
அழகியசிங்கர் மாதாந்திர இலக்கியக் கூட்டம் ஒன்று. தி நகர் அலமேலு மங்கா கல்யாண மண்டபத்தில் நடந்தது. முப்பது பேருக்குக் குறைவில்லை. ஜெயகாந்தன் பற்றிய இலக்கியக் கூட்டம். அசோகமித்திரன் மேடையில், நான் மற்றும் இந்தியன் வங்கியில் பணிபுரியும் பெண் எழுத்தாளர் (?ஓவியர்), அழகியசிங்கர், அவரது நண்பர் கோவிந்தராஜன். நான் முதன்முதலில் மேடையேறிய இலக்கியக் கூட்டம். விஷயம் அதுவல்ல.
கூட்டத்திற்கு வந்திருந்த யாரையும் எனக்குத் தெரியவில்லை, யாருக்கும் என்னையும் தெரியாது! கூட்டம் தொடங்கும் முன் தன் கைபேசியில் மண்டபத்திலிருந்த படங்களைப் போட்டொ எடுத்துக்கொண்டிருந்தார், எழுத்தாளர் இரா.முருகன் – அவரைப் பற்றியோ, அவரது படைப்புகள் பற்றியோ, இன்னும் சொல்லப்போனால் அவ்ர்தான் இரா.முருகன் என்பதைக் கூட நான் அறிந்திருக்கவில்லை. அதுதான் நான் அவரை முதன் முதலாகப் பார்த்தது! அமைதியாக இருந்தார்.
பின்னர் அவரது படைப்புகள் மூலம் (தியூப்ளே வீதி, அவரது குறுநாவல்கள், மந்திரவாதியும், தபால் அட்டைகளும் (சிறுகதைகள்),அச்சுதம் கேசவம், இன்ன பிற…) அவரைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்துகொண்டேன். சுஜாதாவின் பாதிப்பு அவர் எழுத்துக்களில் தெரியும் – பின்னாளில், சாகித்திய அகாதமிக்காக சுஜாதாவைப் பற்றி ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ எழுதியவர்.
மும்பையிலிருந்து என் வீட்டிற்கு வந்த அனுராதா கிருஷ்ணசாமி அவர்களுடன், அசோக் நகரில் இருந்த இரா.முருகன் வீட்டிற்குச் சென்றேன் – முதல் சந்திப்பு. மிகக் குறைவான வார்த்தைகளுடன் பேச்சு (எழுதும்போது எப்படி இவ்வளவு வார்த்தைகள் – ஒவ்வொரு நாவலும் 500, 600 பக்கங்களுக்குக் குறையாமல்!), நடுநடுவே இழையோடும் மெல்லிய நகைச்சுவை, முகநூல், அவரது கதைகள், நாவல்கள், அனுராதா அவர்களின் மொழிபெயர்ப்பு என சுவாரஸ்யமான உரையாடல்! எனக்கும் என் மனைவிக்கும் (அவரும் வந்திருந்தார்) சேர்த்து வாழ்த்துடன், கையெழுத்திட்டு அவர் அளித்த புத்தகம், “நண்டு மரம்’ (சிறுகதைகள்). வருடம் 2019.
பின்னர் பல கூட்டங்களில் சின்னச் சின்ன உரையாடல்கள். அவர் வீட்டு பால்கனியிலிருந்து காணும் காட்சிகள், மழை, குடை என முகநூலில் அவ்வப்போது எழுதும் குட்டிக் கவிதைகளின் ரசிகனாகிப் போனேன் நான். என் சிறுகதையோ, முகநூல் பதிவோ பிடித்திருந்தால், உடனே போன் செய்து பாராட்டுவார். 2021 ல் ராமோஜியம் நாவலைக் கொடுத்தார், ‘அன்பு நண்பருக்கு, நட்புடனும் பிரியத்துடனும்’ என்று எழுதியிருந்தார். அத்தனை வார்த்தைகளும் உண்மை என நான் மகிழ்ந்த நேரம் அது.
அவரது ‘வைக்கோல் கிராமம்’ கதையை வாசித்து, விமர்சித்தபோது, (மாய யதார்த்தம் வகையில் சோதனை முயற்சியாக எழுதப்பட்ட சிறுகதை), பாராட்டினார். சைக்கிள் முனி, பானை, ஊமைப்பாட்டி… சொல்லிக்கொண்டே போகலாம்.
லேடீஸ் ஸ்பெஷலில் தொடராக வந்த என் “இலக்கிய முத்துக்கள் இருபது” நூலுக்கு அவர் பாணியில் ஒரு அணிந்துரை எழுதிக்கொடுத்தார். அதில், “எழுத்திலும், கணினித்துறையில் என் காலத்தைத் திட்டமிடுவதிலும் எனக்கு வழிகாட்டியாக, குருவாக இருந்த மறக்க முடியாத ஆளுமை அவர் (சுஜாதா). ‘சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா, சுஜாதா பெயரை’ என்று எனக்குப் பாட வந்தால் பாடுவேன். சுஜாதா பற்றி நேர்த்தியான எழுத்துக் கச்சேரி நிகழ்த்தியிருக்கிறார் டாக்டர் பாஸ்கரன் இந்த நூலில்” என்று எழுத, எவ்வளவு பெரிய மனம் வேண்டும் என்று இன்றும் வியந்துகொண்டிருக்கிறேன்.
மார்கழி சீசனில் எல்லா நாட்களிலும் இசைக் கச்சேரிகளுக்குச் செல்வதும், விமர்சனங்கள் எழுதுவதும் முருகன் அவர்களுக்குப் பிடித்தமானவை. அவரது படைப்புகளில் இந்த இசை ஞானம் சுருதி பேதமின்றி ஆங்காங்கே ஒலிப்பதை ரசிக்கலாம் – ரசித்திருக்கிறேன்.
ராயர் காப்பி கிளப் – கட்டுரைத் தொகுப்பை வாசித்து, (A classic of one of its kind) அவரிடம் சில கட்டுரைகளைப் பற்றிப் போனில் பேசி மகிழ்ந்தபோது (புதியதாக ஓர் இலவசப் பத்திரிகை, ஜெயகாந்தனை முன் வைத்து, தி இந்து வாரம், பேட்டை செய்தித்தாள்கள், பி.ஏ.கிருஷ்ண ஜெயந்தி நினைவிலிருக்கும் சில சுவாரஸ்யமான கட்டுரைகள்), ‘புத்தகக் கண்காட்சியில் (2025) தேடிப் பிடித்து வாங்கினேன்’ என்றேன். அவருக்கே உரிய ஒரு சன்னமான சிரிப்புடன், “நானே கொடுத்திருப்பேனே, ஏன் வாங்கினீர்கள்?” என்றார். “நன்றி சார். நிச்சயம் வருகிறேன், அந்தப் புத்தகத்தில் உங்கள் சிக்னேசர் பதித்துக்கொள்ள” என்றேன் – இனி எப்போது, எங்கு போய் அவரிடம் கையெழுத்தை வாங்குவேன்?
ஆறு மாதமாக அவரைச் சந்திக்க நினைத்து, நேரமின்மை மற்றும் பல காரணங்களால் முடியாமல் போயிற்று. கண்ணாடிப் பேழையில் பார்த்த போது என்னை நொந்துகொள்வதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
போய் வாருங்கள் முருகன் – உங்கள் படைப்புகள் உருவில் நீங்கள் என்றும் எங்களுடன் இருப்பீர்கள்.
