
நான் காமாட்சி மாமியை அடிக்கடி பார்ப்பதுண்டு. தினமும் காலையில் பூஜை செய்வதற்கு மட்டும் ஒரு மணி நேரத்திற்குமேல் எடுத்துக்கொள்வாள்.
வாரத்தில் ஒருநாள், வெள்ளிக்கிழமை அன்று, குறி சொல்வாள். மாமியின் கனவில் தோன்றிய படத்திற்குத்தான் பூஜை செய்கிறாள். மாமி சொல்வாள்: “என் கனவில் தோன்றிய காமாட்சிதான் தானே வரைந்துகொண்டாள்.”
ஒருமுறை, நகைகளை வண்டியில் தொலைத்துவிட்ட என் நண்பன் சீதாராமனைக் காமாட்சி மாமியிடம் அழைத்துப்போனேன்.
நகைகள் கிடைக்குமா என்பதுதான் எங்கள் கேள்வி. ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டாள் காமாட்சி மாமி.
“அம்பாள் சொல்றா, நிச்சயம் நகை கிடைக்கும். எடுத்துக்கொண்டு போனவங்களே நகைகளைக் கொண்டுவந்து போட்டுடுவாங்க.”
எங்களால் நம்ப முடியாமல் இருந்தது.
மாமியைப் பார்த்துவிட்டு நாங்களும் அதை மறந்துவிட்டோம்.
ஆனால், ஒருநாள் சீதாராமன் போன் செய்தான். நகைகள் கிடைத்துவிட்டன என்று.
“எப்படி?” என்று கேட்டேன்.
“நான் வைத்திருந்த ஸ்கூட்டர் சீட்டின் அடியில் போட்டிருந்தார்கள்” என்றான்.
எனக்குக் காமாட்சி மாமி மீதும், அவள் வணங்கும் காமாட்சி அம்மன் மீதும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
