WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு அ. கௌரி சங்கர் எழுதிய ” கேசவ் என்ற கேசவன் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:

சென்னை நகரின் புராதன வணிக ஸ்தலம் என்று சொல்லப்பட்ட பாரிஸ் கார்னர். காலை 11.00 மணி. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோவிந்தப்பன் தெரு பன்னிரண்டாம் இலக்கத்தில் அமைந்திருந்தது – “அம்புஜா மெட்டல் ஸ்டோர்ஸ்.”
கடையில் இருந்து வெளியில் வந்த கேசவ் என்ற கேசவன், தன்னுடைய வலது கையில் வைத்திருந்த சூட் கேஸை ஒரு முறைக்கு இரு முறை பார்த்துக்கொண்டான்.
தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தவன், சற்று தூரத்தில் இளைப்பாறிக்கொண்டு இருந்த ஒரு ஆட்டோவை நெருங்கி ஆட்டோவின் ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தான். போக வேண்டிய இடத்தைச் சொல்லியவன், எந்தவிதமான பேரமும் பேசாமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டான். கிட்டத்தட்ட அரை மணி நேர பயணம். எழும்பூர் தாண்டி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் வழியாக வந்த ஆட்டோ மந்தைவெளி ராமநாதன் வீதியில் ஒரு அபார்ட்மெண்ட் முன்பு வந்து நின்றது. விலாசம் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்த கேசவ், ஆட்டோவை அனுப்பி விட்டு சிறிது தூரம் நடந்து சென்று, பச்சை நிற கேட் முன்பு வந்து நின்றான். அது ஒரு தனி வீடு. விலாசம் சரிதான் என்று சொல்லியது, வீட்டின் முகப்பில் இருந்த போர்டு –
எம். விஸ்வநாதன்,
மனநல மருத்துவர்.
கேட்டைத்திறந்து உள்ளே நுழைந்தவனை, வழி மறித்தாள் ஒரு பெண். ‘மருத்துவரின் உதவியாளராக இருக்கக்கூடும்’- அவன் நினைத்துக்கொண்டான்.
“நான் டாக்டரைப்பார்க்க வேண்டும்.”
“Appointment வாங்கியிருக்கிறீர்களா ? “
“இல்லை, நான் திருச்சியில் இருந்து வருகிறேன். மருத்துவரைப் பார்த்துவிட்டு, உடனே திருச்சி திரும்ப வேண்டும்.”
சிறிது நேரம் உள்ளே சென்ற பெண், மீண்டும் திரும்பி வந்து அவனை மருத்துவர் அறைக்கு செல்லுமாறு சொன்னாள்.
ஓரளவு பெரிய வீடு. வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் வீட்டில் நுழைந்தவுடன், இடது புறம் ஒரு பெரிய அறை. அதற்கு எதிர்த்தாற்போல் இன்னொரு அறை. இடது புறத்தில் உள்ள அறையில் மருத்துவரைப்பார்க்க வருபவர்கள் அமரும் வகையில் பல இருக்கைகள் இருந்தன. வலது புறத்தில் உள்ள அறை பயன்பாட்டில் இல்லாதது போன்று இருந்தது. அதனைத் தாண்டி இருந்த மருத்துவர் அறைக்குள் நுழைந்தான் கேசவ்.
மென்மையான சந்தன வாசம் அறை முழுவதும் பரவி இருந்தது. ஒரு பெரிய மேசையின் முன்பு இரண்டு இருக்கைகள் இருந்தன. எதிர்புறம் மருத்துவர் விஸ்வநாதன் அமர்ந்து இருந்தார்.
உள்ளே நுழைந்தவனை, அங்குலம், அங்குலமாக அவர் ஆராய்வதை, அவன் உணராமல் இல்லை. மருத்துவர் சைகை காட்ட, அவன் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.
“என் பெயர் கேசவ். நான் திருச்சியில் இருந்து வருகிறேன்.”
“என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளலாமா ?
“என்ன டாக்டர் – இப்படி கேட்டுடீங்க. மனதில் பிரச்சினை உள்ளவர்கள் தான் உங்களை பார்க்க வருவார்கள்.”
“இருக்கட்டும், திருச்சியில் மருத்துவர்கள் இல்லையா?”
“இருக்கிறார்கள். சென்னையில் நீங்கள் பிரபலமானவர் என்று தெரிந்து தான் அங்கிருந்து வந்து இருக்கிறேன். “
கேசவ் அந்த காலை நேரத்தில் அப்படிச்சொல்லியது விஸ்வநாதனை புல்லரிக்கச்செய்தது. மெதுவாக கேசவ் பார்க்காத வகையில், கர்ச்சீப் எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டவர், தண்ணீர் பாட்டிலை எடுத்து இரண்டு மடக்கு தண்ணீர் குடித்துக்கொண்டார்.
“சரி சொல்லுங்க.”
“எப்படி ஆரம்பிக்கணும் ?”
“எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம். மனம் சம்பந்தமானது என்பதால், எதையும் மறைக்காமல் நீங்கள் சொல்லுங்கள். நேரத்தைப்பற்றிய கவலை வேண்டாம். தேவைப்படும்போது இடையிடையே நான் கேள்விகள் கேட்டுக்கொள்ளுகிறேன். “
“என் பெயர் கேசவ்.”
“அதைத்தான் சொல்லி விட்டிர்களே ?”
“நான் ஒரு சாது. அதே நேரத்தில், ஒரு மூர்க்கனும் கூட. பெரும்பாலான நேரங்களில் நான் சாது. சில நேரங்களில் நான் மூர்க்கனாக மாறி விடுவேன். நான் மூன்று சம்பவங்களை சொல்லுகிறேன். அதை வைத்தே நீங்கள் என்னுடைய குணாதிசயங்களை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.”
“எனக்கு அப்போது வயது 12 இருக்கும். ஏழாவது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். என்னுடைய வகுப்பில் 30 மாணவர்கள். நான் என்னுடைய பையில் இருந்து நான்கு பென்சில்களை எடுத்து சீவிக்கொண்டு இருந்தேன். ஆங்கில வகுப்பு முடிந்த பிறகு, அடுத்ததாக ஓவிய வகுப்பு. அதற்கான ஓவியம் வரைவதற்கான சார்ட், பென்சில்கள், கிரையான்கள் போன்றவற்றை அனைவரும் தயார் செய்து கொண்டு இருந்தோம். என்னுடைய மேசையில் வரிசையாக ஓவியம் வரைவதற்கான பொருட்களை அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தேன். ஓவிய ஆசிரியர் வரும் நேரம்.”
“என்னுடைய சக மாணவன் சவுந்தர் – என்னருகில் வந்தவன், நான் சீவி வைத்திருந்த ஒரு பென்சிலை எடுத்து மேசையில் குத்தி, நுனியை உடைத்து விட்டான். மீண்டும் நான் அதை சீவியாக வேண்டும். சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கே வந்தவன், ஒரு கிரேயானை எடுத்து, சார்ட் பேப்பரில் கிறுக்கி விட்டு சென்று விட்டான். இனி அந்த சார்ட் பேப்பரை நான் பயன்படுத்த முடியாது. மூன்றாவது முறை அங்கெ வந்தவன் இன்னொரு பென்சிலின் கூர் முனையை உடைத்து விட்டான். பொறுமையை நான் சுத்தமாக இழந்து விட்டேன். சட்டென்று அவன் இடது கன்னத்தில் ஒரு அறை விட்டேன். ஒரே அறையிலேயே அவனுடைய ஒரு பல் உடைந்து கீழே விழுந்து விட்டது. வாய் முழுவதும் ரத்தம். நான் அதை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கெட்ட நேரம். ஓவிய ஆசிரியர் அதே நேரத்தில் உள்ளே நுழைந்து கொண்டு இருந்தார். அவனுடைய வாயில் இருந்து ரத்தம் வருவதைக்கவனித்த அவர், என்ன நடந்து இருக்கும் என்பதை சரியாக விசாரிக்காமல் என்னை தலைமை ஆசிரியரிடம் கொண்டு சென்று விட்டு விட்டார். என்னுடைய பெற்றோர்களை வரவழைத்தனர். என்னுடைய தகப்பனார் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்த பின்னர் தான் நான் மீண்டும் வகுப்பில் நுழைய முடிந்தது.”
கேசவ் சிறிது நிதானித்தான். மீண்டும் தொடங்கினான்.
“என்னுடைய வீட்டில், என்னுடைய தகப்பனார், என்னுடைய தாயார், என்னுடைய அண்ணன் மற்றும் நான் – ஆக நான்கு நபர்கள் இருந்தோம். அண்ணன் என்னை விட 5 வயது மூத்தவன். 12வது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். தகப்பனார் ஒரு பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். அவருடைய முதலாளி கோபக்காரர். செய்யாத தவறுகளுக்கும், அவருடைய கடையில் வேலை பார்ப்பவர்கள் அவரிடமிருந்து திட்டுக்கள் வாங்கிய வண்ணம் இருப்பார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தைப்போக்க அவர் வாரத்தில் மூன்று நாட்கள் குடித்து விட்டு வருவார். காரணம் இருந்தாலும் சரி – இல்லாவிட்டாலும் சரி – என்னுடைய தாயாரை அடிப்பார், உதைப்பார், மிதிப்பார். எனக்கு ரத்தக்கண்ணீர் தான் வரும். “
“மன்னிப்புக்கடிதம் தந்து விட்டு வீட்டிற்கு வந்தவர், கோபத்தை என்னிடம் காட்டவேயில்லை. என்னுடைய தாயார் மீது காட்டினார். அன்றைய தினம் என்னுடைய தவறுகளுக்காக, என்னுடைய தாயார் வாங்கிய அடிகள் என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. நானும், என்னுடைய அண்ணனும் பயந்து போய் பீரோவின் பின்னால் ஒளிந்து கொண்டோம்.”
“இப்படியாக என்னுடைய தாயார் அடிகள் வாங்கி, வாங்கி, நான் 10 வது வகுப்பு படிக்கும்போது, நோய் வாய்ப்பட்டு முப்பதே நாட்களில் இறந்து விட்டார். எங்களை நல்ல முறையில் வளர்த்த தாயாரை நானும், என்னுடைய அண்ணனும் இழந்தோம். எந்த வகையிலும் திருத்த முடியாத தகப்பனார் என்ன செய்யப்போகிறார் என்று திணற ஆரம்பித்தோம். ஆனால், நினைத்ததற்கு மாறாக, என்னுடைய தந்தை அப்படியே மாறியும் போனார். குடியை நிறுத்தினார். எங்களை முடிந்த வரையில் நன்றாக கவனித்துக்கொண்டார். பல இரவுகளில் அவர் என்னுடைய தாயாரின் போட்டோ முன்பு மண்டியிட்டு அழுது கொண்டு இருந்ததை நான் கவனித்திருக்கிறேன். அவரும் உடல் நலன் குன்றிப்போனார். அண்ணன் சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான்.
“ஒரு நாள். வாங்கிய கடன் ரூபாய் 30000 மற்றும் வட்டி தரவில்லை என்று என்னுடைய வீட்டிற்கு ஒருவர் வந்தார். என்னுடைய தகப்பனாரை கண்டபடி திட்டினார். ஓரளவு பொறுத்துப்பார்த்த நான் அவரைத் திட்டாதீர்கள் என்று சொன்னேன். பட்டென்று என்னுடைய கன்னத்தில் அவர் அறைந்து விட்டார். பதறிப்போன என்னுடைய தகப்பனார் அவரை தடுத்து நிறுத்த முயல, வந்தவர் அவரையும் அறைய ஆரம்பித்தார். நான் பொறுமையை இழந்தேன். அருகில் இருந்த கழியை எடுத்து வந்தவர் முதுகில் விளாசு, விளாசு என்று விளாசினேன். இதற்கிடையில் அந்த வழியாக வந்தவர்கள் அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். பிரச்சினை வேறு மாதிரியாக மாறிவிட்டது. போலீசில் அவர் புகார் தர, பிறகு ஒரு வாரம் ஸ்டேஷனுக்கு நடையாக நடந்து பிரச்சினையை சமாளித்தது வேறு ஒரு கதை.
“அன்றிலிருந்து என்னுடைய தகப்பனார் மனமும் ஒடிந்து போய், ஆரோக்கியமும் குன்றி சில நாட்களில் இறந்தும் விட்டார். எனக்கு வயது 18. பிளஸ் 2 முடித்து விட்டேன். மேற்கொண்டு படிக்க வழியில்லை. “
“எனது தகப்பனார் மாதிரி கடைகளில் வேலை பார்க்க ஆரம்பித்தேன். என்னிடம் முரட்டுத்தனமாக, மற்றும் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் முதலாளிகள் மற்றும் சக தொழிலாளிகளை இரக்கம் காட்டாமல் தாக்க ஆரம்பித்தேன்.”
“இப்படியாக 10 வருடங்கள் கழிந்தன. எனக்கு திருமணம் ஆகவில்லை. எங்கும் நிலையான வேலை இல்லை. ஒரு கட்டத்தில் பொறுமைசாலி என்று பெயர் எடுத்தவன், கோபக்காரன் என்ற பெயரை தற்போது சுமந்து கொண்டு அலைகிறேன். எனக்கு நன்றாகவே தெரியும் – நான் அப்படிப்பட்டவன் இல்லை என்று. என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய தாயார் பட்ட சிரமங்கள், அதன் பிறகு என்னுடைய தகப்பனார் பட்ட சிரமங்கள் இவை அனைத்தும், என்னுடைய மனதை அதிகமாக பாதித்து, என்னை மூர்க்கனாக மாற்றி இருந்தன.”
“சார், நான் சொல்றதை கேட்கிறீங்களா?
“சொல்லுங்க. சொல்லுங்க. உங்கள் பிரச்சினைகளை ஒன்று விடாமல் சொன்னால் தான் உங்களைக்குணப்படுத்தும் வழியைக்கண்டு பிடிக்க முடியும்.”
“சார், நான் ஒரு கட்டத்தில் சாதுவாகவும், பொறுமைசாலியாகவும் இருக்கிறேன். இன்னொரு கட்டத்தில் அந்த குணங்களுக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத வகையில் மூர்க்கனாகவும் மாறி விடுகிறேன். என்னை சம நிலையில் வைத்துக்கொள்ள நான் மிகவும் தடுமாறுகிறேன். நான் எப்படியாவது என்னை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.”
தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரைக்குடித்த மருத்துவர், அவனிடம் கேட்டார் – “நீங்கள் இதுவரை மருத்துவர்களை சந்திக்கவேயில்லையா?”
“இது வரை எட்டு மருத்துவர்களை பார்த்து இருக்கிறேன். அவர்களால் என்னை சரிப்படுத்த முடியவில்லை அதனால் தான் உங்களிடம் வந்துள்ளேன். ஒரு கட்டத்தில் பொறுமையாக பிரச்சினைகளை கையாண்டு வந்தவன், தற்போது மிக விரைவில் கோபத்திற்கு ஆளாகி விடுகிறேன். நான் விரும்பியது கிடைக்கவில்லையென்றாலும், அடுத்தவரைத்தாக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது எனக்கு. சில கட்டங்களில் என்னையே எனக்கு பிடிக்காமல் போய் விடுகிறது.”
“டாக்டர், நீங்கள் எனக்கு டிரீட்மெண்ட் தருகிறீர்கள் என்றால், எந்தவிதமான டிரீட்மெண்ட் தருவீர்கள். வசியம் மூலம் தருவீர்களா? அதாவது என்னை மூளைச்சலவை செய்வீர்களா ?”
“அப்படியும் சொல்லலாம். இவ்வளவு ஆர்வத்தோடு நீங்கள் கேட்டதற்கு நான் மிகவும் சந்தோசம் அடைகிறேன். வசியம் என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம். அது இரண்டு வழிப்பாதை மாதிரி. மருத்துவத்தை வசியமாக பயன்படுத்தும் போது, அதை ஹிப்னோதெரபி என்று சொல்லுகிறோம். அதை எதிர்மறை எண்ணத்தோடு பயன்படுத்தி விஷயங்களை கறக்க முயலும்போது அதை ஹிப்னோடிசம் என்று சொல்லுகிறோம்.”
“நன்றி டாக்டர்; நான் உங்களிடம் டிரீட்மென்ட் எடுத்துக்கொள்ளுகிறேன். அது ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கென்று ஒரு வேலை இருந்தால், மனம் அதில் சென்று விடும் இல்லையா. அந்த நேரங்களில் கோபம் குறைவதற்கான வாய்ப்புகள் கிடைக்குமா?”
“கண்டிப்பாக – உங்கள் குணநலம் மற்றும் நடவடிக்கைகள் முற்றிலும் மாற ஆரம்பித்து விடும். நம்மை முழுவதுமாக ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ளுவதும் ஒருவகையிலான மருத்துவம் தான். “
“நான் அப்படித்தான் முடிவு செய்து இருக்கிறேன் டாக்டர். வேலை தேடித் தேடி எனக்கு அலுத்து விட்டது. என்னை முன்பின் தெரியாதவர்கள் கூட, எடுத்த எடுப்பிலேயே வேலை தருவதிற்கில்லை என்று சொல்லி விடுகிறார்கள். என்னுடைய அண்ணன் என்னுடைய நிலைமை தெரிந்து தேவைப்படும்போது பண உதவி செய்கிறார். அவரை நான் மேலும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. “
“டாக்டர், கடைசியாக நடந்த ஒரு சம்பவத்தைப்பற்றி சொல்லி விடுகிறேன். ஒரு மாதத்திற்கு முன்பாக திருச்சியில் ஒரு மனநல மருத்துவரை பார்க்கச்சென்று இருந்தேன். உங்களிடம் தற்போது சொன்ன விஷயங்களை அவரிடமும் ஒன்று விடாமல் சொன்னேன். அவரும் பொறுமையாகக்கேட்டுக்கொண்டு இருந்தார். கடைசியில் ஏதாவது ஒரு வேலை செய்தால் நன்றாக இருக்குமா என்று நான் கேட்கும் போது அவரும் அதை ஆமோதித்தார். அப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது, அவருக்கு ஒரு போன் வர, அவருடைய நண்பர் ஒருவரிடம் இவர் நல்ல உதவியாளர் ஒருவரை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.”
“போனில் பேசி முடித்த பிறகு அவர் என்னைப்பார்த்தார். நான் அந்த உதவியாளர் வேலைக்கு சேர்ந்து கொள்ளுகிறேன் என்று சொன்னேன். ‘உன்னை மாதிரி கோபக்காரனுக்கு வேலை எல்லாம் தரமுடியாது,’ என்று பொட்டென்று சொல்லி விட்டார்.
வேலை தருவதிற்கில்லை என்று சொல்லியிருந்தால் கூட நான் வருத்தப்பட்டு இருக்கமாட்டேன். ஆனால் அவர் “கோபக்காரன்” என்று சொன்னது என்னை மனதளவில் நொறுக்கியது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. விருட்டென்று எழுந்து அவருடைய சட்டை காலரைப் பிடிக்கப்போனேன். இதற்கிடையில், வாசலில் நின்று கொண்டு இருந்த செக்யூரிட்டி வேகமாக வந்து, என்னை கர கரவென்று இழுத்து, கேட்டிற்கு வெளியில் கொண்டு வந்தார். நான் அப்போதும் விடவில்லை. செக்யூரிட்டி கையில் இருந்த கம்பை பிடுங்கிக்கொண்டு அவரை விளாசு விளாசு என்று விளாசினேன். ஒரு கட்டத்தில், செக்யூரிட்டி வலி பொறுக்காமல், கீழே விழவும், என்னுடைய சூட் கேஸை எடுத்துக்கொண்டு விறு விறுவென்று வெளியேறி விட்டேன். நான் செய்தது சரியா – தவறா; டாக்டர்?”
(விஸ்வநாதனின் உள்ளுணர்வு அவரை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லியது.)
“நீங்கள் செய்தது சரி தான். உங்கள் நிலையில் நான் இருந்தால், நானும் அப்படித்தான் நடந்து கொண்டு இருப்பேன்.”
(சமாதானமாக சொல்லி வைத்தார்.)
கேசவ் தொடர்ந்தான்.
“டாக்டர், நீங்கள் எனக்கு சிகிச்சை தர ஆரம்பியுங்கள். பீஸை பற்றி கவலை இல்லை. அதே நேரத்தில் நானும் என்னை ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ளுகிறேன். ஒருவர் மாற்றி இன்னொருவரிடம் வேலை தாருங்கள், வேலை தாருங்கள் என்று எவ்வளவு நாட்களுக்குத்தான் நான் மன்றாடுவது. அதனால் நானே ஒரு தொழில் முனைபவராக மாறுவது என்று முடிவு செய்து விட்டேன். எனக்கு என்று சொந்தமாக ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளப்போகிறேன்.”
“நல்ல ஐடியா – கேசவ். இப்போது நீங்கள் சரியான வழியில் பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.”
“டாக்டர், உங்கள் மருத்துவமனை இந்த பகுதியில் பிரதான சாலையில் அமைந்து இருக்கிறது. நீங்கள் எப்போதாவது அதை யோசித்து இருக்கிறீர்களா மற்றும் கவனித்து இருக்கிறீர்களா? இந்த சாலையில் நகை கடை, பலசரக்கு கடை, காய்கறி கடை, நான்கு ஹோட்டல்கள், சலூன்கள், பூக்கடைகள், விளையாட்டுப்பொருட்கள் விற்கும் கடைகள் என்று பல கடைகள் விரவிக்கிடக்கின்றன. ஆனால் ஒரு கடை மட்டும் இல்லவே இல்லை.”
“சொல்லுங்கள் கேசவ். நான் இதுவரை உங்களை மாதிரி உன்னிப்பாகக் கடைகளை கவனித்தது இல்லை.”
“கசாப்புக்கடை இந்த தெருவில் இல்லை தெரியுமா ?”
“இன்னும் புரியும்படியாக சொல்லுங்கள்.”
“அதாவது ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் இந்த பகுதியில் இல்லவே இல்லை. அவற்றை வாங்க விரும்புபவர்கள் இங்கும், அங்கும் அல்லாட வேண்டியிருக்கிறது. ஒரு கடை இந்த பகுதியில் இருந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு உதவியாக இருக்கும். உங்களுடைய ஏரியாவைப்பார்த்தவுடன், இது ஒரு சிறந்த பிசினெஸ் ஐடியா என்று எனக்குத்தோன்றுகிறது. அதாவது டிமாண்ட் மற்றும் சப்ளை – இரண்டையும் ஈடு கட்டுவது. உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது டாக்டர்?”
“நல்ல ஐடியா கேசவ். கண்டிப்பாக அப்படி கடை வந்தால் நன்றாக இருக்கும். அசைவ உணவை விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். “
“கசாப்புக்கடை ஒன்றை நான் இந்த தெருவில் தொடங்கப்போகிறேன், டாக்டர்.”
“அப்படியா ? வெரி இன்டெரெஸ்ட்டிங்.”
கேசவ் தன்னுடைய சூட் கேஸை மேசை மீது வைத்தான். அதைத்திறந்து காலையில் மெட்டல் கடையில் இருந்து வாங்கி வந்த பொருட்களை வெளியில் எடுத்து பரப்ப ஆரம்பித்தான். அவற்றிற்கு விளக்கமும் சொல்ல ஆரம்பித்தான்.
“டாக்டர் – இது ஒரு கத்தி. பார்த்தீர்களா? – ரம்பம் மாதிரி இருப்பதை; அதாவது ஆட்டை உரித்து விட்டு கம்பியில் தொங்க விடுவார்கள். அதன் சதையை உரிப்பது மிகவும் கடினம். இந்த கத்தியை பயன்படுத்தினால், விறு, விறுவென்று உரித்து விடலாம். இது இன்னொரு கத்தி – கோழியின் கழுத்தை இது போன்று குழாய்க்குள் செருகுவார்கள். தலை மட்டும் வெளியில் தெரியும். கோழியின் தலையை ஒரே சீவில் விருட்டென்று சீவி விடுவார்கள். இதனால், கோழி அதிக அவஸ்தையில் இருந்து விடுபட்டு விடும். இது கூர் கத்தி. சதை பகுதியில் ஆழமாக சென்று சதையைப்பிய்த்து எடுப்பதற்கு பயன்படும். பார்த்தீர்களா டாக்டர், முன்னெச்சரிக்கையாக பொருட்களை வாங்க ஆரம்பித்து விட்டேன். நல்ல கடை அமைந்து விட்டால், தேவையான மேசை, பாத்திரங்கள், எடை மேடை, பில்லிங் மெஷின் போன்றவற்றையும் நான் வாங்கி விடுவேன். கடை தான் தற்போது என்னுடைய முக்கியமான தேவை.”
“கடை பார்த்து வைத்திருக்கிறீர்களா – கேசவ்?”
“பார்த்து வைத்து இருக்கிறேன் டாக்டர்; உரிமையாளரிடம் இனி நான் பேசவேண்டும்.”
“பேசவேண்டியது தானே. வேலைகளை உடனே தொடங்கி விடுவது தான் நல்லது.”
“அப்படியா டாக்டர் ?”
“கண்டிப்பாக”.
“அப்படியானால் உரிமையாளரிடம் நான் பேசிவிடலாமா ?”
“தாமதம் வேண்டாம். விரைவில் பேசி முடிவெடுங்கள்.”
“அந்த உரிமையாளர் நீங்கள் தான் டாக்டர்.”
“என்ன ……………………………………………………………………………………………………….?”
“ஆமாம் டாக்டர் – உங்களுடைய இந்த வீடு மிகவும் பெரிதாக இருக்கிறது. வலது புறத்தில் காலியாக இருக்கும் அறையை நீங்கள் எனக்கு தந்து விட்டால், நான் கசாப்புக்கடை வைத்து நிம்மதியாக பிழைத்துக்கொள்ளுவேன். பிரதான வீதி என்பதால், வியாபாரம் சூடு பிடிக்கும்.”
“என்ன சொல்கிறாய், கேசவ்? – என்னால் தர முடியாது. மருத்துவமனையில் கசாப்புக்கடை – நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.”
“டாக்டர் – நன்றாக யோசியுங்கள். யோசித்து சொல்லுங்கள். ஆனால் முடியாது என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.”
விருட்டென்று தண்ணீர் பாட்டில் ஒன்றை எடுத்து, பாட்டில் தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்த டாக்டர், இன்னொரு பாட்டில் தண்ணீர் முழுவதையும் குடித்து விட்டு, சோர்ந்து போய் இருக்கையில் சாய்ந்தார்.
சில வினாடிகள் நகர்ந்தன.
சட்டென்று கேசவைப்பார்த்த விஸ்வநாதன், இருக்கையில் இருந்து எழுந்தார்.
“யு ராஸ்கல் – கெட் அவுட்,” என்று, ஹால் அதிர கத்தினார்.
“டாக்டர் – அமைதி, அமைதி. நிதானமாக இருங்கள்.”
“போடா நாயே,” – மீண்டும் கத்தினார் விஸ்வநாதன்.
“டாக்டர் – தற்போது வரை நான் சாது. சாதுவாகத்தான் இருக்கவும் விரும்புகிறேன்.”
விருட்டென்று நாற்காலியில் இருந்து எழுந்த விஸ்வநாதன், கேசவை இருக்கையில் இருந்து தூக்கி எழுப்பினார். அவனுடைய சட்டைக்காலரைப் பிடித்து இழுத்தார்.
…….
…….
……
……
……
……
ஒருவாறு நடந்த சம்பவங்களை நிறுத்தி, நிறுத்தி சொல்லிக்கொண்டு வந்தார் விஸ்வநாதன். மிகவும் களைத்துப்போய் இருந்தார். சட்டை முழுவதும் ரத்தக்கறை. அதற்கிடையில் இரண்டு பாட்டில்கள் தண்ணீரைக் குடித்து, காலி செய்தும் விட்டார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் அவர் சொன்னவற்றை பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்தார், வினோத் – பி 10 காவல் நிலைய ஆய்வாளர். அவர் அருகில், இரண்டு காவலர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்கள் இருந்த இடம் – மருத்துவ மனையில் மூடப்பட்டு இருந்த ஒரு அறை.
வினோத், “இவரை ஸ்டேஷனில் உள்ள லாக்கப் அறைக்குக்கொண்டு செல்லுங்கள்,”என்று சைகை காட்ட, காவலர்கள் விசுவநாதன் கைகளில் விலங்கை மாட்டி லாக்கப் அறைக்குக்கொண்டு செல்வதற்காக, வெளியில் நின்று கொண்டு இருந்த போலீஸ் ஜீப்பை நோக்கி நகர ஆரம்பித்தனர்.
“சார் – என்ன நடந்தது என்று சொல்ல மாட்டீர்களா? நான் எதற்காக லாக்கப் அறைக்கு செல்ல வேண்டும்?”
“சொல்லுகிறேன். அந்த கடைசி நொடியில், நீங்கள் கேசவை இருக்கையில் இருந்து தூக்கி, காலரைப்பிடித்து இழுத்தீர்கள். “இதுவரை சாது. சாதுவாகத்தான் இருக்கவும் விரும்புகிறேன்,” என்றான் கேசவ். அப்படி என்றால், அடுத்த நொடியில் அவன் மூர்க்கன் தான். மயிரிழை நேரத்தில் நடக்ககூடாதது நடந்து விட்டது. “
“என்ன நடந்தது சார் ?”
“அவனிடமிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்று தேவைக்கு அதிகமாக நினைத்து, மேசையின் மீது அவன் வைத்திருந்த அந்த கூர் கத்தியை எடுத்து அவன் வயிற்றில் ஆழமாக இறக்கி விட்டீர்கள். சொல்லப்போனால் நொடிக்கும் குறைவான நேரத்தில் நீங்கள் வசியத்திற்கு ஆளாகி விட்டீர்கள். எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. குத்தப்பட்டு அவன் கீழே விழுந்தவுடன், ரத்தத்தைப்பார்த்த நீங்களும் மயங்கி விழுந்து விட்டீர்கள். இந்த சம்பவம் நடந்து ஐந்து மணி நேரம் ஆகிறது.”
“மேற்கொண்டு சொல்லுங்கள் – சார்.”
“நீங்கள் மாஜிஸ்திரேட் அவர்களிடம், இன்று மாலை தற்போது என்னிடம் சொன்ன தகவல்களை ஒன்று விடாமல் சொல்ல வேண்டும்.”
“கேசவ் தற்போது எப்படி இருக்கிறான் சார் ?”
“அவனுடைய அண்ணன் ஒரு மணி நேரத்திற்கு முன்பு மருத்துவ மனைக்கு வந்து விட்டார். மார்ச்சுவரியில் இருந்து கேசவனின் பாடியைக்கொண்டு வரப்போயிருக்கிறார்.”

திரு அ. கௌரி சங்கர் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்ற பின்னர், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் போன்றவற்றை எழுதி வருகிறார். அமேசான் தளத்தில், 260க்கும் அதிகமான புத்தகங்களை கிண்டில் (Kindle) மின் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். இவருடைய சிறுகதைகள் மற்றும் மைக்ரோ கதைகள் தினமணி கதிர் வார இதழ்களில் வெளிவந்துள்ளன.
குவிகம் பதிப்பகத்தார நடத்திய குறும்புதினம் போட்டி, மதியொளி ஞான சரஸ்வதி – உத்திராடம் புக்ஸ் நடத்திய சிறுகதை போட்டி, விடியல் பதிப்பகத்தார் நடத்திய சிறுகதை போட்டி, பனிப்பூக்கள் – மின்னசோட்டா, கலிபோர்னியா மின்தளம் நடத்திய சிறுகதை போட்டி மற்றும் குவிகம் சார்பில் நடந்த லலிதா ஈஸ்வரன் சிறுகதை போட்டி போன்றவற்றில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றுள்ளார். இவர் குவிகம் பதிப்பகத்தார் மூலமாக “சுட்டு விடும் தூரம்”” மற்றும் “காற்றுக்கு என்ன விலை?” என்ற இரண்டு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும் G2 பதிப்பகம் மூலம் “சதுரங்க வலை” என்ற குறுநாவலை வெளியிட்டுள்ளார். “சூலினி சக்கரம்” என்ற மின்புத்தகத்தை புஸ்தகா நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார்.
WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் குழுவினர் சார்பாக வெளியிடப்பட்ட “பேரன்பின் சுகந்தம்,” என்ற முதலாவது சிறுகதை தொகுப்பில் இவர் எழுதிய, “அவன்,” என்ற சிறுகதை இடம் பெற்றுள்ளது.

விறு விறுவென்ற நடை.வேகமாக நகர்ந்தது கதை.