
நகரத்தின் சுவர்களையெல்லாம் தூரிகையால் அழகுபடுத்திய ஓவியன் உஷாகாந்த். முந்தைய இரவு தொலைக்காட்சியில், பக்தியால் அம்மனின் அருளைப் பெற்ற சுருளிராஜனின் ஆதிபராசக்தி படக்காட்சியைப் பார்த்தான். அக்காட்சி அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது.
படுத்த படுக்கையாக இருந்த தன் தாயின் நிலையைக் கண்டு உருகியவன், “அம்மா, இந்த நவராத்திரியில் துர்க்கையை நம் வீட்டுச் சுவரில் வரைகிறேன். அவள் அருளால் நீ குணமாவாய்” என்று கூறி விரதத்தைத் தொடங்கினான்.
இரவெல்லாம் கண்விழித்து, தன் அன்பையும் பக்தியையும் குழைத்து, சிம்மவாகினியான துர்க்கையைத் தத்ரூபமாக வரைந்தான். அதிகாலையில் களைப்பு மேலிட, தூரிகை நழுவியது. சுவரோரமாகவே மயங்கித் தூங்கிவிட்டான்.
மெல்லிய கரங்களின் கதகதப்பான ஸ்பரிசத்தை உணர்ந்து அவன் கண்விழித்தான். பல மாதங்களாக எழ முடியாத தாய், தள்ளாடியபடி எழுந்து நின்று, அவன் தலையைத் தடவி, “மகனே!” என்றாள்.
சுவரில் வரைந்த அம்பிகையின் கனிவான கண்களும், எதிரே நின்ற தாயின் பாசப் புன்னகையும் அவனுக்கு ஒன்றாகவே தெரிந்தன. பக்திக்கு வடிவம் தாயே என்பதை உணர்ந்த அவன் கண்கள் பனித்தன.
