
குழந்தை மீனாவின் முதுகில் ‘பளாரென்று’ விழுந்த அடி, தன் முதுகில் விழுந்ததுபோலத் துடித்து எழுந்தான் கேசவ்.
“எதுக்கு, சந்தியா, குழந்தையை இப்படி அடிக்கறே?” என்று கேட்டான் கேசவ்.
“பின்ன என்ன, பெரிய ராஜா வீட்டுக் குழந்தைன்னு நினைப்பா? பக்கத்து வீட்டு சரளா ஏதோ சாஃப்ட் டாய்ஸ் வெச்சிருக்காளாம். அதுமாதிரி இவளுக்கும் வேணுமாம். நாம வாங்கற விலையிலா இருக்கு அது? நல்லவேளை, அதை விக்கிற கடையில்தான் நீங்க வேலை பாக்கறீங்கன்னு அதுக்குத் தெரியாது!”
கணவனைக் குற்றம் சாட்டுகிறாளா, குழந்தையையா என்று தெரியாத குரலில் கடுகடுப்பாகச் சந்தியா கூறவும், கேசவனுக்குச் சுரீரெனக் கோபம் வந்தது.
“உனக்குத் தெரியும், அவ ராஜா வீட்டுப் பிள்ளை இல்லைன்னு. அதுக்குப் புரியுமா? வாங்கித் தர வக்கில்லாதவன்னு என்னைத் திட்டறதுக்குப் பதிலா, குழந்தையை அடிக்கிறியா?” என்றான் கேசவ் கோபமாக.
மறுநாள் காலையில் குழந்தையிடம் ஒரு பொம்மையை நீட்டினான். தாவி அதை வாங்கிய மீனா, அப்படியே தந்தையைக் கட்டிக்கொண்டாள்.
அவளுக்குத் தெரியாது, பழைய துணிகளை வைத்து இரவு முழுவதும் தந்தை அவளுக்காகவே தைத்த பொம்மை அது என்று.
