
அதிகாலையில் துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் பூத்திருந்த பூக்களைப் பறித்து, அம்மன் சிலைக்கு அருகில் வைத்தாள் கோமளா. குருக்கள் அம்மனுக்குப் பன்னீர், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூ அலங்காரத்தை முடித்துக் கற்பூரம் ஏற்றினார். இருபாலரும் பக்தர்களாக வரத் தொடங்கினர்.
விதவைத் தாய்க்கு ஒரு வாரமாகக் காய்ச்சல் என்பதால், பதினொரு வயது கோமளாவுக்குக் கோயில் பணி சற்று அதிகமாக இருந்தது.
ஒன்பது மணி வரை கோயில் பணிகளை முடித்துவிட்டு, பள்ளிக்கு விரைந்தாள் அந்த ஏழாம் வகுப்பு ஏழைச் சிறுமி.
இரவு ஒன்பதரை மணிக்குக் கோமளா கோயில் வாசல் கதவை மூடும்போது, “தாகமாயிருக்கு” என்று கெஞ்சினான் லுங்கி, பனியன் அணிந்திருந்த ஒருவன்.
கோமளாவும் பரிதாபப்பட்டுத் தண்ணீர் கொடுத்தாள். இரண்டு நாட்கள் கழித்து, அதே நேரத்தில் அவன் போதையுடன் வந்தான்.
“தண்ணி வேணாம்… நீதான் வேணும்!” என்று பல்லிளித்தான்.
“அப்படியா? இந்தா!” என்று கூறியவள், பழுப்பு நிறப் பாட்டிலின் மூடியைத் திறந்து, அதிலிருந்த திரவத்தை அவனது தொப்புளுக்குக் கீழே கவிழ்த்தாள்.
“ஆ!” என்று கத்திக்கொண்டு ஓட்டம் பிடித்தான் அவன். அது கோயில் கழிவுகளைக் கழுவுவதற்கான அமிலம் அடங்கிய பாட்டில்!
அச்சமயம் அங்கு வந்த ரோந்துப் பணிப் போலீசார் அவனை இழுத்துச் செல்வதைக் கண்ட கோமளாவுக்கு இப்போது நிம்மதி ஏற்பட்டது.
