
மணி சுமார் ஏழு இருக்கும்.
சரவணன் ஆபீஸ் ஜீப்பில் வீட்டுக்கு வந்து இறங்கியதும், சொல்லி வைத்தாற்போல பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அதோடு, இரட்டைத் தவில் முழங்குவதுபோல் பயங்கர இடி. நடுநடுவே பளிச் பளிச்சென்று மின்னல்.
அப்பாவைப் பார்த்ததும், ஆறு வயது மகள் கவிதா ஓடிவந்து, “அப்பா! அப்பா!” என்று அவர் முன் நின்று சிணுங்கினாள்.
“என்னடா வேணும் என் செல்லத்துக்கு?” என்று சரவணன் கொஞ்சினான்.
அதைப் பார்த்த வள்ளி, மகளை அதட்டியபடி, “ஆமாம், உங்க பொண்ணுக்கு எப்பவும் எதையாவது வாங்கிக்கொடுத்துக்கிட்டே இருக்கணும். இன்னிக்கிப் பெரிய பட்ஜெட்!” என்றாள்.
“உடனே சைக்கிள் வேணுமாம். அப்பா வேலைக்குப் போயிட்டு வந்திருக்காரே! ஒரு டம்ளர் டீயாவது குடிக்க விடறாளா?” என்று வள்ளி கோபத்தின் உச்சியில் இருந்தாள்.
“குழந்தையைத் திட்டாதே, வள்ளி!”
“நீ வாடா செல்லம்! மழை நிக்கட்டும். நாம சைக்கிள் வாங்கலாம்!” என்றான் சரவணன்.
மகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
“அப்பா, அப்பாதான்! அம்மா எப்பவும் இப்படித்தான்!” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
மழை விடுவதாகத் தெரியவில்லை.
சரவணன் தனக்கு நன்கு தெரிந்த சைக்கிள் கடைக்குப் போன் செய்து, விரும்பிய பிராண்டின் பெயரைச் சொல்லி, நல்ல சைக்கிள் ஒன்றை வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான்.
“நீங்கதான் அவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்கிறீங்க. அவள் எல்லாத்துக்கும் பிடிவாதம் பிடிக்கிறா!” என்று வள்ளி சரவணனிடம் கோபித்துக்கொண்டாள்.
சைக்கிள் வருமென்ற எதிர்பார்ப்பிலேயே கவிதா தூங்கிவிட்டாள்.
இரவு சுமார் பத்து மணிக்கு சைக்கிள் வந்தது.
காலையில் கண் விழித்ததும் கவிதாவின் பார்வையில் முதலில் பட்டது சைக்கிள்தான்!
சரவணன் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துவிட்டு, மகளுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான்.
அவள் அப்பாவின் மகள்!
