து கொண்டார்.
போலீஸ் என்னைக் குறிப்பாக விசாரித்தது. நான்தான் எப்போதும் அக்கா கூடவே இருப்பேன் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்.
“உன் கிட்ட ஏதாவது சொன்னாங்களா பாப்பா? ஏன் இப்படி என்று உன்னால் ஏதாவது யூகிக்க முடிகிறதா?”
சொல்லிவிடலாமா என்று மனது துடித்தது.
‘போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுங்க அக்கா..’
‘குடுக்கலாம் மஞ்சு – ஆனா இதில் என் அக்காவின் வாழ்க்கையும் இருக்கு. அதையும் நான் பார்க்கணும் இல்லையா?’
தேவிகா அக்காவைப் பார்த்தேன். அவள் இன்னும் பரிதாபமாக கதறிக் கொண்டிருந்தாள்.
“தெரியலே சார். வேலை கிடைக்கலை என்ற வருத்தத்தில் இருந்தாங்க. ஒரு வேளை அது காரணமாயிருக்கலாம்.”
அக்காவின் பாவா நன்றியோடு என்னைப் பார்த்தார்.
“ச்சீ” யென்று, கண்களாலேயே அவனைத் துப்பிவிட்டு வெளியில் வந்தேன்.
என் பிரேமா அக்காவை என்னிடமிருந்து பறித்தவனை ஒரு நாளும் என்னால் மன்னிக்க முடியாது.

பானுமதி கண்ணன்
ஐஓபியில் பணி புரிந்து ஓய்வு கிடைத்த பின்னர், இதுவரை ஏறத்தாழ 100 சிறுகதைகள், ஒரு நாவல் மற்றும் 5 குறுநாவல்கள் படைத்துள்ளார். கணையாழி, விகடன், கல்கி, குங்குமம், குமுதம், தாய், சாவி இதழ்களில் இவருடைய சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. மங்கையர் மலர், ஓம் சக்தி, பனிப்பூக்கள் (Minnesota, United States) இதழ்களில் இவருடைய சிறுகதைகள் முதல் பரிசுகளும், கண்மணி குறுநாவல் போட்டியில் முதல் பரிசும் பெற்றுள்ளன. உரத்த சிந்தனை, இராய செல்லப்பாவின் ஸ்வர்ணாம்பாள் உள்ளிட்ட பல சிறுகதை போட்டிகளிலும் இவருக்கு பரிசுகள் கிடைத்துள்ளன. எழுதுவது என்பது இவருக்கு மிகவும் பிடித்தமானது.

மனதை நெகிழ வைத்தது. அருமையான கதை..அதன் தாக்கம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை
தவறான முடிவை எடுத்து விட்டாத்களே அக்கா. மனசு வலித்தது.