எம்.எல். பிரபா/மனசு

ரவிக்கு மனம் சரியில்லாமல், பித்துப் பிடித்தவன் போல் சுற்றிக்கொண்டு திரிந்தான். அதற்குக் காரணம், அவனுடைய ஐந்து வயதுக் குழந்தை இறந்ததுதான்.
தெருக்குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு, அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்றான். அங்கே ஒரு குழந்தை சிவப்பு நிற உடை அணிந்து, கையில் ஒரு பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தது. பார்ப்பதற்கு, தன்னுடைய குழந்தையைப் போலவே இருந்தது.
அவன் கையை அசைத்து, “பாப்பா, இங்கே வா!” என்றான். குழந்தையும் ஓடி வந்தது. அருகில் வந்து அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் ஓடியது.
அப்போது அங்கே வந்த குழந்தையின் பாட்டி, குழந்தையிடம் இருந்த பொம்மையை வாங்கித் தூரத்தில் எறிந்துவிட்டு, கையசைத்தும் சைகை செய்தும் அந்தப் பொம்மையை எடுத்துவரச் சொன்னாள். குழந்தையும் ஓடிச்சென்று பொம்மையை எடுத்து வந்தது.
பொம்மையை ரவி உட்கார்ந்திருந்த பெஞ்சின் மீது வைத்துவிட்டு, அதை எடுத்துக்கொள்ளுமாறு சைகை செய்தாள். குழந்தையும் பொம்மையை எடுத்து கையில் வைத்துக்கொண்டது.
ரவி உடனே அந்தக் குழந்தையைக் கொஞ்சினான்.
“உன் பெயர் என்னம்மா?” என்றான்.
அந்தக் குழந்தை அவனையே பார்த்தது.
அப்போது அங்கே வந்த பாட்டி, “அவளுக்குக் காதும் கேட்காது; வாயும் பேசாது” என்றாள்.
ஒரு நிமிடம் உறைந்துபோனான் ரவி.
‘அந்தக் குழந்தையின் கஷ்டத்தைவிட என் கஷ்டம் ஒன்றும் பெரிதல்ல’ என்று நினைத்து, தன் மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டு வெளியே சென்றான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன