
வெகுநாட்களுக்குப் பிறகு தோழி நிறைமதியைச் சந்தித்த வெண்ணிலாவின் மனம் விம்மியது.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பட்டாம்பூச்சி போல் திரிந்துகொண்டிருந்தவள் இப்படி ஆகிவிட்டாளே என்று அவளது தோற்றத்தைக் கண்டு வருந்தினாள்.
சாதாரண வாயில் புடவை, கழுத்தில் கருகமணி, கையில் கண்ணாடி வளையல்கள், பேருக்குக்கூடப் பொட்டுத் தங்கம் இல்லை.
“ஏண்டி மதி, நம்ம கல்லூரி நாட்களில் பார்த்துப் பார்த்து அலங்காரம் பண்ணுவியே! உன்னோட அழகை ரசிக்கறதுக்கே ஒரு கூட்டமே இருந்துதேடி!”
“ஊம்… அந்த வளர்பிறை நாட்களெல்லாம் மனசுக்குள் பொக்கிஷமா இருக்குடி நிலா. என் கதையை விடு. ரொம்ப நாள் கழிச்சு உன்னைப் பார்த்தது மகிழ்ச்சியா இருக்கு.”
“பளிச்சினு உடுத்தியிருக்கே! முன்னாடியெல்லாம் ஏனோதானோன்னு டிரஸ் பண்ணுவ. இப்ப அழகா கொண்டை போட்டு, அதுல பூ சுத்தி வச்சு, எல்லாத்துக்கும் மேல உன் மூக்குத்தி டிசைன் சூப்பர்டி!”
அவளை இடைமறித்த வெண்ணிலா, “என்னை ரசிச்சது போதும். நீ ஏன் இப்படி இருக்கே? என்ன பிரச்சினை?” என்றாள்.
“ரெண்டு பொட்டைப் புள்ளைங்களுக்கு அம்மாங்கற அடையாளத்தைக் கொடுத்துட்டு ஓடிப்போயிட்டான் கட்டினவன்.”
“விடுடி, எல்லாம் படைச்சவன் பார்த்துப்பான்.”
தோழியின் மாறாத அடையாளமான தன்னம்பிக்கையைக் கண்டு பூரித்த வெண்ணிலா, அவளை ஆரத் தழுவிக்கொண்டாள்.
