அழகியசிங்கர்/சில நினைவுகள்

நேற்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக முகநூல் மூலம் இரா. முருகன் காலமான செய்தி தெரிந்தது. அதிர்ச்சி அடைந்தேன். இரா. முருகனுக்கும் எனக்குமான நட்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
முதன்முதலாக இரா. முருகனின் கவிதையைத்தான் ‘ழ’ பத்திரிகையில் படித்தேன். அவர் அற்புதமாகக் கவிதை எழுதும் வல்லமை பெற்றவர். ஆனால், அவர் கவிதை எழுதுவதை ஓரளவுக்குத் தொடராமல் விட்டுவிட்டார்.
ஆனால், ஆயிரம் பக்கங்களுக்கு நாவல் எழுதக்கூடியவர். அவருடைய நாவலின் பெயர் ‘விஸ்வரூபம்’. ஐராவதம் என்ற என் நண்பர் அந்த நாவலை வாங்கிவரச் சொன்னார். கிழக்குப் பதிப்பகத்திற்குச் சென்று அந்த நாவலை வாங்கிக்கொண்டு வந்தேன்.
ஐராவதம் ஒரு வாரமாகத் தொடர்ந்து அந்த நாவலைப் படித்து முடித்தார். அந்த நாவலைப் பக்கம் பக்கமாகப் படித்து, பல இடங்களில் கோடிட்டு ரசித்தார். நான் அவரைப் பார்க்கும்போது, அவர் ரசித்த பகுதிகளை எனக்கும் படித்துக் காட்டுவார். ஐராவதம் இறந்த பிறகு, இரா. முருகனின் புத்தகம் என்னிடம் வந்தது. பல பக்கங்களில் கோடுகள் போட்டதோடு மட்டுமல்லாமல், தன் கருத்துகளையும் பதிவு செய்திருந்தார் ஐராவதம்.
இரா. முருகனிடம் இந்தக் கருத்தைச் சொன்னபோது, அந்தப் புத்தகம் தனக்குக் கிடைக்குமா என்று கேட்டார். “நான் கொண்டுவந்து கொடுக்கிறேன். எனக்கு அதற்குப் பதிலாக வேறு புத்தகம் கொடுக்க வேண்டும்” என்றேன். இரா. முருகனைப் பார்த்து, ஐராவதம் படித்த புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வேறு புத்தகம் வாங்கிக்கொண்டேன்.
ஐராவதத்தைப் பொறுத்தவரை, இரா. முருகன் சிறந்த எழுத்தாளர். அப்போதிருந்த ஒரு பிரபலமான எழுத்தாளரைக் குறிப்பிட்டு, அவரைவிட இரா. முருகனின் எழுத்து பிரமாதம் என்று அடிக்கடி குறிப்பிடுவார். இரா. முருகனைப் பார்க்க வேண்டுமென்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தார் ஐராவதம். அந்தச் சந்திப்பு என்னவோ நிகழவில்லை. அதற்குள் ஐராவதம் இறந்துவிட்டார்.
போன ஆண்டு இரா. முருகன் தன் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டுமென்று விரும்பினார். விருட்சம் வெளியீடாக அந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்தேன். 180 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை ரூ. 200 மட்டுமே. அந்தப் புத்தகத்தை அச்சடித்து, அவரிடம் நேரடியாகக் கொண்டுபோய்க் கொடுத்தேன்.
மோதிலால் தெருவில் உள்ள அவருடைய பிளாட்டில், ஒரு பையனின் உதவியுடன் இருந்தார். உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர் ஒரு உதவியாளரை 24 மணி நேரமும் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டிருந்தார். நான் புத்தகத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தபோது அவருக்கு மிக்க மகிழ்ச்சி. அன்று அவரைப் பேட்டி கண்டேன்.

அவருடைய கவிதைப் புத்தகத்தில் ஒரு கவிதை:

நல்ல கவிதை

தன்னைத்தானே எழுதிக் கொள்ளுமென்றார்கள்
எழுதிக் கொண்டது

நல்ல சிறுகதை
தன்னைத்தானே எழுதிக் கொள்ளுமென்றார்கள்
எழுதிக் கொண்டது

நல்ல நாவல்
தன்னைத்தானே எழுதிக் கொள்ளுமென்றார்கள்
எழுதிக் கொண்டது

மர பெஞ்சில் பொறுமையாக
உட்கார்ந்திருக்கிறேன்
பெயர் வைக்க

எழுத என்ன இருக்கு?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன