
உடைந்து விழுவது போன்ற உருவம். இடது தோளில் மூட்டையில் மளிகைச் சாமான்கள். வலது கையில் பெரிய சாக்குப் பையில் காய்கறிகளும் பழங்களும். மொத்த விலையில் டவுனில் வாங்கி, கிராமத்தில் தன் வீட்டுத் திண்ணையில் சில்லறை வியாபாரம்.
கொளுத்தும் வெயிலில் நடந்து வரும் முனியனுக்குப் புளியமர நிழல் கொஞ்சம் ஆறுதலளித்தது. சுமைகளை இறக்க முடியவில்லை. மீண்டும் யார் தூக்கி வைப்பது? இன்னும் இரண்டு மைல் போல நடக்க வேண்டுமே!
தூரத்தில் சீமைக் காளையின் கொம்புகள் பளபளக்க, ஜல் ஜல்லென ஒலியுடன் பாய்ந்து வரும் மாட்டு வண்டியில் மாணிக்கம். பளிச்சென்ற உடையில், முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக அமர்ந்து ஓட்டி வந்தான். வண்டியில் யாருமில்லை.
மரத்தடியில் முகத்தைத் துடைத்தபடி நின்றிருந்த முனியனைத் தாண்டி, நூறடி தூரம் சென்ற வண்டி மெதுவாக நின்றது.
வண்டியிலிருந்து குதித்திறங்கிய மாணிக்கம், முனியன் அருகில் வந்தான். ஒருவரை ஒருவர் பார்த்தபடி சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன.
“மல்லி விருப்பப்பட்டுத்தான் என்கூட வந்தா. நல்லாத்தான் இருக்கிறோம். ஆனா, அவ மனசுல நீங்கதான் மிச்சூடும் இருக்கீங்க. மன்னிச்சு, மல்லிக்காகவாவது எங்களை ஏத்துக்கங்க மாமா. மல்லி இப்பம் முழுகாம இருக்கா, நாலு மாசம்.”
பேரனா, பேத்தியா? எதுவானால் என்ன? முனியனின் உள்ளே உறைந்து போயிருந்த நான்கு வருட வீராப்பும் கோபமும் எங்கோ உடைந்து நொறுங்கின.
சீமைக் காளை மேலும் குதித்து விரைவாக ஓடியது. எசமானோட மாமா வண்டியில இருக்காருல்லா!
