மடிப்பாக்கம் பிரபாவதி/பிரிவு

காலையிலிருந்து அந்தப் பொம்மையை எடுத்துத் தரச்சொல்லி அடம்பிடித்தாள் அனிதா.
ஏதோ போட்டா போட்டி, ஈகோ போன்ற காரணங்களால் ராமும் சகுந்தலாவும் பிரிந்துவிட்டனர்.
ஆறு வயதான அனிதாவுக்கு ஓரளவு புரிந்திருந்தது. தொலைக்காட்சியும் தொழில்நுட்பமும் தந்த அரைகுறை அறிவைக் கொண்டு சில விஷயங்களைப் புரிந்துகொண்டாள்.
அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீட்டிற்கு வந்தான் ராம். குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஆயா, நைசாகப் பேசி அனுமதி பெற்றுக்கொண்டு சென்றுவிட்டாள்.
தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த அனிதா, பொம்மையிடம், “தங்கச்சிப் பாப்பா, நீ அழுகாம, படுத்தாம இரு. அம்மா பாவம். அவங்க ரொம்ப நல்லவங்க. நல்லாப் பார்த்துப்பாங்க. இங்கே அப்பாவோட நானும் சமத்தா இருக்கேன். நான் பெரியவளானதும் உனக்குப் பிஸ்கட், மிட்டாயெல்லாம் வாங்கித் தரேன். உன்னைக் கொஞ்சணும் போல இருக்கு” என்று கூறியவாறு கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.
ராமுவுக்குச் சுரீரென்றது. தங்களிருவரின் பிரச்சினையில் குழந்தைகளின் பாசத்தை விலை பேசிவிட்டோமோ என்று தோன்றியது.
குழந்தையைக் கட்டிக்கொண்டு கேட்டான்:
“அனிப்பாப்பாவுக்கு என்ன வேணும்?”
“எனக்குத் தங்கச்சி வேணும். அவளுக்கு அப்பா வேணும்ப்பா!”
“அப்படின்னா அம்மா?”
“குட்டிப் பாப்பா வந்தா அம்மாவும் வருவாங்கதானே!” என்று சொல்லிச் சிரித்தாள் அனிதா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன