மரு. ச. கந்தசாமி/பச்சைக் கொடி

கலாவும் மாலாவும் சகோதரிகள். பார்த்தால் இரட்டையர்கள் என்று சொல்லலாம். ஆடைகளாகட்டும், நகைகளாகட்டும், இருவரும் ஒரே வடிவமைப்பில் அணிவார்கள். இருவரும் படிப்பில் சுட்டிகள். ஆனால், கலா மருத்துவர் ஆனாள்; மாலா அழகுக்கலை நிபுணர் ஆனாள்.
மூத்தவள் கலாவை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தனர். மாப்பிள்ளை வீட்டார், “பெண்ணை அழைச்சுட்டு வாங்கோ” என்றனர். கலாவின் அம்மா, “மாலா, கலாவைக் கூட்டிட்டு வாடி” என்றாள்.
கலா உள்ளே வர, எல்லோர் முகத்திலும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் தெரிந்தன. மாப்பிள்ளை, “நான் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும்” என்றார். கலாவின் பெற்றோர் சம்மதித்தனர்.
மாப்பிள்ளை கலாவிடம், “மேடம், உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், நான் விரும்புவதோ மாலாவைத்தான். இருவரும் சில காலமாகக் காதல் கொண்டுள்ளோம். எனவே, உங்கள் சம்மதத்துடன் எங்கள் காதல் திருமணத்தை நடத்தி வையுங்கள்” என்றார்.
அதிர்ந்து போன கலா, சட்டென்று சுதாரித்து, “என் தங்கைக்காக எதையும் தருவேன். உங்கள் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறேன்” என்றாள்.
இதையெல்லாம் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த மாலா, வண்ணத்துப்பூச்சியாய் மாறி ஓடிவந்து அக்காவைக் கட்டிக்கொண்டாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன