
சிவா அம்பாளின் படத்திற்கு முன் நமஸ்காரம் செய்தான். தன் வண்டியைத் தள்ளிக்கொண்டு, நேர்காணல் நடக்கும் அலுவலகத்திற்குப் புறப்பட்டான்.
தெருமுனையில் இரண்டு வயதுக் குழந்தை அழுதுகொண்டு நின்றிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை. வண்டியின் முன் குழந்தையை நிற்க வைத்தான். அந்தக் குழந்தை சொன்னது அவனுக்குப் புரியவில்லை.
சிறிது தூரம் சென்றவுடன், ஒரு கடையில் வண்டியை நிறுத்திப் பிஸ்கட் வாங்கிக் குழந்தையிடம் கொடுத்தான். பிறகு, நேர்காணல் நடக்கும் அலுவலகத்திற்குச் சரியான நேரத்தில் செல்ல வேண்டுமே என்று நினைத்து அங்கே சென்றான். குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்று பிறகு யோசிக்கலாம் என மனதிற்குள் கூறிக்கொண்டான்.
சிவா அலுவலகத்திற்கு வந்தான். வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் அந்தக் குழந்தையை உட்கார வைத்தான்.
அங்கிருந்த மேனேஜர், “சார், குழந்தை திரும்பி வந்துவிட்டான். சீக்கிரம் வாங்க!” என்றார்.
அறையிலிருந்து எம்.டி. வெளியே வந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டார்.
“சார், உங்களுக்கு ரொம்ப நன்றி! என் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டீர்கள்!” என்றார் எம்.டி.
“உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நான் செய்கிறேன்” என்றார்.
சிவா நடந்ததைக் கூறினான்.
“ஓ… அப்படியா? கட்டாயம் உங்களுக்குத்தான் இந்த வேலை!” என்றார் எம்.டி.
“இந்தாங்க, ஆர்டர்!” என்று வேலைக்கான உத்தரவைக் கொடுத்தார்.
சிவா மேலே பார்த்தான். சுவரில் அம்பாளின் படம் இருந்தது.
இதுதான் அம்பாளின் அருள்!
