ஜே. செல்லம் ஜெரினா/தற்கொலைக்கு முயன்றவன்

அடர்த்தியாக இருள் இறங்கிக்கொண்டிருந்தது. அவன் எழுந்து ஒவ்வொரு மரமாக அண்ணாந்து பார்த்தான். பாக்கெட்டில் உறுதியான கயிறு பத்திரமாக இருந்தது. ‘காவல்காரன் பூட்டிக்கொண்டு போனதுமே…’ என்று யோசித்துக்கொண்டே நின்றவன், குனிந்து பார்த்தான்.
கையில் ஒரு சிவப்புப் பொம்மையைப் பிடித்திருந்த சிவப்புச் சட்டை அணிந்த சிறுமி. கண்ணீரும், பயமும், ஏக்கமும் அவள் கண்களுக்குள் மிதந்தன.
“மாமாவைக் காணோம்!” முகம் வாடியது.
சுற்றுமுற்றும் யாரையுமே காணோம்.
“வீடு தெரியுமா?”
“வீடு இல்லே. அப்பா, அம்மா வீடு நெருப்புலே போச்சு. மாமா வீட்டுலே மாமி அடிக்கிறா. தோ, பாரு!”
கெண்டைக்காலில் மருந்துகூடப் போடப்படாமல், சூட்டுப்புண் பச்சை ரணமாய் இருந்தது.
‘அச்சோ!’ என்று வாயைப் பொத்திக்கொண்டான்.
மண்டியிட்டு அமர்ந்தவன், குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். பூஞ்சிட்டு தேம்பியது. அவன் அதன் முதுகை வருடினான்.
“நீ செய்ய நினைச்சது என்ன? செய்றது என்ன? தற்கொலை பண்ணிக்கத்தானே வந்தே? இப்போ இந்தச் சுமை எதுக்கு?” என்று மனக்குரலை அடக்கினான்.
‘சின்னத் தளிரை யாரோ விட்டுட்டுப் போயிட்டாங்க. அப்படியே விட்டுட முடியுமா? இந்த உலகம் பொல்லாததாச்சே! நான் இனிமே அனாதையில்லை. இவளை வளர்க்கப் போறேன். என் வாழ்க்கைக்குப் பிடிப்பான வேராக இவ நிப்பா! இவளுக்கு ஆதாரமா நான் இருப்பேன்.’
தற்கொலை எண்ணத்தை விடுத்து, சிறுமியைத் தூக்கிக்கொண்டு வெளியேறினான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன