
பெஹலா மார்க்கெட் பகுதியில் உள்ள மலையாளக் கடையில் மதிய உணவை முடித்துவிட்டு, அறைக்குச் சென்று குட்டித் தூக்கம் போட்டேன். மாலையில் நாலைந்து துர்கா பூஜைப் பந்தல்களை ரசிக்க வேண்டும். இங்கு மூன்று வருடங்களுக்கு மேல் தங்க முடியாது. இருக்கும் காலத்தில் ஊரிலுள்ள எல்லாப் பந்தல்களையும் தினமும் நாலைந்து எனப் பார்த்து முடிக்க வேண்டும். நேற்று பாலிகஞ்ச் பகுதியை ரசித்தேன். இன்று வட கல்கத்தா. விமான நிலையத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏறினேன். சோர்பகான் பகுதியைப் பார்க்கப் புறப்பட்டேன்.
வெளியே மழை தனது வருகையைச் ‘சோ’ என அறிவித்துக்கொண்டிருந்தது. நல்லவேளை, கையில் குடை இருக்கிறது.
மழை விடவில்லை. அதன் அடர்த்தி கூடிக்கொண்டே போனது. துர்கா தேவியைத் தரிசித்துவிட்டு மெதுவாக நகர்ந்தேன். எனக்குப் புரியாத மொழியில் வேகமாகப் பரப்பப்பட்ட எச்சரிக்கைகள் காற்றில் மிதந்தன. எல்லோரும் வெளியேறும் வாசலை நோக்கி ஓடினர். ஒரே வாசல்தானோ? திகைப்பில் நானும் ஓடினேன். பின்னாலிருந்து தள்ளுதல்கள், இடிகள். தலை எங்கோ மோதி, தரையில் விழுந்தேன். முதுகிலும் கை கால்களிலும் நூற்றுக்கணக்கான மிதிகள். சுயநினைவை இழந்தேன்.
மருத்துவமனையில் கண்விழித்தபோது, மருத்துவர், “நீங்கள் அதிர்ஷ்டசாலி; உயிருக்கு ஆபத்தில்லை. பத்து நாட்களில் குணமாகிவிடுவீர்கள். 19 பேர் இறந்துவிட்டார்கள்” என்று அதிர்ச்சித் தகவலைச் சொன்னார்.
