
“அப்பா, எனக்குச் சைக்கிள் வாங்கிக் கொடுங்க!”
எட்டாவது படிக்கும் மகன் சுரேஷ் கேட்டதும், சேகருக்குச் சட்டென்று கோபம் வந்தது.
“சைக்கிளும் கிடையாது, ஒண்ணும் கிடையாது. போடா!”
சாதாரணமாகக் கோபமே வராத அப்பாவுக்கு என்ன ஆச்சு? அதுவும் அவன் தப்பாக எதுவும் கேட்கவில்லையே! சைக்கிள்தானே கேட்டான். இதற்குப் போய் இப்படி ஒரு கோபமா?
மறுபடியும் கேட்டபோது, “பளார்!” என்று கன்னத்தில் அறை விழுந்தது.
மகனை அறைந்த சேகர், கோபத்துடன் வெளியேறினான்.
தேம்பிக்கொண்டிருந்த மகனை ஆதரவோடு அணைத்துக்கொண்டாள் சுமதி.
“அப்பா ஏம்மா இப்படிக் கோவிச்சுக்கறார்?”
சுமதி மெதுவாக அவன் தலையை வருடியபடி சொன்னாள்:
“எல்லாம் ஈகோதான்! சின்ன வயசுல உங்கப்பா, தாத்தாவோட சைக்கிள்ல குரங்குப் பெடல் போட முயற்சி பண்ணியிருக்கார். நாலஞ்சு தடவை முயற்சி பண்ணியும் முடியாம, சைக்கிளோட கீழே விழுந்திருக்கார். இதைப் பார்த்துக்கிட்டிருந்த எதிர்வீட்டுப் பொண்ணு சட்டுன்னு வந்து, அந்தச் சைக்கிள்ல ஸ்டைலாகக் குரங்குப் பெடல் போட்டு ஓட்டிட்டுப் போயிட்டா. உங்கப்பாவோட நண்பர்களும் தெருக்காரங்களும் அவரைக் கிண்டல் பண்ணியிருக்காங்க. உங்கப்பாவுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்திருக்கு. அன்னையிலிருந்து சைக்கிள்னாலே அவருக்கு அலர்ஜி! அதனாலதான், நீ கேட்கிறதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிற உங்கப்பா, சைக்கிள் கேட்ட உடனே கோவிச்சுக்கிட்டு உன்னை அடிச்சிட்டார்.
“கவலைப்படாதே. கூடிய சீக்கிரமே நீ கேட்ட மாதிரி உங்கப்பா உனக்குச் சைக்கிள் வாங்கிக் கொடுப்பார்.”
சுமதி சொன்னது சுரேஷுக்குப் புரிந்ததோ இல்லையோ, வெளியே டென்ஷனுடன் நின்றுகொண்டிருந்த சேகரை யோசிக்க வைத்தது.
