மேகமலையில் மூன்று நாட்கள்! (4)

ஜெ.பாஸ்கரன்

காலையில் கண் விழித்தபோது, அமைதியாக இருந்தது – கண்ணாடி ஜன்னல் வழியே தூரத்தில் மலைகள் இன்னும் உறங்கிக் கிடந்தன – மேகங்களின் ஊடே மரங்கள் தோன்றியும் மறைந்தும் கண்ணாம்பூச்சி ஆடின. தனியாக நின்ற ஒற்றை மரம், தன்னை மேகத்தினால் போர்த்திக்கொண்டு, ஆடாமல் அசையாமல் உறக்கம் கலைய சூரியனை எதிர்பார்த்துக் காத்திருந்தது!

அவசரமாக சிவா கொடுத்த டீயை உறிஞ்சியபடி, வெளியே வந்தேன் – ஈசானிய மூலையில் மற்ற மூவரும் செல்லில் ஆழ்ந்திருந்தனர் – காலை ஐந்தரை மணிக்கே பறவை ஒன்று பாடுவதை ஒலிப்பதிவு செய்திருந்தார் என் மைத்துனர் – பறவையின் பெயர் தெரியாது, குயிலாக இருக்கலாம் (நமக்குத் தெரிந்ததைத் தானே சொல்ல முடியும்!). பின்னர் வந்த கைடு இதன் பெயர் ‘மலபார் விசிலிங் த்ரஷ்’ (Malabar whistling thrush) (அ) விசிலிங் ஸ்கூல்பாய் என்றும் பொழுதுவிடியும் முன்னே மனிதர்களின் விசில் போலவே கூவும் இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் என்றும் சொன்னார். விடியும் முன் விசிலடிக்கும் ஸ்கூல்பாய் என்று ஏன் சொன்னார் – ஸ்கூல்கர்ள் களுக்கு விசிலடிக்க வராதோ என்று எண்ணிக்கொண்டேன்.

பக்கத்திலிருந்த டீ எஸ்டேட்டின் பச்சைக் கட்டங்களினிடையே ஒருவர் பின் ஒருவராய் நடந்தோம். இடுப்பு உயரத்திற்கு தேயிலைச் செடிகள் – துளிர்கள் இளம்பச்சை நிறத்தில். முதுகின் கூடையில் விரைவாக இலைகளைப் பறித்துப் போடும் பெண்களைத் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம் – லேசான தூரலில் மூன்று, நான்கு கிமீ நடந்தோம் – இடையே சல சலக்கும் சிற்றோடைகள் காலில் ‘சில்’லிட்டன! வளைந்து சென்று, ஏரியின் கரையருகே வந்தோம். கட்டம் போட்ட அரைக்கை சட்டையில் சிவாஜி சிரித்தபடி வாயசைக்க, தேயிலைச் செடிகளின் குறுக்கே லைட் கலர் ப்ளெயின் சாரியின் தலைப்பை காற்றில் மிதக்கவிட்டவாறு ஜெயலலிதா வாயசைத்தபடி ஓடிவர, ‘பொட்டுவைத்த முகத்தையும், கட்டிவைத்த குழலையும்’ எஸ் பி பி / வசந்தா குரல்கள் காலைக் குளிரில் மனதில் சிறகடித்தன!

200 அடிக்கும் மேல் நீளமான ஹோஸ் பைப்புடன், மருந்தடிக்க வந்த சிப்பந்திகள், நம்ம ஊர் தண்ணீர் டாங்கர் போன்ற லாரியில் வந்திறங்கினர். கீழே இருந்த இடத்திலிருந்து மேலே 200 அடிவரை மருந்து கலந்த நீரை ஸ்ப்ரே செய்வது வியப்பாயிருந்தது.

குளித்து, டிபன் முடித்து (இட்லி, தோசை, இரண்டு வகைச் சட்னி, சாம்பார் மற்றும் பிரட், பட்டர், ஜாம், ஜூஸ், வெட்டி வைத்த பழத்துண்டுகள்!) எஸ்டேட் உள்ளே செல்லத் தயாரானோம். மஃப்ளருடன், ஸ்வெட்டர் சகிதம் உடன் வந்த ஒல்லி மனிதர் அன்பே வா ராமைய்யா போலிருந்தார்! அவர் பெயர் சேகர் – அந்தக் கால பிரிட்டிஷ் முதலாளிகள் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை மிகவும் அன்பாகவும், கரிசனத்தோடும் நடத்தினர் என்றார். முதலாளி டைமண்டுக்குப் பிறகு, ப்ரூக் பாண்ட், இந்துஸ்தான் லீவர் என்று கைமாறி இன்று கோயம்பத்தூர் லேடி ஒருவருக்குச் சொந்தமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். 1500 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த எஸ்டேட் ஏழு கிராமங்களை உள்ளடக்கியது. ஆறு லட்சம் பேர் இருந்த இடத்தில் இப்போது சுமார் இரண்டரை லட்சம் பேர்களே வசிப்பதாகக் குறிப்பிட்டார். படிப்பு, வசதிகள் பெருகி, வெளியூர்களுக்கு வேலை செய்யச் சென்றுவிட்டதால், தற்போது சுமார் இரண்டாயிரம் தொழிலாளிகள் மட்டுமே இங்கு வேலை செய்வதையும் குறிப்பிட்டார்.

புலி, சிறுத்தை, நரிகள், மான்கள், யானைகள், காட்டெருமைகள் (பைசன்), கருங்குரங்குகள், அணில்கள் என விலங்குகள் அவ்வப்போது கண்ணில் படும் என்றார். ஒரு கருங்குரங்கு, கூட்டமாக ஆறேழு காட்டெருமைகள், அணில்கள் மட்டும் கண்ணில் பட்டன. சில மணி நேரங்களுக்கு முன்னால் யானை வந்து சென்றதற்கு அடையாளமாக ஈரமான பச்சை லத்தியும், பிடுங்கிப் போட்ட தேயிலைச் செடியும், சதுரமான காலடித் தடங்களும் கண்ணில் பட்டன.

‘வுட்ப்ரையர்’ எஸ்டேட்டின் தனியார் மலைப் பிரதேசத்தில் மலையைக் குடைந்தாற்போன்ற இடத்தில் ஓர் அழகான நீர்வீழ்ச்சிக்குச் சென்றோம். வருடம் முழுவதும் நீர் விழுந்துகொண்டிருக்கும் அருவி! ‘ஊத்தூதாடி’ என்றழைக்கப்படும் இந்த அருவி, கார் செல்லும் சாலையில் இருந்து சுமார் முப்பது நிமிட நடை தூரத்தில் உள்ளது.

ஹாலிவுட் படங்களைப் போல, சுற்றிலும் மரங்களின் கிளைகள் கூண்டு போல் பின்னிக்கிடந்தன. இரண்டு பக்கங்களிலும், ஈரம் கசியும் கற்பாறைகள். காலில் சில்லென்று ஓடும் சிற்றோடை – அருவியிலிருந்த வரும் நீர். சிறியதும் பெரியதுமான பாறைகள், நீரோட்டத்தில் மூழ்கியும் மூழ்காமலும் நடப்பவரை எந்த நேரமும் கவிழ்த்து விடும் ஆவலோடு பதிந்து கிடந்தன. வலியே தெரியாமல், காலில் ஒட்டி, இரத்தம் உறிஞ்சும் அட்டைகள்!

வேகமாக சேகர் வழிகாட்ட, நாங்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி, வழுக்குப் பாறைகளில் கவனமாக நடந்தோம். இரண்டு மூன்று ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, கொஞ்சம் வானம் தெரிய, வெளிச்சம். அருவி கொட்டும் ஓசை. கண்ணெதிரே இரண்டு ஆட்கள் கட்டுமளவுக்கு வேகமாக விழும் அருவி. வலது பக்கம் பாறைகளில், இரண்டு மூன்று வளைந்த கோடுகளாக சிற்றருவிகள் விழுந்த வண்ணம் இருந்தன. அருவி விழும் இடத்திலிருந்து, பத்து பதினைந்து அடிகளுக்கு முன்னாலேயே நிற்கச் சொன்னார் சேகர். ‘அதற்கு மேல் போகவேண்டாம், நீரின் ஆழம் நாற்பதடிக்கும் மேலே’ என்றார். ஒரு அச்சம் கலந்த மகிழ்ச்சி – நின்றும், அமர்ந்தும், கிடந்தும் (ஓரிரு முறை விழுந்ததைச் சொல்கிறேன்!) அருவியின் சாரலில் நனைந்தோம். செயற்கையான தடுப்புகள், இரும்புக் குழாய் வளைவுகள், நீரில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் என ஏதும் இல்லாத இயற்கைச் சூழலில் ஓர் அருவி – அனுபவித்தோம்!

வெளியே வந்து, சிறிது தூரம் எஸ்டேட் பாதைகளில் பயணித்து, அங்கிருந்த எஸ்டேட் பங்களா ஒன்றினை வெளியிலிருந்தே பார்த்தோம் – உள்ளே அனுமதி இல்லையாம். பெரிய இரும்பு கேட்டிலிருந்து உள்ளே பெரிய பங்களா அமைதியாக நின்றுகொண்டிருந்தது – உள்ளே மனிதர்கள் இருக்கிறார்கள் என்றார் சேகர். ‘வெளியிலும்தான்’ என்று நினைத்தவாறு திரும்பினோம். கேரளாவின் பெரியார் டைகர் ரிஸர்வைச் சேர்ந்த, மணலார் பகுதியில் இருந்தது அந்த பங்களா – அந்தப் பக்கம் கேரளா என்றார் சேகர்!

மதியம் லஞ்ச் முடித்து மாலை டீ டைம் வரை ஓய்வெடுத்தோம். ‘நினைத்ததை முடிப்பவனி’ல் எம் ஜி ஆர் தன் அம்மாவின் உடலைப் பார்த்து கதறி, தான்தான் ரஞ்சித் என்று கோர்ட்டில் சொல்லிக்கொண்டிருந்தார். மீண்டும் பேண்ட் வாத்தியங்களுடன் ‘பூ மழை தூவி’ பாடி முடிக்கும் வரை பார்த்து, தூங்கிப்போனோம்!

மாலை, யானை நீர் குடிக்கும் இடத்திற்கு, டவேராவில் ‘வாக்கிங்’ போனோம் – யானைகளைப் பார்க்காவிட்டாலும், கூட்டமாகச் சென்றுகொண்டிருந்த காட்டெருமைகளைப் பார்த்தோம். பைனாகுலரில் வெள்ளை வாயும், வெள்ளை நிற சாக்ஸ் போட்டாற்போன்ற கால்களும், அங்கிருந்து திரும்பி ஒரு விரோத பாவத்துடன் நம்மைப் பார்ப்பதும் நன்கு தெரிந்தன. அவர்கள் இடத்தில் நாங்கள் ஏன் என்பதைப்போலப் பார்வை!

இருள் கவியத் தொடங்கியதும், வீடு வந்து சேர்ந்தோம் – சூடான சப்பாத்தி, சப்ஜியுடன், ஜீரா ரைஸ், சால்ட், ரைத்தா, தயிர், டெசெர்ட் வருந்தி அழைக்க – வேறென்ன, சாப்பிட்டுக் கொஞ்சம் டிவி, நிறைய அரட்டை என…….

இன்றும் ஏதும் எழுதவில்லை!