ஆர். வெங்கடேஷ்/தவறு தொடங்கும் இடம்

‘அச்சுத் தொழில் நச்சுத் தொழில்’ என்பார் என் அப்பா. அவர் காலத்தில் அதற்கு வேறு அர்த்தம். கையால் ஈய எழுத்துகளை எடுத்து ‘கம்போஸ்’ செய்தவர் என்பதால், அது உடல்நலத்தைக் கெடுக்கும் நச்சு. ஆனால், நான் ஒவ்வொரு நாளும் சந்திப்பது ‘ஃப்ரூப் தப்பு’ எனும் உளவியல் நச்சு.

எழுதி, செம்மைப்படுத்தும் இடத்தில் இருந்தே எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும், இரண்டு முறை பிழைத்திருத்தம் செய்தாலும், கடைசியில் எங்கேனும் ஒன்றிரண்டு பிழைகள் கரப்பான் போல் ரகசியமாக ஒளிந்திருக்கும். ஒரு எழுத்து முன்பின்னாக மாறியிருக்கும், புரண்டிருக்கும், ‘ஐ, ஆல், கு, இன், அது’ போன்ற வேற்றுமை உருபுகள் எங்கேனும் விடுபட்டிருக்கும். சொல்லப்படும் செய்தியிலேயே ‘லாஜிக்’ உதைக்கும். தகவல் பழையதாகியிருக்கும். புள்ளிவிவரம் பூச்சாண்டி காட்டும். கட்டுரையோடு வைக்கும் படம் பொருத்தமாக இராது. அல்லது தப்பாக இருக்கும்.

ஒவ்வொரு வரியையும் ‘இப்படிச் சொல்ல வேண்டுமோ, அப்படிச் சொல்லவேண்டுமோ’ என்று வாக்கிய பிழை வேறு பயமுறுத்தும். எல்லாவற்றுக்கும் மேல் என் இன்னொரு பயம், தப்பான இடத்தில் அழுத்தமோ, உயர்வு நவிற்சியோ வந்துவிட்டதோ என்று பதறுவேன்.
இரவு அச்சகத்தில் இருந்து அழைப்பு வரவில்லை என்றால் நிம்மதியாகத் தூங்குவேன்.

இரவு ஒன்பது மணியை ஒட்டி அலைபேசி அழைத்தால், என் ஆகிருதி, ஆளுமை, படிப்பு, புத்திசாலித்தனம், அனுபவம், திறமை அத்தனையும் ‘பொசுக்’கென அந்தக் கணத்தில் அதளபாதாளத்துக்குச் சரிந்துவிடும். ‘என்ன எழுதி என்ன? என்ன பேசி என்ன? என்ன யோசித்து என்ன? இந்தத் தப்பைக் கூட கவனிக்கத் துப்பில்லை, சுத்த வேஸ்ட்’ என்று உள்ளக் கண்ணாடி சட்டென்று சுக்குநூறாக உடைந்துவிடும்.

அச்சுப் பிழை என்பது என் ‘தான்’ என்ற அகங்காரத்தை அடித்து நொறுக்கும் மகாவில்லன். இன்னும் பணிவு வேண்டும், கவனம் வேண்டும், அக்கறை வேண்டும்…வரிசையாக எண்ணங்கள் அடுக்கிக்கொண்டே போகும். எங்கு திரும்பினும் தப்பு. மண்டை முழுக்க தப்புகள் பற்றிய அச்சம் தான் ஓடும்.

சின்ன வயதில் இருந்தே ‘தப்பு,’ ‘சரி’ பற்றி ஆழமாக வேரூன்றிய சிந்தனைதான் என்னை வாட்டி வதைக்கின்றன. லேவ் தால்ஸ்தோய், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி உள்ளிட்டோரைப் படித்ததால் வந்த வினைகளில் இதுவும் ஒன்று. எது தப்பு, எப்படி தப்பு என்று ஒன்றை வரையறை செய்கிறோம்? அப்படியென்றால் சரி என்றால் என்ன? ஏன் அதைச் சரி என்று ஒப்புக்கொள்கிறோம் என்றெல்லாம் தொடர்ச்சியான யோசனைகள் உண்டு.

எல்லா கேள்விகளுக்கும் தாய், ‘தப்பு எங்கு தொடங்குகிறது’ என்பது தான்.

பெரும்பாலும், சின்ன வயதில் நான் தப்பே செய்யாதவன், அல்லது தப்பே செய்ய முடியாதவன் என்ற இறுமாப்பு அதிகம் இருக்கும். நான் எப்படித் தப்பு செய்வேன் என்ற அகங்காரம் உள்ளே கொப்பளிக்கும். ஆனால், வாழ்க்கை ஒவ்வொரு ஆண்டாக புதிய புதிய தவறுகளைச் சுட்டிக் காட்டும். தனிநபர்கள் காட்ட வேண்டும் என்றில்லை. என் புத்தியே எனக்கு என் தப்பைச் சொல்லிக் காட்டும்.

முன்பெல்லாம், என்னிடம் தப்பு நேராது, மற்றவர்களிடம் தான் தவறுகள் மிகுந்துள்ளன. அவர்களுடைய கவனமின்மை, அக்கறையின்மை, பொறுப்பின்மை தான் தவறுகளுக்குக் காரணம் என்று என் மனம் எனக்குச் சமாதானம் சொல்லும். அது சால்ஜாப்பு, என் அகந்தைக்கு நான் போட்டுக்கொள்ளும் முகமூடி என்று வயது உயர உயர உணர்ந்துகொள்ளத் தொடங்கினேன்.

மூத்த எழுத்தாளர், பத்திரிகையாளர் ஒருவருடன் பழகும் போது, ஓர் உண்மை புலப்பட்டது. அவர் சொல்வார், “நான் சரியாகச் சொல்லவில்லையோ என்னவோ, தப்பு என் மேல் தான்… இப்போது மீண்டும் சொல்கிறேன்,” என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார். நான் திணறிப் போய்விடுவேன். அவருடைய அனுபவத்துக்கு அப்படிப் பேச வேண்டியவர் அல்ல. ஆனால், பேசுவார்.

சின்ன வயதில், எனக்கு கணக்குச் சொல்லித் தந்த ஆசிரியர், கொஞ்சம் வித்தியாசமானவர். அவருடைய வீட்டுக்கே போய் தனி வகுப்பில் கலந்துகொள்வேன். ஒரு முறை ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து, தபால் பெட்டியில் சேர்த்துவிடச் சொன்னார். இப்படி அவர் ஒரே வரியில் சொல்லவில்லை. ‘டேய், இந்தத் தெரு முக்குல போனா, லெஃப் ஹாண்ட் சைட்ல, ஒரு எலக்டிரிக் போஸ்ட் இருக்கும். அதுல சிவப்பா, ஒரு பெட்டி தொங்கிக்கிட்டிருக்கும். அதுல வாய் மாதிரி ஒரு ஓட்டை இருக்கும். அதுல இந்த லெட்டர உள்ளே தள்ளணும். உனக்கு ஹைட்டு பத்தலன்னா, யாராவது பக்கத்துல இருப்பாங்க. அவங்க கிட்ட குடுத்து, லெட்டரை உள்ளே போடச் சொல்லு.’ இப்போது ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன். இதைவிட இன்னும் விரிவாக, கடிதத்தை தபால் பெட்டியில் போடுவதை ஒரு காட்சியாகவே விவரித்து என் கண்முன்னே கொண்டுவந்துவிட்டார்.

அந்த வயதில் எரிச்சலாக இருந்தது. ஆனால், இன்று திரும்பிப் பார்க்கும் போது, 16 வயது பையனுக்கு என்ன தெரியும், எல்லா விவரங்களையும் சொல்லி அனுப்பினால் தான் அவன் சரியாகச் செய்வான் என்ற பரிவு அவரிடம் இருந்தது புரிகிறது.

சமூகத்தில் சரி, தவறு பற்றிய ஒரு பரந்துபட்ட புரிதல் இருக்கிறது. அது சமூகம், சிறு வயதில் இருந்தே ஒவ்வொருவர் மனத்தில் விதைத்திருக்கும் மதிப்பீடுகளில் இருந்து உருவானது. ஒழுக்கம் சார்ந்து, வாழ்வியல் சார்ந்து உருவாகும் இந்தக் கட்டமைப்பு தான் ஒரு மனிதனை உள்ளிருந்து ஒளிரும் விளக்கு போல் வழிநடத்துவது.

இதேபோல், ஒவ்வொரு துறையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளையும் நியமங்களையும் பின்பற்றுவதை ‘சரி’ என்றும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவற்றைத் ‘தவறு’ என்று வரையறை செய்திருக்கிறோம். எல்லா காலத்துக்கும் பொருத்தமான ‘சரி,’ ‘தவறு’ உண்டா என்றால் நிச்சயம் உண்டு. அது காலங்காலமாக நமது சமூக மனது சொல்லித்தரும் வரையறை. நமது தொன்மங்கள் நம் அடிமனத்தில் உட்கார்ந்து சுட்டிக் காட்டும் திசை அது.

ஆனால், ‘தவறுகள் எங்கிருந்து தொடங்குகின்றன?’ என்ற கேள்வி மட்டும் சத்தியமானது. அது அடுத்தவரிடம் நிகழ்வதில்லை. என்னிடம் இருந்து தான் என் தவறு தொடங்குகிறது. நான் சந்தித்த ஒவ்வொரு பிரச்னையையும் இப்போது யோசித்துப் பார்த்தால், நான் எங்கே தவறு செய்தேன் என்று தான் மனம் சிந்திக்கிறது.

நான் ஒன்று நிஜம் என்று நம்பி ஒரு வேலையில் இறங்குகிறேன். அதில் போதிய அனுபவமும், தெளிவும் இருக்கிறது என்ற இறுமாப்பு என் மனத்தில் இருக்கிறது. அல்லது எல்லாவற்றையும் எளிதில் முடித்துவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கை இன்னொரு புறம். ஒரு வேலையைத் தொட்ட பின்னர் தான் அது தன் சிக்கலை காண்பிக்கிறது. ஒன்றுமில்லை. ஒரு மொழிபெயர்ப்பு வேலையை எடுத்துக்கொள்வோம். அது என்ன பெரிய கம்பசூத்திரமா என்று நினைத்து மொழிபெயர்க்க ஆரம்பிப்பேன். அது தன் முகத்தைக் காட்டும். தன் தனித்துவத்தைக் காட்டும். நுட்பத்தைக் காட்டும். நீ வைத்திருக்கும் பொறிக்குள் அகப்பட்டுவிடுவேனா என்று ஓடி ஒளியும் எலி போல் எழுத்துகள் வளைய வரும்.

பிரதியில் தவறு இல்லை. அதன் மொழியில் தவறு இல்லை. நான் அதை எளிதாக கருதினேன் அல்லவா? அது தான் தவறு. நான் எடை போட்ட விதம் தவறு. அனுமானம் தவறு. அங்கே எட்டிப் பார்த்தது என் அகந்தை. மொழிபெயர்க்கத் தொடங்குவதற்கு முன்பு, அந்தக் கட்டுரையை ஒன்றுக்கு இரண்டு முறை நிதானமாக படித்துப் பார்த்து, அதன் உள்நுட்பங்களை மனத்தில் வாங்கி, பின் வணங்கி, ‘பிரதியே, உன் சானித்தியத்தைக் காட்டு, நான் உனக்கு அடிமை’ என்று சொல்லித் தொழுது, பின்னர் மொழிபெயர்க்கத் தொடங்கினால், மொழி வசப்படும். பொருள் வசப்படும்.

தவறுக்காக அடுத்தவரைக் கோபித்துக் கொள்வதிலோ, எரிந்து விழுவதிலோ, எரிச்சல் அடைவதிலோ பொருளில்லை. தவறு தொடங்கிய இடம் இங்கே என்னிடம் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. நான் எது எனக்குச் சரி என்று சொல்லாதவரை, அடுத்தவருக்கு அவருடைய சரி தான் சரி. என் சரி, அவருடைய சரி அல்ல. என் தவறும், அவருடைய தவறு அல்ல. தொடர்புச் சிக்கல் இங்கே இருந்து தான் தொடங்குகிறது.

என் கணக்கு ஆசிரியரை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்வேன். அந்தப் பரிவு தான் உண்மையான அணுகுமுறை. அடுத்தவரை வளர்த்தெடுக்கும் உத்தி. சரியான திசையில் வழிநடத்துவதற்கான வழிமுறை.

தப்பு தொடங்கும் இடம் தெரிந்தபிறகு, இப்போதெல்லாம் கோபமோ, எரிச்சலோ ஏற்படுவதில்லை. மூத்த எழுத்தாளர், பத்திரிகையாளர் எனக்குச் சொன்னது போல், “நான்தான் சரியாக சொல்லவில்லையோ, என்னவோ…” என்பதை வலுவாக நம்புகிறேன்.

© ஆர். வெங்கடேஷ் / 9841053881
என் வாட்ஸ் ஆப் சேனலைப் பின்தொடர:
https://whatsapp.com/channel/0029Vb8QUULAjPXT0Bvig803

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன