லீலா ராமசாமி /ஒரு மார்ச்சுவரி மரணம்

(WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி லீலா ராமசாமி எழுதிய “ஒரு மார்ச்சுவரி மரணம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு)

அழகான பெண்ணின் தலைமுடியில் எடுத்த நடுவகிடு போல அந்தப் புல்வெளியின் நடைபாதை அதை இரண்டாகப் பிரித்திருந்தது.
மௌனமாக நடந்துகொண்டிருந்தார்கள் கௌரி சங்கரும், ரவியும்.
“ரவி! என் பொண்ணு அனு, ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடிச்சிட்டா. உன்னைக் கையோட கூட்டிட்டு வரச்சொன்னா,” என்று மௌனத்தைக் கலைத்தார் கௌரி சங்கர்.
சட்டென்று பிரகாசமானது ரவியின் முகம். “வா, இப்பவே போகலாம்!”

**

“கங்கிராட்ஸ் அனு. நீ எப்ப முடிப்பேன்னு காத்து கிட்டிருந்தேன். உன் டைம் மெஷின்ல நான்தான் முதல் பயணி”
“தாங்க்ஸ் அங்கிள். உங்க வயசையும் உடல்நிலையையும் நினைச்சாத்தான்.”
“அது எதையும் நினைக்காதே. நான் இப்ப எதையும் தாங்கும் இதயத்தோட இருக்கேன்.”
“இந்த டைம் மெஷின்ல நீங்க எந்த வருஷம், எந்தத் தேதியில் எந்த நேரம், எங்கே போகணும்னு மட்டும் டீடெயில்ஸ் குடுத்துட்டா அங்கே கொண்டு சேத்துடும். எங்கே போனாலும் குறிப்பிட்ட நேரம் முடிய அஞ்சு நிமிஷம் இருக்கும் போது ஒரு வார்னிங் பெல் சத்தம் குடுக்கும். உடனே திரும்பிடணும்.”
“நீங்க போற இடத்துல நீங்க ஒரு பார்வையாளர் மட்டுமே. அங்கு நிகழும் நிகழ்ச்சிகளைத் தடுக்கவோ, மாத்தவோ, பேசவோ முயற்சிக்கக் கூடாது”
“எல்லாத்துக்கும் சம்மதம். என் மகன் டாக்டர் வினோத் சாவு எப்படி, எதுக்காக நடந்ததுன்னு தெரிஞ்சிக்கணும். அவன் சாவை ஏன் தற்கொலைன்னு முடிச்சாங்கன்னும் தெரிஞ்சுக்கணும். அதுக்குக் காரணமானவங்க சட்டப்படி தண்டிக்கப்படணும்.”
ரவியைத் தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்றாள் அனு.
“அங்கிள்! வருஷம், தேதி, நேரம், இடம் சொல்லுங்க.”
“2015, நவம்பர் 10 ம்தேதி இரவு ஒன்பது மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை, சென்னை ஜி.ஹெச். மார்ச்சுவரி.”
கால எந்திரத்தில் ரவி வசதியாகப் படுக்க வைக்கப்பட்டார். பட்டனை அழுத்தினார்.
பத்து வருடத்திற்கு முன்பிருந்த அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் இருந்தார். அங்கே அவர் கண்ட காட்சி…

**

அரசு மருத்துவமனையின் பிணவறை வாசலில் நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் சிபி.
தடயவியல் நிபுணர் ரிஷி காரிலிருந்து இறங்கி வேகமாக உள்ளே நுழைந்தான்.
“எங்கே அவன்?” ரிஷியின் குரலில் ஒருவிதமான ஆற்றாமை இருந்தது,
சிபி அவனை வினோத்தின் உடல் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த ஏசி அறையில் கிருமிநாசினி மணத்தையும் தாண்டி மெலிதான துர்நாற்றம் நாசியைத் தாக்கியது. அங்கே ஒரு மேசையின் மேல் டாக்டர் வினோத்தின் உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது.
வினோத் அவர்களது பள்ளித் தோழன், ஒரு திறமையான இதய அறுவைச் சிகிச்சை நிபுணன். “என்ன ஆச்சு வினோத்துக்கு?”
“தற்கொலைன்னு சொல்றாங்க ரிஷி. தன்னோட கிளினிக்லயே தூக்கு போட்டுக்கிட்டதா ரிப்போர்ட் வந்துருக்கு. ஆனா, எனக்கு ஏதோ ஒரு நெருடல். வினோத் தற்கொலை பண்ணிக்கிற ஆள் இல்லையே! அதான் உன்னைக் கூப்பிட்டேன்.”
ரிஷி நடுக்கத்துடன் துணியை விலக்கினான். வினோத்தின் கழுத்தில் ஒரு ஆழமான கயிற்றுத் தழும்பு இருந்தது.
சிபி சுற்றுமுற்றும் பார்த்தார். “ரிஷி! கமிஷனர் ஆபீஸ்ல இருந்து கேஸைக் க்ளோஸ் பண்ணச் சொல்லி போன் வந்துட்டே இருக்கு. கடன் தொல்லையால ஃபேன்ல தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணிக்கிட்டதா கேஸை முடிச்சுடச் சொல்றாங்க. இதுக்குப் பின்னாடி ஏதோ பெரிய மெடிக்கல் மாஃபியா பிரஷர் இருக்குன்னு நினைக்கிறேன்.”
ரிஷி வினோத்தின் கழுத்தில் இருந்த தழும்பைத் தீவிரமாக ஆராய்ந்தான்.
“சிபி! இது தற்கொலை கிடையாது. இது ஒரு படுகொலை!” விக்ரமின் வார்த்தைகள் அந்த அறையில் எதிரொலித்தன.
அந்த அறையில் மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த ரவி அதிர்ந்தார்.
“எதை வச்சுச் சொல்றே ரிஷி?”
“நல்லா கவனி. ஒருத்தன் தூக்குப் போட்டுக்கிட்டா, அந்தத் தழும்பு ஆங்கில எழுத்து ‘V’ வடிவுல மேல் நோக்கிப் போகும். ஆனா வினோத் கழுத்துல இருக்குற தழும்பு வட்டமா இருக்கு. யாரோ பின்னாடி இருந்து கயிறு போட்டு அவனைக் கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டு, அப்புறமா தூக்குல மாட்டியிருக்காங்க. அவன் சாகுறதுக்கு முன்னாடி போராடி இருக்கிறான்,” என்றான் விக்ரம்.
வினோத்தின் திறந்திருந்த கண்கள் தனக்கான நீதியைத் தேடி அவனையே பார்ப்பது போலிருந்தன.
வெளியே ஒரு இளம்பெண்;
“நான் ‘உண்மையின் குரல்’ பத்திரிகையாளர் மாலா. டாக்டர் வினோத் சாவுல நிறைய மர்மம் இருக்குன்னு தகவல் கிடைச்சிருக்கு. என்னை உள்ளே விடுங்க!” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அவங்களை உள்ளே விடுங்க,” என்றான் ரிஷி.
மாலா உள்ளே வந்தாள். ரிஷியைப் பார்த்து, “நீங்கதானே அந்த ஃபேமஸ் ஃபாரன்சிக் எக்ஸ்பர்ட் ரிஷி? டாக்டர் வினோத்துக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
ரிஷி, “இது கொலை மாலா. ஆனா இதை மறைக்க ஒரு பெரிய கும்பல் வேலை செய்யுது.”
மாலா, “டாக்டர் வினோத் எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதுல ‘சிட்டி ஹாஸ்பிட்டல்’ பத்தின ஒரு ரகசிய கோப்பு என்கிட்ட இருக்கு, நாம நேர்ல பேசணும்னு சொல்லியிருந்தார். ஆனா நான் அவரைச் சந்திக்கிறதுக்குள்ளேயே…” அவள் குரல் தழுதழுத்தது.
ரிஷி வினோத்தின் சட்டைப்பையிலிரூந்து ஒரு சிறிய மருந்துச் சீட்டை எடுத்தான். அதில், “ப்ராஜெக்ட் ஃபீனிக்ஸ் – லெவல் 4” என்று எழுதி இருந்தான்.
“ப்ராஜெக்ட் ஃபீனிக்ஸ்? அப்படின்னா என்ன?” சிபி கேட்டார்.
“தெரியல சிபி”
திடீரென மருத்துவமனையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எங்கும்
இருள் சூழ்ந்தது.
“சிபி, மாலா… ஜாக்கிரதை!” ரிஷி கத்தினான்.
இருட்டில் யாரோ ஒருவன் ஜன்னல் வழியாக உள்ளே குதிக்கும் சத்தம் கேட்டது. ரிஷி தனது டார்ச்சை உயிர்ப்பித்தான். ஒரு கறுப்பு உடை அணிந்த உருவம் வினோத்தின் உடலை நோக்கிப் பாய்ந்தது. அவன் கையில் ஒரு அறுவைச் சிகிச்சைக் கத்தி இருந்தது.
ரிஷி அவனைத் தடுக்க முயன்றான். அந்த மர்ம உருவம் ரிஷியின் தோளில் குத்திவிட்டு, ஜன்னல் வழியாக மின்னல் வேகத்தில் மறைந்தது.
மின்சாரம் வந்தது. அந்த மர்ம மனிதன் ஏன் வந்தான் என்று பார்த்தபோது, வினோத்தின் பையிலிருந்த அந்த மருந்துச் சீட்டு மாயமாகியிருந்தது.
“சிபி! என்னைக் குத்திய கத்தியில் விஷம் தடவியிருந்திருக்கு. நான்..
பிழை..க்க.. மாட்டேன். நீ..ங்க க..கவ..ன..ம்..,” ரிஷி அடங்கிவிட்டான்.
“ஐயோ, ரிஷீ…!” சிபியும் மாலாவும் அலறினார்கள். வெளியிலிருந்து காவலர்கள் உள்ளே ஓடி வந்தார்கள்.
கால யந்திரத்தின் மணிச் சத்தம் ரவிக்குக் கேட்டது. அவர் திரும்பி விட்டார்.

**

“எனக்கு மனசே ஆறலை கௌரி, அனு!” – ரவி கொதித்துப் போயிருந்தார்.
“என் பிள்ளை தற்கொலை பண்ணிக்கல. சிபியும், ரிஷியும் வினோத்தோட பிரண்ட்ஸ். வினோத் கொலை செய்யப்பட்டான்னு தெரிஞ்சி ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. அதைக் கண்டுபிடிச்ச ரிஷியையும் யாரோ கொன்னுட்டாங்க.
அடுத்த நாளே தற்கொலைன்னு கேசை முடிச்சி பாடியைக் கூடவே இருந்து எரிச்சப்புறம்தான் போனாங்க. நான் விடமாட்டேன். வினோத் சாவுக்குக் காரணமானவங்களைச் சட்டத்துக்கு முன்னாலே நிறுத்துவேன்.”
“நாங்க உங்கூட நிப்போம் ரவி. இப்போ சிபி எங்கே இருக்கார்னு விசாரிக்கலாம் வா.”
தீவிர விசாரணைகளின் பலனாக சிபியைக் கண்டுபிடித்தார்கள். வேளச்சேரி காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்தார்.
“அங்கிள் நீங்களா? வினோத் இறந்ததைக் கேட்டு மயங்கியவர் ரொம்ப நாள் கோமாவிலேயே இருந்தீங்க. என்ன விஷயம் சொல்லுங்க.”
“என் மகனைப் பாத்த உணர்வு வருது சிபி. வினோத்தை யார் எதுக்காகக் கொலை பண்ணாங்கன்னு தெரிஞ்சுதா?”
“கொலைன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் அங்கிள்?”
சொன்னார்.
சிபி நம்ப முடியாத ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.
“கொலைன்னு கண்டு பிடிச்ச ரிஷியைக் கொன்ன மாதிரி என்னைக் கொல்லாமே என் பேரண்ட்ஸைக் கடத்தி வச்சி பிளாக்மெய்ல் பண்ணாங்க. அவங்களைக் காப்பாத்த என் வாயை மூட வேண்டியதாச்சு. ஆள் யார், காரணம் என்னன்னு தெரிஞ்சும் சரியான ஆதாரம் இல்லாததால் எதுவும் செய்ய முடியலை.”
“அத்தோடு என்னை அந்தக் கேசிலிருந்தே நீக்கி, கன்னியாகுமரிக்கு மாத்தினாங்க. சென்னைக்குப் போன வருஷம்தான் வந்தேன்.”
“யார் கொலைகாரன்? காரணம் என்ன?”
“வினோத் கடைசியா எங்கே வேலை பார்த்தான்?”
“பிரபலமான சிட்டி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்.”
“அதன் ஓனர் டாக்டர் திலீப் மேலதான் சந்தேகமா இருக்கு. காரணம் அந்த ஹாஸ்பிடல்ல நடக்கிற நிழலான குற்றங்கள் நேர்மையான வினோத்துக்குத் தெரிய வந்து அதை எதுத்துக் கேட்டிருக்கலாம். ஆனால் எந்த வலுவான ஆதாரமும் இல்லை.”
“இப்ப என்ன செய்யலாம் சிபி?”
“ரிஷியின் தம்பி விக்ரம் அண்ணனின் கொலைக்கு நீதி கிடைக்கணும்னு உங்களைப் போலவே துடிச்சிட்டிருக்கான். அவனிடம் சொல்லலாம். இப்ப இருக்கிற கமிஷனருக்கும் திலீப்பின் குற்றச் செயல்களைப் பற்றி நிறைய புகார்கள் வந்தாலும் சரியான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லாததால் சரியான நேரத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.”
“தாங்க்ஸ் சிபி. விக்ரம் நம்பர் என்ன?”
சொன்னார்.

**
“அனு! நான் மறுபடியும் டைம் ட்ராவல் பண்ணணும். வினோத்தின் மரணம் நடந்த அன்னிக்கு அவனுடைய ரூம்ல நடந்ததை நான் வீடியோ எடுத்துட்டு வந்து அதை ஆதாரமா வச்சி குற்றவாளியைச் சட்டத்துக்கு முன்னால் நிறுத்தலாம்.”
“ரவி! வினோத்தின் மரணச் செய்தியே உன்னைக் கோமாவுக்குக் கொண்டு போச்சி. அவனைக் கொலை செய்வதைப் பார்த்தால் உனக்கு எது வேணும்னாலும் நடக்கலாம். நான் அதுக்குச் சம்மதிக்க மாட்டேன்.” என்றார் கௌரி சங்கர்.

**

‘உண்மையின் குரல்’ பத்திரிகை அலுவலகத்தில் விக்ரமும், மாலாவும் தீவிர ஆலோசனையில் இருந்தனர்.
“விக்ரம்! நீங்க சொன்ன அந்த ‘ப்ராஜெக்ட் ஃபீனிக்ஸ்’ பற்றி நான் தேடினேன். ஆஸ்பத்திரி ரெக்கார்டுகள்ல அப்படி ஒரு திட்டமே இல்லை. ஆனா கடந்த பத்து வருஷத்துல டாக்டர் திலீப்போட ‘சிட்டி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்’ அசுர வேகத்துல வளர்ந்திருக்கு,” என்றாள் மாலா.
“டாக்டர் திலீப்…! மிகச்சிறந்த கார்டியோலஜிஸ்ட். ஆனா அது மட்டுமே இவரோட அசுர வளர்ச்சிக்குக் காரணமில்லை.”
அன்று மதியம், விக்ரம் ஒரு சாதாரண நோயாளி போல வேடமிட்டு சிட்டி ஹாஸ்பிட்டலுக்குள்ளே நுழைந்தான்.
லிஃப்டில் நான்காவது தளத்திற்குச் சென்றான். வினோத்தின் மருந்துச் சீட்டில் இருந்த ‘லெவல்4’ என்ற குறியீடு அங்கேதான் இருந்தது. ஆனால், அந்தத் தளம் முழுவதும் ‘Maintenance’ என்ற பலகை மாட்டப்பட்டு, பூட்டப்பட்டிருந்தது.
விக்ரம் அங்கிருந்து திரும்ப முயன்றபோது, ஒரு கனமான குரல் அவனை நிறுத்தியது.
“யாரைத் தேடுறீங்க மிஸ்டர்…?”
விக்ரம் திரும்பினான். அங்கே ஆறடி உயரத்தில் கையில் தங்க வாட்ச் மின்ன நின்றிருந்தார் டாக்டர் திலீப்.
“டாக்டர் திலீப்… உங்களைத்தான் பார்க்க வந்தேன்.” என்றான் விக்ரம் எவ்விதத் தடுமாற்றமும் இன்றி.
“பேஷன்ட்கள் இந்த லெவல் 4 பக்கம் வராம இருக்கிறது நல்லது,” என்று கூறிவிட்டு திலீப் தனது செக்யூரிட்டிகளுக்கு ஒரு சைகை காட்டிவிட்டு நகர்ந்தார்.
விக்ரம் அங்கிருந்து வெளியேறினான்.
அன்றிரவு ரவி மாலாவுடன் மருத்துவமனைக்குப் பின்பக்கத் திறப்பின் வழியாக உள்ளே நுழைந்தான்.
“மாலா! இந்த மினி கேமராவைப் பிடிங்க. நான் ‘லெவல் 4’ கதவை உடைக்கப் போறேன். எது நடந்தாலும் பயப்படாம ரெக்கார்ட் பண்ணுங்க.”
விக்ரம் தனது நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி அந்த எலக்ட்ரானிக் பூட்டைத் திறந்தான். உள்ளே நுழைந்ததும் அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
அது ஒரு தொழிற்சாலை போல இருந்தது. பெரிய பெரிய கண்ணாடிப் புட்டிகளுக்குள் திரவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதன் மேல் ‘Project Phoenix – Batch 09’ என்று எழுதப்பட்டிருந்தது.
அருகில் இருந்த ஒரு கோப்பைப் பிரித்துப் பார்த்தான் விக்ரம்.
“மாலா! இது மருந்து இல்லை. இது ஒரு செயற்கையான ரத்தத்தை உருவாக்குற முயற்சி. ஆனா இதுக்காக இவங்க உயிரோடு இருக்கிற மனிதர்களின் ஸ்டெம் செல்களைத் திருடுறாங்க. அத்தோடு முக்கிய உறுப்புகளையும்! வினோத் இதைக் கண்டுபிடிச்சதால தான் அவரைக் கொலை செய்திருக்காங்க! இதையெல்லாம் காமிராவுல வீடியோ எடுங்க.”
திடீரென அந்த அறையின் அலாரங்கள் ஒலிக்கத் தொடங்கின. சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்தன.
கதவு உதைக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. கையில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் நான்கு பேர் உள்ளே நுழைந்தனர். அவர்களின் பின்னால் டாக்டர் திலீப் வந்தார்.
“விக்ரம்… நீ இவ்வளவு முட்டாளா இருப்பேன்னு எதிர்பார்க்கல. என்னோட கோடிக்கணக்கான ரூபாய் ப்ராஜெக்ட்டை ஒரு சாதாரணப் பத்திரிகையாளரும், தடயவியல் நிபுணரும் அழிக்க நான் விடமாட்டேன்,” என்றார் திலீப் குரூரமாக.
“வினோத்தையும், ரிஷியையும் நீதான் கொன்னியா?” விக்ரம் கேட்டான்.
“கொன்னேன்னு சொன்னா உன்னால என்ன செய்ய முடியும்? சாட்சியே இல்லாத அந்தக் கொலைகளை உன்னால எப்படி நிரூபிக்க முடியும்? இப்போ… நீயும் உன் தோழியும்கூட காணாமப் போகப் போறீங்க!”
திலீப் தனது ஆட்களுக்குச் சைகை செய்தார். துப்பாக்கிகள் விக்ரமை நோக்கி நீட்டப்பட்டன.
“விக்ரம், உனக்கு ஒரு கடைசி வாய்ப்பு தர்றேன். அந்தக் காமிராவை என்னிடம் கொடுத்துவிடு. உன் தோழியை நான் விட்டுடறேன். நீ மட்டும் என் ‘ப்ராஜெக்ட் ஃபீனிக்ஸ்’ திட்டத்திற்கு ஒரு சோதனை எலியாக மாறினால் போதும்,” என்று திலீப் குரூரமாகச் சிரித்தார்.
ஆனால் விக்ரமின் கண்கள் அந்த அறையின் ஓரத்தில் இருந்த நைட்ரஜன் சிலிண்டர் மீது நிலைத்தது.
“டாக்டர்! அந்தக் காமிராவில் இருந்ததைக் கணினியில் பதிவேற்றியாச்சு. நீங்கள் எங்களைக் கொன்றால், பத்து நிமிடங்களில் இந்த உலகமே உங்கள் முகமூடியைக் கிழிக்கும்,” என்றான் விக்ரம் நிதானமாக.
திலீப்பின் சிரிப்பு சட்டென மறைந்தது. “பொய் சொல்லாதே! இங்கே ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. உன்னால் எதையும் அனுப்ப முடியாது.”
திலீப் பேசுவதை முடிப்பதற்குள், விக்ரம் தன் சட்டைப் பையிலிருந்த ஒரு சிறிய ரசாயனப் பந்தைத் தரையில் வீசினான். அது வெடித்து அந்த அறை முழுவதும் அடர்த்தியான புகையை உருவாக்கியது.
விக்ரம் அருகில் இருந்த ஒரு இரும்பு ஸ்டூலை எடுத்து அந்த நைட்ரஜன் சிலிண்டரின் வால்வை உடைத்தான்.
சிலிண்டரிலிருந்து அதிக அழுத்தத்துடன் வெளிப்பட்ட நைட்ரஜன் வாயு, புகையுடன் கலந்து ஒரு பெரும் குழப்பத்தை உருவாக்கியது. திலீப்பின் ஆட்கள் கண் தெரியாமல் தடுமாறித் தாறுமாறாகச் சுடத் தொடங்கினர்.
“சுடாதீங்கடா முட்டாள்களே! அந்தப் பெட்டிகள் உடைஞ்சா நாம எல்லோரும் செத்துடுவோம்!” என்று திலீப் கத்தினார்.
அந்தப் புகைக்குள் விக்ரம், மாலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு திறந்திருந்த கதவின் வழியே வெளியேறினான்.
அவர்கள் இப்போது மருத்துவமனையின் பின் பக்கமாக இருக்கும் பார்மசி குடோனுக்கு வந்திருந்தார்கள். அங்கே சிலர் பல பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
“விக்ரம்! அதெல்லாம் மனித உறுப்புகளை வைக்கிற கண்டெய்னர்கள்தானே?” என்றாள் மாலா.
ஒவ்வொரு பெட்டியிலும் ‘ப்ராஜெக்ட் ஃபீனிக்ஸ்’ என்று எழுதப்பட்டிருந்தது. உறுப்புகளை இவர்கள் கருப்புச் சந்தையில் விற்க அனுப்புகிறார்கள் என்பது விக்ரமுக்குப் புரிந்தது.
திடீரென மாலாவின் கையிலிருந்த காமிரா திலீப்பால் பறிக்கப்பட்டது.
“நீங்க பிடுங்குன அந்த கேமரா வெறும் பொம்மை டாக்டர். உண்மையான கேமரா என்னோட பட்டன்ல இருக்கு. நான் ஒரு தடயவியல் நிபுணன் மட்டுமல்ல; நான் ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கரும் கூட.”
நாலாவது தளத்துல நான் இருந்த அந்தப் பத்து நிமிஷத்துல, அங்கிருந்த ‘ப்ராஜெக்ட் ஃபீனிக்ஸ்’ மெயின் சர்வர்ல ஒரு வைரஸை ஏத்திட்டேன். அடுத்த அஞ்சு நிமிஷத்துல அந்த சர்வர்ல இருக்குற எல்லா டேட்டாவும் தானா டெலீட் ஆகிடும். அதைத் தடுக்கணும்னா, நான் ஒரு பாஸ்வேர்டு டைப் பண்ணனும்,” என்றான் விக்ரம் உறுதியான குரலில்.
திலீப்பின் முகம் வெளுத்தது. அந்தப் புராஜெக்ட் அவரது பத்து ஆண்டு கால உழைப்பு; பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு. அது அழிந்தால் அவர் தெருவுக்கு வந்து விடுவார்.
அப்போது திலீப்பின் போன் அலறியது. மருத்துவமனையின் ஐடி பிரிவில் இருந்து அழைப்பு வந்தது.
“சார்! சர்வர்ல ஏதோ மால்வேர் அட்டாக் நடந்திருக்கு. டேட்டா எல்லாம் அழிஞ்சுகிட்டு இருக்கு!”
திலீப் பதற்றத்தில் கத்தினார். “விக்ரம்! தை நிறுத்து! இல்லைன்னா உன்னையும் உன் தோழியையும் இப்போதே சுட்டுடுவேன்!”
“எங்களைச் சுட்டா உங்களுக்கு அந்தப் பாஸ்வேர்டு கிடைக்காது டாக்டர். அப்புறம் உங்க ‘ப்ராஜெக்ட் ஃபீனிக்ஸ்’ வெறும் சாம்பல்தான்.”
அதே சமயம், மாலா தனது போனில் எல்லாவற்றையும் ‘லைவ் டெலிகாஸ்ட்’ செய்துகொண்டிருப்பதை திலீப் கவனித்தார்.
“டாக்டர், இப்போ இந்த ஊரே உங்களைப் பார்த்துக்கிட்டு இருக்கு. நீங்க மாட்டிக்கிட்டீங்க!” என்று மாலா தைரியமாகச் சொன்னாள்.
திடீரென அந்த இடத்தில் சைரன் சத்தம் கேட்டது. பல போலீஸ் வாகனங்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டன.
மாலாவின் லைவ் வீடியோவைப் பார்த்த கமிஷனர் உடனடியாக அதிரடிப் படையை அனுப்பியிருந்தார். டாக்டர் திலீப் மற்றும் அவரது ஆட்கள் விலங்கிடப்பட்டனர்.
“சென்னையில் மனித உறுப்புத் திருட்டுக் கும்பல் பிடிபட்டது. பிரபல மருத்துவர் திலீப் கைது,” மாலா எழுதிய தலைப்புச் செய்தியைப் படித்த கௌரிசங்கர்,
“ரவி! வினோத்தைக் கொலை செய்தவனைச் சட்டத்தின் கையில் ஒப்படைச்சாச்சு. இனி சட்டம் தன் கடமையைச் செய்யும்,” என்றார்.

லீலா ராமசாமி
சின்னாளப்பட்டியை சார்ந்த திருமதி S.R. லீலா, லீலா ராமசாமி என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதி வருகிறார். தற்போது காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார்.
திருமதி லீலா ராமசாமி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனவளக்கலைப் பேராசிரியர். பணி ஓய்வுக்குப் பின் முகநூலில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
பல சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர். குமுதம், கல்கி, மாலைமலர், ஆனந்த சந்திரிகை, உரத்த சிந்தனை முதலிய பத்திரிகைகளில் இவரது படைப்புகள் பிரசுரமாகியுள்ளன.
இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு யோகா புத்தகங்கள் என்று பத்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

2 Comments on “லீலா ராமசாமி /ஒரு மார்ச்சுவரி மரணம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன