
சேறமை செருவினுட் செந்நெல் வான்முனை
வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார்
நாறிது பதமெனப் பறித்து நான்செய்வார்
கூறிய கடைசியர் குழாங்கொண்டு ஏகுவார்
வயல் வெளிகளில் பெண்கள் பாடிக் கொண்டே நாற்று நடுவதைப் பார்த்திருக்கலாம். களைப்புத் தெரியாமல் இருக்கவேண்டி. . அவ்வழியே செல்வோரை நிறுத்தி, இன்னிக்கு நடவு…ஏதாச்சும் கொடுத்திட்டுப் போங்க….என்று அன்பொழுகக் கேட்பார்கள். அவர்களின் வெள்ளந்தியான சிரிப்பையும், பணிவாய்க் கேட்கும் அந்தப் பண்பான தன்மையையும், அவர்களின் எளிமையையும் உதறிவிட்டு நம்மால் நகர முடியாது. அவர்களுக்கு உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கிறதோ இல்லையோ-நம்மால் முடிந்ததைக் கொடுத்துவிட்டுப் போவோம் என்று நாமும் மனமுவந்து ஏதேனும் ஒரு தொகையை விரும்பி அச்சாரமாக வழங்கிவிட்டுப் போவோம். அப்போதுதான் நமக்கும் நிம்மதி. அவர்களின் அன்பை அத்தனை எளிதாய் ஒதுக்கி விட இயலாது. இது இன்று நேற்றல்ல. காலம் காலமாக நம் கலாச்சாரத்தோடு கலந்த விஷயம். எளிய மக்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏதேனும் ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். அது நல்லொழுக்கத்தின்பாற்பட்டே விளங்கும்.
அப்படித்தான் சீவக சிந்தாமணியின் இப்பாடலிலும் உழவர்கள் தங்கள் வயல்வெளிப் பணியைச் செய்ய முனைகிறார்கள்.
சேறமை – சேறமை செறு – எனில் சேறு பதம்பட்ட வயல் என்று பொருள்.
அடுத்த வரியைப் பாருங்கள்
வீறொடு விளைகென – சிறப்புற விளைக என்று கையெடுத்துத் தொழுகிறார்கள். மனதிற்குள் வணங்கி வேண்டுகிறார்கள்.
அதாவது சேறு நிறைந்த கழனியிலே செந்நெல் மணிகளை வளம் பெருகட்டும், பொழிந்து விளையட்டும் என்று வேண்டி செந்நெல்லின் வெள்ளி முளைகளை விதைக்கிறார்கள்.
செந்நெல் மணிகள் நாற்றுகளாகின்றன. பிறகு அவை பிடுங்கி நடப்படுகிறது. இதை நாம் அறிவோம். விளைந்த நாற்றுக்களின் பதம் அறிந்து அவற்றைத் தரம் பிரித்து, அவற்றிற்கான நாள் குறித்து, வரிசை வைத்து நடுவதற்கு கடைசியரை அழைத்துச் செல்வர். இங்கே கடைசியர் என்பது உழத்தியரைக் குறிக்கிறது. உழவுத் தொழிலை வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்தான் உழத்தியர்.

செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம் என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறதுதானே?
–
பாடல் 45
