WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சாரதா ஸ்ரீனிவாசன் எழுதிய “அன்பின் சங்கமம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு –

ஆனந்த்துக்கு சுதாவின் இரண்டு நாள் அளப்பரை தாங்க முடியல; அவள் ஃபிரண்ட் – அவளின் நேசத்துக்கு உரியவன், நாளை குடும்பத்துடன் இங்கு சாப்பிட வருகிறான். அவனுக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகிவிட்டது. நேற்றே மார்கெட் போய் உருளைக்கிழங்கு ஒரு கிலோ, சின்ன வெங்காயம் ஒரு கிலோ, ,அவியலுக்கு தேவையான காய்கள், சர்க்கரை பொங்கல் பண்ண வெல்லம், ஆவின் பட்டர்; ஆவின் பட்டர் உருக்கி நெய் ஆக்கினால் தான் நல்லா இருக்குமாம் – எல்லாம் வாங்கி வந்தாச்சு .
இன்னிக்கு காலைல, ஓரு கிலோ சின்ன வெங்காயம் உரிச்சு ஆனந்த்துக்கு கட்டை விரல் நகக்கண் போச்சு. உருளை ஒரு கிலோவும் வேக வெச்சு தோல் உரிச்சு குடுத்தாச்சு. ஆஹா அடுக்களைக்குள் இருந்து உருளை கிழங்கு கார பொடி, பெருங்காய பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கியூப் கியூபாக கட் பண்ணின உருளை எண்ணையில் தவழ்ந்து கொண்டு இருக்க, அங்கு வந்த ஆனந்த், சுடச்சுட ஒரு துண்டை எடுக்க, கையில் இருந்த கரண்டியால் சுதா அவன் கையில் ஒரு அடி போட்டாள். ‘போக, வர இப்படி சாப்பிட்டால் வரவாளுக்கு இலுப்ப சட்டி தான் இருக்கும்,’ பேசாமல் ஹால்க்கு போங்க, என்றாள்.
.ஆனந்த்துக்கு செம கடுப்பு அத்தனையும் ஒரே சைஸ்ல கட் பண்ணி தந்த தான், ஒரு துண்டு எடுத்து சாப்பிட, அவள் போடும் தடை அவனுக்கு கோபம் வரவழைத்தது. அவியல் மணம் வர சந்தேகத்துடன் உள்ளே நுழைந்த அவன் பார்த்த பார்வையை கேட்ச் பண்ணிய சுதா – இதோ பாருங்க வாசுவுக்கு அவியல் உதிர், உதிராக இருந்தா தான் பிடிக்கும் உங்களுக்கு தனியா தயிர் விட்டு குழைத்து எடுத்து வைத்து விட்டேன் – என்றவுடன் அவனுக்கு அப்பாடா என்று இருந்தது.
கிச்சன்லிருந்து ஒரு கிண்ணத்தில் சர்க்கரை பொங்கல் எடுத்துக்கொண்டு வந்தவள் ஒரு ஸ்பூனையும் கையில் குடுத்து டேஸ்ட் பார்த்துச் சொல்லுங்க என்றாள். எல்லாச்சாப்பாடும் ரெடி ஆகி ஹாட் கேஸ்களில் டைனிங் டேபிள் மேல வைத்து விட்டு, வாசுவின் வருகைக்கு வெயிட்டிங்; இதற்கு இடையில், தன் மூன்று வயது மகன் விஷாலுக்கு சாப்பாடு குடுத்து, தூங்க வைத்து, மாமியாரிடம் குடுக்க, அவனை அவன் படுக்கையில் விட்டு விட்டு, சுதாவின் மாமியார் வேதாவும் அவர்களுடன் வாசுவின் வருகைக்கு காத்து இருந்தாள்.
வாசலில் கார் சத்தம் கேட்க, சின்ன குழந்தையாக மாறி ஓடிய சுதாவை பார்த்து ஆனந்த்துக்கு சிரிப்பு தான் வந்தது. வேதாவுக்கும் தான்; ஏன் என்றால் சுதா கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து, இந்த வாசு புராணத்தை ஆனந்துடன் கேட்டுக்கொண்டு இருந்தவள் ஆச்சே.
வாசு, தன் மனைவி கீதா உடன் உள்ளே வந்தவன்; வேதாவின் கால் தொட்டு கும்பிட்டு விட்டு ஆனந்துக்கு கை கொடுத்த அவன் சுதாவை லைட் ஆக தோள் சேர்த்து ஹக் பண்ணினான். கீதா கண்களில் வேதனையுடன் முகத்தை வேறு புறம் திருப்பியதை, வேதாவின் கண்கள் கிளிக் செய்தது. எல்லோரும் கை கால் கழுவி டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, சுதாவும், வாசுவும் வாய் மூடாமல் பேச இடையிடையே ஆனந்த் தனது காமெடி கமெண்ட்ஸ்களுடன் புகுந்ததில் ஹால் சிரிப்பு அலையில் மிதந்தது. அங்கு சிரிக்காமல் இருந்த இருவர் வேதாவும், கீதாவும். வேதாவுக்கு புரிந்து விட்டது – வாசுவிற்கும் கீதாவிற்கும் இடையே பனிப் போர். இருவரும் மண வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதை வேதா தன் அனுபவத்தால் அறிந்தாள். அதுவும் சுதாவால என்பது அவளின் வருத்தத்தை அதிகரித்தது. அதனால் அவள் மனம் அங்கு பேசிய பேச்சுக்களில் லயிக்கவில்லை. ஆனால் வேதாவைப் பொருத்தவரை தன் மருமகள் வெகுளி; மனதில் இருப்பதை அப்படியே பேசும் குணம் கொண்டவள். ஆனந்த் மேலும், இந்த குடும்பத்தின் மேலும் அதீதமான அன்பு வைத்து இருப்பவள்.
வாசுவின் திருமணத்தின் போது சுதாவின் பிரசவ டைம்; மேலும் வாசுவும், கீதாவும் உடனடியாக வெளிநாடு பறந்து விட்டனர். அதனால் கீதாவும் சுதாவும் ஒருவரை ஒருவர் பார்ப்பது இதுதான் முதல் முறை. ஆனால் வாசுவின் பேச்சுக்களால், கீதா சுதாவை பார்க்காமலே, அவளை வெறுக்க ஆரம்பித்து விட்டாள் என்று வேதா புரிந்து கொண்டாள்.
சாப்பிட்டு முடிந்தவுடன் கீதாவின் அருகில் சென்ற வேதா ‘வருகிறாயா; தோட்டத்தை சுற்றி காண்பிக்கிறேன்,’ என்றதும் அந்த இடத்தை விட்டு போனால் போதும் என்று இருந்த கீதா உடனே எழுந்து வேதாவுடன் வந்தாள்.
அறுபது வயது நிரம்பிய வேதாவுக்கு அந்த 25 வயது குழந்தை கீதாவின் மன நிலை புரிந்தது. மெதுவாக அவள் தோளைப் பிடித்து அங்கு மாமரத்தின் கீழே இருந்த பெஞ்ச்ல உட்கார வைத்தாள். அவளின் தொடுகையில், அன்பு இருப்பதை புரிந்து கொண்ட கீதாவின் கண்களில் இருந்து, கர கர என்று கண்ணீர் வழிந்தது. அவள் கண்ணீரை துடைத்த வேதா, “கீதா, நீ சுதா மேல் கோபமாக இருக்கிறாய்; அவள் உன் வாழ்க்கையில் புகுந்து நிம்மதி இல்லாமல் செய்கிறாள் என்று நினைக்கிறாய். அப்படித்தானே. வாசு எந்த வேலையிலும் உன்னை சுதாவுடன் கம்பேர் செய்கிறான். அது உனக்கு பிடிக்கவில்லை; அப்படித்தானே,” என்று கேட்க, தன் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடியாக வேதாவின் கேள்விகள் இருக்க, பதில் சொல்ல பிடிக்காமல் தலை குனிந்தாள் கீதா .
“இப்ப நான் உன்னை இங்கு கூட்டி வந்தது உன் வாழ்க்கையை சரி பண்ணத் தான். நான் சொல்லப்போவதை நீ எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறாய் அதைப்பொருத்து தான் உன் வாழ்க்கை அமையப் போகிறது ?”
“உன்னைப் போல நானும், ஆனந்தும் கல்யாணம் ஆன புதிதில் இருந்தோம். தூங்கி எழுந்து பெட் மடிப்பதில் ஆரம்பிக்கும். வாசு அப்படி பண்ணுவான். வாசு இப்படி பண்ணுவான் என்ற பேச்சு நெவர் என்டிங் ஆக இருந்தது. நான் ஆனந்தை கூப்பிட்டு கேட்ட போது அவன் ஏற்கனவே வாசு அவளுடைய தோழன் என்று சொல்லி இருக்கிறாள் என்பது தெரிந்தது ஆனால் அதையும் மீறி ஆனந்துக்கு சுதா மேல் கோபமும், வாசுவின் மேல் எரிச்சலும் தொடங்க ஆரம்பித்தது ஒருநாள் மிகவும் அதிகமாகி சுதாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் அளவில் வந்து நின்றது.” “அப்போது அவள் வயிற்றில் என் பேரன் மூன்று மாத கரு. இந்த சண்டை ஆரம்பித்த உடன், வாசுவும் வரவழைக்கப் பட்டான். இந்த சத்தத்திலும், சண்டையிலும் திருவிழாவில் துலைந்து போன குழந்தை போல மலங்க, மலங்க முழித்துக்கொண்டு வாசுவின் அருகில் நின்றாள் சுதா. நாங்கள் இருவரும் இப்படி பேசுவது அவள் எதிர்பார்க்காத ஒன்று என்று அவள் முகத்தில் அப்பட்டமாகத்தெரிந்தது. அவளைப் பார்த்த அந்த வினாடி, தன் குழந்தையை அணைத்து ஆறுதல் படுத்தும் ஒரு தாயின் உணர்வு என் மனத்தில் தோன்றியது.”
“வாசுவின் முகத்திலும் அப்படி ஒரு உணர்வு இருந்தது போல எனக்குத் தோன்றியது. நான் ஆனந்தை சமாதானப் படுத்தி விட்டு சுதாவுடன், வாசுவின் முன்னால் பேச ஆரம்பித்தேன். உனக்கு வாசுவை அவ்வளவு பிடிக்குமானால் அவனையே திருமணம் செய்து இருக்கலாமே? எதற்காக ஆனந்த் இடையில் என்று கேட்டதற்கு, அவள் வாசுவின் கையை இருக்கப்பற்றிக்கொண்டு அளித்த பதில் எனக்கும் ஆனந்துக்கும் செவிட்டில் அறைவது போல இருந்தது. பெற்ற தாயைப் போல உற்ற தோழனைப் போல இருப்பவன் இவன். என் அம்மாவை எட்டு வயதில் இழந்தேன். என் அம்மா, அப்பாவின் திருமணம் காதல் திருமணம். அவர்களின் திருமணத்தை அவர்களின் அம்மா, அப்பா அங்கீகரிக்கவில்லை. என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு நான் மிகவும் தவித்துப்போனேன். எந் த உறவும் எங்கள் அருகில் நெருங்கவில்லை. அப்பாவும், அம்மாவை இழந்த வேதனையில் என்னைக் கவனிக்கவே இல்லை.”
“வாழ்க்கை என் கண்ணை கட்டி விட்டது போல உணர்ந்தேன். தனியாக சாப்பிட, தலை பின்ன எல்லாம் எனக்கு தெரியாது. வாசு ஸ்கூ லுக்கு போக சீக்கிரமே என் வீட்டுக்கு வருவான். ஒரு தாய்க்கு ஈடாக என் தலை பின்னி விடுவான். சாதம் ஊட்டுவான்.”
“என்னுடன் ஸ்கூல் வருவான். நான் அந்த துக்கத்தில் இருந்து வெளிவரும் வரை, என் நிழலாக, ஒரு தாயாக என்னைப்பார்த்துக்கொண்டு இருக்கிறான் .அதைக்கடந்து டீன் ஏஜ்ல ஒரு சகோதரன் ஆக எனக்கு வந்த சிக்கல்களில் இருந்து என்னைக்காப்பாற்றி இருக்கிறான். ஆனந்தை செலக்ட் செய்யக்கூட ஒரு உற்ற தோழநாக இருந்தான். ஏன்மா ரத்த சம்பந்தம் இல்லாத ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் இப்படிப் பட்ட அன்பு இருப்பது தப்பா? பழகும் எங்கள் இருவருக்கும் ஏற்படாத ‘ஹார்மோனல் சேஞ்ச்’ பார்க்கும் உங்களுக்கு எல்லாம் ஏன் உங்கள் கற்பனையில் ஏற்படுகிறது. நானும், வாசுவும் நினைத்தால் திருமணம் செய்து இருக்கலாம். யாரும் தடை இல்லை. ஆனால் ஒரு தாயாக எண்ணி இருப்பவனை, நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாசுவை நான் ஆனந்த் உடன் கம்பேர் செய்யவில்லை. எப்போதுமே நான் சொல்லும் போது வாசு இப்படி செய்வான், அப்படி செய்வான் என்று சொல்வதன் காரணம், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு நிமிடமும் அவன் என் நினைப்பில் நிறைந்து இருக்கிறான் என்பதால் தான். அது தப்பு. அதனால் ஆனந்த் ஹர்ட் ஆகிறார் என்றால் நான் இனி என்னை மாற்றிக் கொள்ள ட்ரை பண்ணுகிறேன். என் மனசு ஒரு கிளீன் ஸ்லேட். அதில் என் அன்புக் கணவனுக்கும், வாசு என்ற என் தாய்க்கு நிகரானவனுக்கும் இடம் உண்டு. அந்த எண்ணத்தை என்னால் ஒரு போதும் மாற்றிக்கொள்ள முடியாது. இதற்கு மேல் எனக்கு இந்த வீட்டில் இடம் குடுப்பதும், குடுக்காததும் உங்கள் இஷ்டம். நீங்கள் எப்படி சொல்கிறீர்களோ அதை நான் செய்கிறேன்,” என்று அழுது கொண்டே சொன்ன அவளது கண்ணீரைத் துடைத்த வாசு அவளை அணைக்க, ஆனந்தும் ஓடி வந்து அணைத்து, வாசுவிடமும், சுதாவிடமும் மன்னிப்பு கேட்டான். வாசுவும், ஆனந்த் இடம், “உங்களைப் போல எங்கள் அன்பைப்புரிந்து கொள்ளும் ஒருவருக்காகத்தான் நான் காத்து இருக்கிறேன் என்றான்.”
“அப்போது சுதாவை அணைத்து இருந்த வாசுவின் அணைப்பு எனக்கும் ஆனந்துக்கும் விரசமாகப்படவில்லை. ஒரு தாயுடன் குழந்தை இருப்பதாகத் தோன்றியது. இது எதற்காக உன்னிடம் சொல்கிறேன் என்றால் மனிதர்களின் தப்பான கண்ணோட்டம் ஒரு அன்பான உறவை சிதைத்து விடுகிறது. எங்கள் வீட்டில் இன்று வரை அவளின் வாசு புராணம் தொடர்கிறது. ஆனால் நானும், ஆனந்தும் அவள் மனதைப்புரிந்து கொண்டு விட்டோம் என்ற வேதா எழுந்து கையில் இருந்த மணலை தட்டிக் கொண்டே கீதாவின் முகம் பார்க்க, அவளின் முகத்தின் சிரிப்பும், மலர்ச்சியும் அவளின் வாசுவைப்பற்றிய சந்தேக சாயலை பின்னுக்கு தள்ளியது தெளிவாகத்தெரிந்தது. கீதாவும் எழுந்து வேதாவுடன் சிரித்துப் பேசிக்கொண்டே உள்ளே நுழைய, இதுவரை கீதாவின் மலர்ந்த முகத்தைப் பார்க்காத வாசுவின் கண்களுக்கு அது விருந்தானது. சரி கிளம்பலாம் என்று எழுந்த வாசு உடன் கீதா சேர்ந்து வேதாவை நமஸ்கரிக்க, கீதா வாசுவைப் பார்த்துக்கொண்டே – சத்தமாக – வேதாவிடம், “அம்மா நாங்கள் அடுத்த முறை உங்கள் பேரக்குழந்தையுடன் வருகிறோம்,” என்று சொன்னதின் அர்த்தம் புரிந்த வாசு, கீதாவின் அருகில் சென்று அவள் கையை இறுகப்பற்றினான்.
ஒரு நல்ல உறவை காப்பாற்றிய நிம்மதியுடன் வேதா அவர்களை வழி அனுப்பினாள்.

சாரதா ஸ்ரீனிவாசன்
திருநெல்வேலியைச்சார்ந்த திருமதி சாரதா ஸ்ரீனிவாசன் வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய “சிங்கிள் பேரண்ட,” என்ற சிறுகதை அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டியில் (2024 -2025) இரண்டாவது பரிசு பெற்றது.
இவர் “மனதில் ஒரு மத்தாப்பு”, “என் கண்ணின் ஒளி நீங்கள் அன்றோ”, “ஒரு சத்தியவான் இரு சாவித்திரி” மற்றும் “அன்னியோன்னியம் அது தான் தாம்பத்யம்,” என்ற நான்கு சிறுகதை தொகுப்புகளை பிரசுரம் செய்து இருக்கிறார்.
2024 ம் வருடம் ஐம்பது எழுத்தாளர்கள் இணைந்து 62 புத்தகங்களை வெளியிட்டதற்காக, அந்த எழுத்தாளர்களில் ஒருவராக பாராட்டு சான்றிதழை – “All India Book of Records Certificate – 2024” -பெற்றுள்ளார்.
மேலும் ஒரு பாராட்டு சான்றிதழை கீழ்க்கண்டவாறு பெற்றுள்ளார்.
- SUENOS Excellence awards – 2025 powered by Ukiyoto.
WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் குழுவினர் சார்பாக வெளியிடப்பட்ட “பேரன்பின் சுகந்தம்” என்ற முதலாவது சிறுகதை தொகுப்பில் இவர் எழுதிய “அம்மாவின் குரல் ,” என்ற சிறுகதை இடம் பெற்றுள்ளது.
