கி. பார்வதி/பாடம்

“சுதா, கவிதா, மாலா எல்லோரும் வாடகை சைக்கிள் ஓட்டிப் பழகுறாங்கம்மா! எனக்கும் சைக்கிள் ஓட்டிப் பழக ஆசையாயிருக்கு. ஒரே ஒரு மணி நேரத்துக்கு மட்டும் காசு கொடுங்கம்மா!”
“ஒழுங்காப் படிக்கிற வழியைப் பாரு. நீ ஒண்ணும் சைக்கிள் ஓட்டிப் பழக வேண்டாம்!”
காசில்லாத கொடுமை! அம்மா கடிந்துகொண்டாள்.
அம்மா மறுத்ததால், எப்படியாவது சைக்கிள் ஓட்டிப் பழக வேண்டும் என்ற வெறி பிரியாவுக்கு வந்தது.
அம்மா முருங்கைக்காய் விற்று வைத்திருந்த காசிலிருந்து, ஒரு மணி நேரத்துக்கான பணத்தை எடுத்துக்கொண்டு, வாடகை சைக்கிள் எடுத்துப் பழகினாள். அவளுக்குப் பெருமிதம் தாங்கவில்லை.
அடுத்த நாள் காலையில், அம்மா தேயிலை வாங்கப் பணம் எடுக்கும்போது, கொஞ்சம் பணம் குறைந்திருந்தது.
பிரியாதான் பணத்தை எடுத்திருப்பாள் என்று அம்மா கண்டுபிடித்துவிட்டாள்.
“இந்தக் கைதானே சொல்லாமல் பணத்தை எடுத்தது!” என்று சொல்லி, பிரியாவை விளாசித் தள்ளிவிட்டாள்.
“மன்னிச்சுடும்மா!” என்று பிரியா கெஞ்சினாள்.
அவள் விளையாடக்கூட வெளியே செல்லவில்லை. யாரிடமும் பேசவில்லை. குழந்தையை அடித்ததற்காக அம்மா வருந்தினாள்.
தன் தோட்டை அடகு வைத்துப் பழைய சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தாள்.
பிரியா சைக்கிள் ஓட்ட மட்டும் கற்றுக்கொள்ளவில்லை; சொல்லாமல், கொள்ளாமல் பிறர் பொருளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதையும் கற்றுக்கொண்டாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன