ஆர். வெங்கடேஷ்/எந்த வயது அழகு?

போட்டோ பிடிக்கக்கூடாத வயசு என்று ஏதேனும் உண்டா என்று யாரேனும் கேட்டால் உண்டு என்று தான் சொல்வேன். இப்படியெல்லாம் யோசிப்பார்களா? அதுவும் இன்று செல்போன் கேமராக்கள் திரும்பிய திசையெங்கும் காட்சிகளையும் செல்ஃபிக்களையும் சுட்டுத் தள்ளும்போது இது என்ன பத்தாம்பசலித்தனம் என்று கேட்கத் தோன்றுகிறதா?

எனக்கு அப்படித் தோன்றுகிறது, என் டிசைன் அப்படி என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள்.

சின்ன குழந்தைகளின் படங்களும் வீடியோக்களும் தான் உலகத்திலேயே உயர் ஸ்தானத்தைப் பிடிப்பவை. கள்ளமில்லா, களங்கமில்லா புகைப்படங்கள் அவை. எத்தனை திறமை இல்லாமல், இருட்டாகவும், கோணல்மாணலாக எடுத்தாலும், அங்கே இருக்கும் குட்டி ஜீவன், அந்தப் படங்களுக்கு உயிரும் உணர்வும் கொடுத்துவிடும். அங்கே எடுப்பாக தெரிவது அந்தத் தேவதை தானே தவிர, புகைப்படம் எடுத்தவரோ, சூழலோ, லைட்டிங்கோ, லென்ஸோ அல்ல. உங்களிடம் கூடுதல் கலைத்திறமை இருந்தால், அந்த தேவதை இன்னும் எழிலுடன் தோன்றலாம். அது இல்லையென்றால், அந்தக் குழந்தையே அத்தனைக்கும் ஈடுகட்டி விடும்.

இதற்கு அடுத்து புகைப்படங்கள் செம அழகாக இருப்பவை என்றால், அது 65 வயதுக்குப் பிறகு எடுக்கப்படும் படங்கள் தான். அதில் முதிய ஆணோ, பெண்ணோ, திடீரென்று ஒரு தனியான களையுடன், கம்பீரத்துடன் திகழ்வார்கள். கேசம் வெளுத்திருக்கும், கண்ணோரம் சுருக்கம், முன்வழுக்கை பாதிவழுக்கை ஆகியிருக்கும். எழுத்தாளர்கள் கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், க.நா.சு, அசோகமித்திரன், சிட்டி எல்லாம் எவ்வளவு அழகானவர்கள் தெரியுமா? இன்றைக்கும் போட்டோகளில் வாழும் மெளனியும் நகுலனும் காலத்தின் உணர்வை கண்களில் தேக்கிவைத்துச் சொல்பவர்கள். அந்தப் படங்களுக்கு அழிவே இல்லை.

பெண்களுக்கோ, இன்னும் பொலிவு அதிகம். வயது ஆக, ஆக, அதாவது 80, 85 வயதெல்லாம் ஆகும்போது, முதிய பெண்களின் அழகு, தெய்வீகம்.

இன்றைக்கும் டி.கே.பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி தேவி அருண்டேல், எழுத்தாளர்கள் வை.மு. கோதைநாயகி அம்மாள், லக்ஷ்மி, கு.ப. சேது அம்மாள், ஹெப்சிபா ஜேசுதாசன், ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், சித்தி ஜுனைதா பேகம் என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். உங்கள் நினைவில் அவர்களுடைய இளமையான படங்கள் எதுவும் ஞாபகம் வராது. முதிய தோற்றம் தான் அவர்களுடைய அசல் அடையாளம். அது தான் அவர்களுடைய படைப்பாளுமையின் உண்மையான வெளிப்பாடு.

குழந்தைகளோ வாழ்க்கையைத் தொடங்கும் நிலையில் இருப்பவர்கள், முதியவர்களோ வாழ்க்கையின் அனுபவத்தை தங்கள் நெற்றியிலும் சுருக்கங்களிலும் ஏற்றிக்கொண்டவர்கள்.

பதினைந்து முதல் இருபத்தைந்து வயது வரை எடுக்கப்படும் படங்கள் தான் உண்மையான படங்கள். அவர்கள் எதிரில் வாழ்க்கை பச்சைப்பசும் புல்வெளியாக பரந்து இருக்கிறது. அவர்களுடைய முகங்களில் தெரிவது, அனுபவித்துப் பார்த்து, முயன்று பார்த்து, சோதித்துப் பார்த்து, ஆராய (எக்ஸ்ப்ளோர்) துடிக்கும் வேகம். அந்தப் படங்கள் எல்லாம் அழகாக தெரிவதற்குக் காரணம், அவர்களுடைய மனத்தில் ஓடும் உத்வேகம். யெளவனம் தரும் குதிரை ஆற்றல் அது.

முதியோர் படங்களோ நிறைவின் செய்தி சொல்பவை. சாதித்த பின்னர் ஏற்படும் அமரிக்கை அது.

படமே எடுக்கக்கூடாத வயது எது தெரியுமா? 40 முதல் 60 வரை. இது இளமையும் இல்லை, முதுமையும் இல்லை. ரெண்டுங்கெட்டான். எதையோ சாதித்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு கற்பனையில் கோட்டை கட்டி வாழும் வயது. ஒன்றுமே செய்யவில்லை என்று உள்மனது அரித்துக்கொண்டே இருக்கும். ஆனால், அங்கீகாரம் மட்டும் அவசியம் என்று இன்னொரு குரல் குடைந்துகொண்டே இருக்கும்.

இத்தகையவர்களின் படங்களைப் பார்த்தாலே சில விஷயங்கள் துலக்கமாகத் தெரியும். நிறைவின்மை, பாதுகாப்பின்மை. உளவியலாளர் கார்ல் யுங் (Carl Jung) போன்றவர்கள் கூறுவது போல இது ஒரு ‘மிட்லைஃப் கிரைசிஸ்’ பருவம். தாங்கள் இழந்த இளமையையும், எட்ட முடியாத இலக்குகளையும் எண்ணித் தங்களுக்குத் தாங்களே ஒரு போலியான முகமூடியை அணிந்துகொள்ளும் வயது இது. அந்தப் போலியான முகமூடிதான் ‘உர்’ரென்று வைத்திருக்கும் முகத்தில் தொடங்கி, அகலமாகச் சிரிப்பது வரை விதவிதமான உருமறைப்பு உத்திகளாகப் புகைப்படங்களில் வெளிப்படும். உள்ளத்தைக் குடைவது வெளியே தெரியக்கூடாது அல்லவா?

அப்படியென்றால் இந்த வயதில் படமே எடுக்கக் கூடாதா என்றால் எடுக்கலாம். ஆனால், அது ஒரு சோகத்தின் சுவடுகளாக மட்டுமே மிஞ்சும். நம் மனத்தில் எப்போதும் நிலைத்து நிற்பது இளமைப்படங்கள் தான். எப்போது, எத்தனை வயதில் நீங்கள் கண்ணாடியைப் பார்த்தாலும், அதில் தெரிவது உங்களுடைய 18 வயது தோற்றம் தான். உளவியலில் இதை ‘ரெமினிசென்ஸ் பம்ப்’ (Reminiscence Bump) என்று சொல்கிறார்கள். மனித மூளையானது 15 முதல் 25 வயது வரை நடைபெறும் நிகழ்வுகளைத்தான் தன் வாழ்நாள் முழுவதும் மிகத் தெளிவாகவும் அழுத்தமாகவும் சேமித்து வைத்திருக்குமாம். அந்தத் தோற்றத்துக்கும் வாழ்க்கைக்கும் பாசாங்கற்ற வெகுளித்தனத்துக்கும் போக வேண்டும் என்று மனம் சொல்லிக்கொண்டே இருக்கும். ஆனால், அது முடியாது என்பதைத் தான் வாழ்க்கை உணர்த்திக்கொண்டே இருக்கும்.

இப்போதும் பலருடைய வாலட்டையோ, மணிபர்ஸையோ திறந்து பாருங்கள். அவர்கள் இளமையில் வாங்கிய டிரைவிங் லைசென்ஸ் அல்லது வேறு அடையாள அட்டை இருக்கும். அதில் அவர்கள் சின்னவயதில் எடுத்த போட்டோதான் இடம்பெற்றிருக்கும்.

நம்மை நாமே பார்த்துக்கொள்ள விரும்புவது அந்த இளமையைத் தானே?

———————

(c) ஆர். வெங்கடேஷ்

என் கட்டுரைகளைப் பற்றி உங்கள் எண்ணங்களை rvrv30@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்புங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன