பானுமதி கண்ணன்/ஒரு தேவதையின் கதை

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி பானுமதி கண்ணன் எழுதிய ” ஒரு தேவதையின் கதை! ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு:

முன்குறிப்பு:
இது 1970-களின் கதை.

•••
அவரின் அழகு எப்போதுமே என்னை ஈர்த்திருக்கிறது. மாநிறம் தான். ஆனால் நல்ல களை பொருந்திய முகம். நர்சரி ஸ்கூல் டீச்சர் அவர். நாற்பது ரூபாய் சம்பளம்.

அதே நர்சரியில் தான், என் அக்காவும் டீச்சர் என்பதால் அக்கா மூலமே அவர் எனக்கு அறிமுகம். தலைமுடி சுருண்டு, நெளி நெளியாக இருக்கும். ஒயிலான உடல்வாகு. ஒரு கோணத்தில் சரோஜாதேவி போல் தோற்றம் காட்டுவார்!

இவ்வளவு அழகானவர் ஏன் நாற்பது ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்கிறார் என்று தோன்றும். என் மனதில் ஒரு மகாராணியின் ஆசனத்தில் அமர்த்தியிருந்த அவரை, ஒரு சம்பளக்காரராக, அதுவும் அத்தனை குறைச்ச சம்பளக்காரராக நினைத்தும் பார்க்க முடியவில்லை.

நர்சரி ஸ்கூலுக்கு எதிரிலேயே எங்கள் வீடு என்பதால் மதிய உணவுக்கு அக்கா வீட்டுக்கு வருகிறபோது, சிலசமயம் அந்த டீச்சரும் உடன் வருவார். அவர் கொண்டு வரும் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள எங்கள் வீட்டு சாம்பார் ஈயப்படும்.

“உன் பேரு என்ன?” என்று ஒருநாள் அவர் என்னைக் கேட்டபோது என் மனது படபடத்து விட்டது.

“ மீனா! “ என்றேன், பயபக்தியாக.

“எத்தனாவது படிக்கிறே?”

“ ஏழாவது.”

அதற்குள் எனக்கு வியர்த்து விட்டது. ரொம்ப அழகானவர்களையோ, ரொம்பப் படித்தவர்களையோ அல்லது எலுமிச்சை போன்ற பளீர் நிறம் கொண்டவர்களையோ பார்த்தால், ஏனோ எனக்கு இப்படியாகி விடுகிறது!

அக்காவுக்கு அப்போது இருபது வயது. அவள்தான் எல்லாருக்கும் மூத்தவள் என்பதால் வீட்டில் அவள் கல்யாணப்பேச்சு அடிபட ஆரம்பித்திருந்தது. ஒரு கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை வந்து அக்காவைப் பார்த்து விட்டுப் போயிருந்தார். இந்த இடம் தகைய வேண்டுமே என்பதே எல்லாரின் பிரார்த்தனையாக இருந்தது.

கடைசியில் அந்த இடம் தகைந்து, அந்த கவர்ன்மெண்ட் மாப்பிள்ளையோடு அக்காவின் கல்யாணம் நிச்சயமாகி விட்டது! நிச்சயதார்த்தத்திற்கு அக்காவின் ஸ்கூல் டீச்சர்கள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள். அந்த அழகு தேவதை உட்பட! நான் விழுந்து விழுந்து அவரை உபசரித்தேன். அவர் கேட்காமலேயே, இன்னொரு கப் பாயசம் கொண்டு போய் வைத்தேன். எளிய உடையிலும் அவர் அக்காவை மிஞ்சித் தெரிந்தார். ஆனால் அவர் முகத்தில் மட்டும் ஏதோ ஒர் ஏக்கம் இருப்பதாக எனக்குப் பட்டது.

•••

வருடங்கள் உருண்டு, உருண்டு, உருண்டு போய் விட்டன. அக்கா கல்யாணமாகிப் போய் விட்டார். மூன்று குழந்தைகள் இப்போது அவருக்கு. அதற்கடுத்த அக்காவுக்கும் கல்யாணமாகி, அவளுக்கும் இரண்டு குழந்தைகள். நர்சரி ஸ்கூல் விரிவடைந்து இடம்‌ மாற்றிப் போய் விட்டார்கள். யாரோ அந்த வீட்டை விலைக்கு வாங்கி குடி வந்தும் விட்டார்கள். அந்த தேவதை டீச்சர் என்னவானார் என்று தெரியவில்லை. அக்காவிடம் கேட்டபோது, “எனக்கென்ன தெரியும்? எங்கே போனாளோ?” என்றாள். ஃபோன் போன்ற தொடர்புகள் அற்ற காலம் அது.

எல்லாரையும் போல நானும் வளர்ந்து, பெரியவளாகி, ஒருநாள் என் கல்யாணமும் நடந்து முடிந்தது. வாழ்க்கை பல பொறுப்புக்களைத் தலையில் சுமத்தியதில் அந்த டீச்சர் மனதின் அடியாழத்துக்குப் போய்விட்டார். கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலை – ஒரு நாள் எதேச்சையாக அவரை பஸ் ஸ்டாண்டில் சந்திக்கும் வரை.

மனம் பரபரத்து விட்டது. அவர் தானா என்று உற்று உற்றுப் பார்த்தேன். அவரே தான். வயது கூடியிருந்தாலும் அழகு அப்படியே இருந்தது. நெளி கூந்தலில் சில நரைகள் தென்பட்டது. ஆனால் அது அவர் அழகை மேம்படுத்திக் காட்டியதே தவிர குறைக்கவில்லை. அவர் முகத்தில் மட்டும் ஏதோவொரு சுரத்துக் குறைவு தென்பட்டது.

வயதும், அனுபவமும் மனிதர்களைப் பார்த்து மலைப்பதில் எனக்கிருந்த தயக்கத்தைச் சற்று அகற்றியிருந்ததில், நானாகவே அவரை அணுகி, “எப்படி இருக்கீங்க டீச்சர், என்னை ஞாபகம் இருக்கா?” என்றேன்.

எங்கோ தூரத்தில் பார்த்துக் கொணடிருந்தவர், திடுக்கிட்டுத் திரும்பினார். ஒரு‌ நிமிஷம் என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு, “ஓ..மீனா தானே நீங்க? லதா டீச்சரின் தங்கச்சி?”

பெயரோடு அவர் என்னை ஞாபகம் வைத்திருந்ததில் எனக்கு அலாதி மகிழ்ச்சி.

அக்கா எங்கு இருக்கிறார்; எப்படியிருக்கிறார்; எத்தனை குழந்தைகள் போன்ற குசல விசாரிப்புக்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேனே தவிர, மனம் மட்டும் ஏன் என் அழகு தேவதை புகை படிந்த ஓவியம் போல் இருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தது. இளமை விடைபெற ஆயத்தமாகிக் கொண்டிருந்த நிலையில் சுமங்கலிக்கான எந்த சூட்சுமமும் தெரியவில்லை. கழுத்தில் மெல்லியதாக ஒரு செயின் மட்டும் போட்டிருந்தார். இவருக்குக் கல்யாணம் ஆகி விட்டதா இல்லையா? அல்லது ஆகி? சேச்சே – அதற்கு மேல் யோசிக்கத் தோன்றவில்லை.

தூரத்தில் வரும் பஸ்களையெல்லாம் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, எந்த பஸ்ஸிலும் ஏறவில்லை. எந்த பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவர் நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாகப் பட்டது.

“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்‌ டீச்சர்?” என்றேன், அவர் கவனத்தைத் திசை திருப்ப.

“ம்?” என்றார் சற்றுக் குழம்பியது போல். பிறகு, “இல்லே; எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே,” என்றார்.

(என்னது! இன்னும் கல்யாணம் ஆகலையா! அக்காவின் வயதையொத்தவர். அவளுக்கு மூன்று குழந்தைகள்; ஸ்கூல் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவருக்கு இன்னுமா கல்யாணம் ஆகவில்லை?)

என் அதிர்ச்சி புரிந்திருக்க வேண்டும். “இந்த வருஷம் ஆகிடும்னு நினைக்கிறேன்,” என்றார் சமாதானப்படுத்துவது போல்.

அப்பாடா என்றிருந்தது; “நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா டீச்சர்?”

“இல்லை; அதைப் போன்ற ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் எதுவும் இல்லை; ஆனால் இந்த வருஷம் பண்ணிக்கலாம்னு அவர் சொல்லியிருக்கார்,” என்றார், தயக்கத்துடன்.

“எவர்?”

“அவர் பஸ் கண்டக்டராக இருக்கிறார்மா. அவருக்காகத்தான் காத்திருக்கிறேன். அவர் பஸ் வந்ததுமே ஏறிப்பேன். ஒரு ரெண்டு மூணு ட்ரிப் அவர் கூடவே போய் விட்டு வருவேன்,” என்றார்.

“அவர் பஸ் இன்னும் வரலையா டீச்சர்?”

“வந்தது. கூட்டமாக இருந்தது. அதனால் வெயிட் பண்ணு; அடுத்த ட்ரிப்பில் ஏறிக்கலாம் என்று சொல்லி விட்டுப் போனார்.”
“ஓ!”

“கே.கே. நகர் டு பாரிமுனை தான் அவர் ரூட். பெரும்பாலும் இப்படித்தான் நாங்கள் சந்தித்துக் கொள்வது.”

“அது எத்தனை பிசியான ரூட் என்று எனக்குத் தெரியும். ஏகப்பட்ட ஸ்டேஜ்கள். நடுநடுவே பஸ்ஸை நிறுத்தி டிக்கெட் இஷ்யூ செய்து, இதில் செக்கிங் வேறு வந்து விட்டால்; இன்னும் அவஸ்தை. ஒரு ட்ரிப் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது எடுக்கும். அடுத்த ட்ரிப்பும் கூட்டமாக இருந்தால்?”

“காத்திருக்க வேண்டியது தான்!” என்று புன்னகைத்தார். “நீங்க எங்கே இங்கே?”

“இங்கு ஒரு நர்ஸிங் ஹோமிற்கு வந்தேன் டீச்சர். ஹஸ்பெண்ட் ஆபீசிலிருந்து வருகிற வழியில் பிக்கப் செய்து கொள்வதாகச் சொன்னார். அவருக்காகத்தான் காத்திருக்கிறேன்.”

“என்ன உடம்புக்கு?” என்றார். இரண்டாவது முறை உண்டாகி இருக்கிறேன் என்று இவரிடம் எப்படிச் சொல்வது?

வீட்டுக்கு வந்த பிறகும், அவர் நினைவாகவே இருந்தது. ஒரு ராஜகுமாரி போல் அவரை நான் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்த்தி வைத்திருப்பதென்ன? தன் காதலரான கண்டக்டருக்காக மணிக்கணக்கில் அவர் பஸ் ஸ்டாண்டில் காத்து நிற்பதென்ன?

•••
அடுத்த மாதம் மறுபடி செக்கப்புக்கு வந்த போது அந்த டீச்சரின் நினைவு வந்தது. ஆச்சரியகரமாக இப்போதும், அவர் அதே ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.

“டீச்சர்,” என்றேன் அருகில் போய். அவர் முகம் ஒரு கணம் இருண்டு, பிறகு மீண்டது. புன்னகைத்தார்.

“மறுபடி டாக்டரிடமா?” என்றார். தலையசைத்தேன்.

“நீங்களும் உங்க அவருக்காகத்தானே காத்திருக்கீங்க?”

“ம்,” என்றார். முதுமை தட்டிக் கொண்டிருக்கும் அந்த முகத்தின் வெட்கம் பார்க்க அசாதாரணமாக இருந்தது.

“உங்களுக்கு பேரன்ட்ஸ் இல்லையா டீச்சர்?” என்றேன்.

“இல்லம்மா. அப்பா சின்ன வயசிலேயே காலமாகிட்டார். அம்மா தான் எங்களை வளர்த்தது. ரெண்டு வருஷம் முன்னாடி அவளும் போய்ச் சேர்ந்துட்டா. எனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்காமல் போகிறோமே என்ற ஒரே குறை தான் அவளுக்கு. அவளும் தான் என்ன செய்வாள் பாவம்? வெறுங்கையில் முழம் போட முடியாதில்லையா?”

மனம் கனத்தது. “எங்கள் வீடு பக்கத்தில் தான் இருக்கிறது டீச்சர். நீங்க வந்து ஒரு வாய் காபி சாப்பிட்டு விட்டுப் போனால் எனக்குச் சந்தோஷம். ப்ளீஸ்!” என்றேன்.

•••

தயக்கமாக வீட்டினுள் நுழைந்தார். கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து விட்டு “எத்தனை வயது?” என்றார்.

“ரெண்டு வயசு ஆகுது டீச்சர். ரெண்டு பேருமே வேலைக்குப் போவதால் இவளைப் பார்த்துக்கச் சரியான ஆள் இல்லை. ரெண்டு பேரும் மாறி, மாறி லீவ் போடுவது, எத்தனை நாளைக்குச் சரி வரும்? இந்த அழகில் இப்போது ரெண்டாவது குழந்தை!” என்று சொல்லி விட்டுத் தலையைக் குனிந்து கொண்டேன். அதற்குள் வேலைக்காரம்மா ஜுஸ் கொண்டு வந்து கொடுத்தார்.

“கஷ்டம் தான். ஆனால் எதற்காகவும் வேலையை மட்டும் விட்டு விடாதே மீனா. நம் கையில் நாலு காசு இருக்க வேண்டியது அவசியம்,” என்றார்.

“வேறே என்ன‌ செய்யறதுன்னு தெரியல டீச்சர்? எதிர்பாராமல் நேர்ந்து விட்டது. டாக்டர் அபார்ஷன் ஸ்டேஜ் தாண்டி விட்டது என்கிறார். ஒரே குழப்பமாய் இருக்கு,” என்றேன்.

“அச்சோ; அபார்ஷன் எல்லாம் வேண்டாம்மா. அது தப்பு!” என்றார்.

“எனக்கும் புரியுது டீச்சர். ஆனால் வேறு வழி என்ன என்று தான் தெரியவில்லை,” என்றேன்.

கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். பிறகு மெதுவான குரலில், “உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நான் வேண்டுமானால் உங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ளட்டுமா? இந்தக் குழந்தையையும் பிறக்கப்போகிற குழந்தையையும்! அதோடு சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற வீட்டு வேலைகளையும் செய்வேன். இரண்டு வேளை உணவு, தங்க இடம் கொடுத்தால் போதும். ப்ளீஸ்,” என்றார்.

அதிர்ந்து போனேன். என் மன சிம்மாசனத்தில் ஒரு தேவதையாக இருக்கும் இவரையா, என் வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வது? அப்படியொரு நிலையில் அவரை நினைத்தும் பார்க்க முடியவில்லை.

“அவர் தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறாரே‌ டீச்சர்,” என்றேன்.

“சொல்லியிருக்கிறார் தான். ஆனால் எனக்கு வயது நாற்பதைத் தாண்டி விட்டது. இனி கல்யாணம் தேவையா என்று இருக்கு.”

“அவருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலையா டீச்சர்?” என்றேன்.

“தெரியாது மா,” என்றார்,

“தெரியாதா!”

“ஆமாம். தெரியாது. கேட்கவில்லை. கேட்டால் என்ன பதில் வருமோ என்று பயம்..”

“புரியலே டீச்சர்?”

“அவர் என்னை விடப் பெரியவர். இந்த வயதில் நிச்சயம் கல்யாணம் ஆகியிருக்கும். ஆகியிருக்க வேண்டும். நான் கேட்டு “ஆமாம் ஆயிடுச்சு,” என்று அவர் சொன்னால், அதன் பிறகும் அவரோடு நான் பழகுவது சரியாக இருக்குமா? எனவே தான் அந்தக் கேள்வியைக் கேட்கவே தயங்கிக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

‘ஐயோ பாவமே,’ – என்றிருந்தது.

“அது இருக்கட்டும். நான் கேட்டதற்கு நீங்கள் பதிலே சொல்லவில்லையே. நான் வேண்டாமா உங்களுக்கு?” என்றார்.

அதற்குள் மனம் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தது.
“வேண்டும் டீச்சர். ஆனால் நீங்கள் நினைப்பது போல் அல்ல. வேறு மாதிரி!” என்றேன்.

“எப்படி?” என்றார்.

“எங்கள் வீட்டில் பெரியவர்கள் என்று சொல்லிக்கொள்ள, யாரும் உயிரோடு இல்லை. எங்களையும், எங்கள் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளவும், எங்கள் குடும்பத்தை வழி நடத்தவும், காட்-மதர் போன்ற ஒருவரைத்தான் நாங்கள் இப்போது தேடிக் கொண்டிருக்கிறோம். அது நீங்களாக இருந்தால் ரொம்ப சந்தோஷம்!” என்றேன்.

புரியாமல் என்னைப் பார்த்தார். “நிஜமாகத்தான் சொல்கிறேன் டீச்சர். எனக்கு நீங்கள் அக்கா. என் குழந்தைகளுக்குப் பெரியம்மா. எங்கள் குடும்பத்துக்கு காட்-மதர்! சம்மதம் என்றால் சொல்லுங்கள். இப்பொழுதே போய் உங்கள் வீட்டைக் காலி செய்து கொண்டு வந்து விடலாம்!” என்றேன். விரிந்த விழிகளோடு என்னைப் பார்த்தார். “நிஜமாகவா சொல்கிறாய்மா?”

“நிஜமாக டீச்சர்! வீட்டு வேலை, சமையலுக்கு எல்லாம் ஏற்கெனவே ஆள் இருக்கிறது. நீங்கள் எங்களுடன் தங்கியிருந்து எங்கள் குடும்பத்தை நிர்வகித்தால் போதும்! வாழ்நாள் பூரா நாங்கள் உங்களை ஒரு தேவதையைப்போலப் பார்த்துக் கொள்வோம்! சரியா?” என்றேன்.

நெகிழ்ந்து போய் என் கைகளைப் பற்றிக் கொண்டார்.
அந்தப் பற்றில் எங்கள் அத்தனை பேரின் பிரச்சினைகளும் தீர்ந்தது தெரிந்தது.

பானுமதி கண்ணன்
திருமதி பானுமதி கண்ணன் ஐஓபியில் பணி புரிந்து ஓய்வு கிடைத்த பின்னர், இதுவரை ஏறத்தாழ 100 சிறுகதைகள், ஒரு நாவல் மற்றும் 5 குறுநாவல்கள் படைத்துள்ளார். கணையாழி, விகடன், கல்கி, குங்குமம், குமுதம், தாய், சாவி இதழ்களில் இவருடைய சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. மங்கையர் மலர், ஓம் சக்தி, பனிப்பூக்கள் (Minnesota, United States) இதழ்களில் இவருடைய சிறுகதைகள் முதல் பரிசுகளும், கண்மணி குறுநாவல் போட்டியில் முதல் பரிசும் பெற்றுள்ளன. உரத்த சிந்தனை, இராய செல்லப்பாவின் ஸ்வர்ணாம்பாள் உள்ளிட்ட பல சிறுகதை போட்டிகளிலும் இவருக்கு பரிசுகள் கிடைத்துள்ளன. எழுதுவது என்பது இவருக்கு மிகவும் பிடித்தமானது.
WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் குழுவினர் சார்பாக வெளியிடப்பட்ட “பேரன்பின் சுகந்தம்” என்ற முதலாவது சிறுகதை தொகுப்பில் இவர் எழுதிய “பிரேமா அக்கா” என்ற சிறுகதை இடம் பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன