கரந்தை இந்து/அம்மா சொன்னது

“அம்மா, அக்கா கங்கா செலுத்திய விமானம் இந்நேரம் தரையிறங்கியிருக்கும். அவளுடைய முதல் விமானப் பயணம் எப்படி இருந்திருக்கும்! ஆரத்தி, மாலை எல்லாம் தயார்!” என்றாள் சின்னவள் சாந்தி.
வீடே பரபரப்பாக இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் கங்கா காரிலிருந்து இறங்கி, ஓடி வந்து சந்தோஷமாக அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.
“அம்மா, நான் எட்டு வயதில் சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்டபோது நீ சொன்னது இன்னமும் நினைவில் இருக்கிறது. ‘எந்தக் காரணத்தாலும் பாதியில் நிறுத்தாமல் நன்றாகக் கற்றுக்கொள். ஆனால், சைக்கிள் ஓட்டுவதோடு உன் முயற்சியை நிறுத்திவிடாதே’ என்றாய்.
“குரங்குப் பெடலில் ஆரம்பித்த பயணம், மெல்ல மெல்ல சைக்கிள் ஓட்டுவதில் தேர்ச்சி பெற உதவியது. அதில் கிடைத்த மனத்துணிவு, யாரையும் சார்ந்திருக்காமல் சொந்தக் காலில் நிற்கும் சுதந்திரம், விழுந்தாலும் உடனே எழுந்து நிற்கும் உடல் வலிமை ஆகியவை என் மனதைப் பக்குவப்படுத்தின. நீ சொன்னதன் அர்த்தம் இப்போது புரிகிறது. கற்பதை நிறுத்தாமல் தொடர்ந்து முயன்றதால்தான் இன்று விமானியாக உன் முன்னால் நிற்கிறேன்!”
“எனக்குக் கிடைக்காத வாய்ப்பு உனக்குக் கிடைத்து, நீ வெற்றி பெற்றதில் பெருமை மகளே!” என்று முகம் மலரச் சொன்னாள் அம்மா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன